குத்பிய்யத் #kuthubiyyath
ஷைஃகுல் ஹதீஸ் AEM அப்துற் றஹ்மான் மிஸ்பாஹீ ஹழ்ரத்தும், அல்லாமா SS ஹழ்ரத்தின் குத்பியத்தும்:
______________________________________________
திருக்குர்ஆன் ஷரீஃபிற்கு தமிழில் முதன் முதலாக விளக்கவுரை எழுதிய உத்தமபாளையம் சங்கைக்குரிய மாமேதை ஷைகுனா அல்லாமா S.S. அப்துல் காதிர் பாகவீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் எந்த கலையையும் தங்களது எழுத்து துறையால் தொடாமல் இல்லை.
அனைத்து துறையிலும் திருக்குர்ஆன் ஷரீஃபிற்கு மற்றும் திருநபி மொழிக்கு விளக்கவுரைகள் ஃபிக்ஹு, தஸவ்வுஃப், தாரீஹ், லுகத் என அனைத்திலும் தங்களது பொன் எழுத்துக்களால் தடம் பதித்துள்ளார்கள்.
சென்ற (ரபீவுல் ஆகிர் பிறை 07 இரவு 12/11/2021) மறைந்த A.E.M ஷைகுல் ஹதீஸ் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் S.S.அப்துல் காதிர் பாகவீ ஹஜ்ரத் கிப்லா அவர்களிடம்,
"நாங்கள் பாட நடத்தும் முன்பு நடத்துகின்ற நூலை நன்றாக பார்த்து விட்டு தான் வந்து நடத்துவோம். பல வருடங்கள் நடத்திய கிரந்தங்களாக இருந்தாலும் கூட. இவ்வாறு இருக்க தாங்கள் எழுதுவதற்கு உண்டான நேரம் கிடைத்து விட்டால் காக்கிபைக்குள் அரபி,ஃபார்ஸி, ஆங்கில என ஏதாவது மூல கிதாபை வைத்துக் கொண்டு மோலோட்டமாக கூட பார்க்காமல் தாய்மொழியை பார்த்து எழுதுவது போல் எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள். இதன் இரகசியம் என்ன?" என்று பல முறை கேட்டு இருக்கிறார்கள்.
ஒரு தடவை மேற்கண்ட கேள்வியை கேட்கும் போது, நீ விடாப்பிடியான ஆளப்பா நான் மரணிக்கும் வரை யாரிடமும் இதன் இரகசியத்தை சொல்லக் கூடாது என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டு கீழ் வருகின்ற நிகழ்வை கூறினார்கள்:
▶️ "நான் பாக்கியாத்தில் ஓதும் போது கடைசி வருடம் ஏழாம் ஜும்ரா ஓதும் போது அஸர் மற்றும் மஃரிப் நேரத்திற்கு மத்தியில் ரூமை தாழிட்டுக் கொண்டு
يَا غَوْثُ يَا شَيْخُ عَبْدُ الْقَادِرِ جِيْلاَنِيْ
யா கௌவ்சு யா ஷைக் அப்துல் காதிர் ஜீலானீ ஷைஅன் லில்லாஹ் என்ற குத்பிய்யாவை ஆயிரம் விடுத்தம் கூறி கௌசுல் அஃழமை அழைப்பது என் வழக்கமாகும்.
ஒரு முறை அவ்வாறு அழைக்கும் போது ஒரு ஒளிமயம் காட்சியளித்தது. சங்கைக்குரிய ஷைகுனா வ முர்ஷிதுனா வ முரப்பீனா கௌசுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹாஜிராகி (நேரில்) காட்சி தந்தார்கள்.
என்னைப் பார்த்து "உமக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்கள்.
நான் "யா சைய்யிதீ தங்களைப் பார்ப்பதே எனக்கு பெரும் பாக்கியமாகும். இருந்தாலும், தாங்கள் கேட்டு நான் கேட்கவில்லை என்றால் கண்ணியக்குறைவாக ஆகிவிடும். நான் இந்த உம்மத்திற்கு நல்லது செய்யனும். அதற்கு ஏதாவது தாருங்கள்" என்று கூறினேன். உடனே ஒரு பேனாவை கொடுத்தார்கள். அதைப் பெற்றுக் கொண்டேன்.
இச்சம்பவத்தை கூறிய பின் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹீ ஹஜ்ரத் கிப்லா அவர்களைப் பார்த்து S.S.M ஹஜ்ரத் கிப்லா கூறினார்கள்:
மௌலவி ஸாஹிப்! நீங்கள் இது பற்றி என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை சுமார் ஐம்பது ஆண்டுகளாக நான் எந்த கிதாபை எடுத்து விரித்தாலும், அங்கே எனக்கு தெரிவது அதன் தமிழ் மொழிபெயர்ப்பு வாசகம் மாத்திரம் தான். உருதுக் கிதாபைத் திறந்தால் அப்படி. அரபுக் கிதாபைத் திறந்தால் அங்கேயும் அப்படி. ஆங்கிலப் புத்தகத்தைத் திறந்தாலும் அங்கேயும் அப்படி. இது தான் குத்பிய்யத்தின் மகோன்மியம்!
அல்ஹம்துலில்லாஹ்.
📚 மேற்கண்ட தகவலை சங்கைக்குரிய மாமேதை மௌலானா NSN.அப்துல் காதிர் ஃபைஜீ பாகவீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் எழுதிய "சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சுப்ஹான மௌலிது" என்ற நூலில் சமீபத்தில் நம்மை விட்டு மறைந்த ஷைகுல் ஹதீஸ் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் அல்லாமா SS ஹஜ்ரத் கிப்லா அவர்களிடம் கேட்டதாக பதிவு செய்துள்ளார்கள் என்ற தகவலை நேற்று (21/11/2021) சேலத்தில் நிகழ்ந்த மீலாது விழா மற்றும் கௌசுல் அஃழம் நினைவு விழாவில் சங்கைக்குரிய மௌலானா ஹாஃபிழ் முஹம்மது சுல்தான் அன்வாரீ பாகவீ ஹஜ்ரத் அவர்கள் மேற்கண்ட நூலை காண்பித்தும் மேலும் நேரடியாக ஷைகுல் ஹதீஸ் ஹஜ்ரத் கிப்லா அவர்களிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டதாகவும், மேலும் அல்லாமா SS ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தங்களது டைரியில் எழுதி வைத்துள்ளதை நேரில் பார்த்ததாகவும் பதிவு செய்துள்ளார்கள்.
✒️ வெளியீடு:
"நூருல் மஜீத் வெளியீட்டகம்"
இப்னு ஹாஜா இர்ஷாதீ
லால்பேட்டை.
16/ரபீவுல் ஆகிர்/1443
22/11/2021
கருத்துகள்
கருத்துரையிடுக