சாஹிபு சாமி தர்ஹா
"சாஹிபு சாமி தர்ஹா"..
~~~~~~~~~~~~. ~~~~~~~~~
சாஹிபு எப்போது சாமியானார்..? அல்லது சாமி எப்போது சாஹிப் ஆனது..?
ஆச்சரியமாக இருக்கிறதா..?
மாற்று மத சகோதரர்கள் தங்களின் கண்களுக்கு தெரிந்த கடவுளுக்கு பெயர் வைத்து அழைப்பது போல் கண்களுக்கு தெரியாத அல்லாஹ்வையும் நம்பிக்கையோடு "அல்லா சாமி" என்று அழைப்பதுண்டு.
அதுபோலத்தான் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தெற்கு விஜய நாராயணம் என்கிற ஊரில் "செய்யது முஹம்மது மலுக்கு மேத்தப் பிள்ளை அப்பா தர்ஹா " என்று ஓர் தர்ஹா இருக்கிறது. அந்த தர்ஹாவில் அடங்கப்பட்டிருக்கும் இறைநேசரைதான் அதன் சுற்றுப்பகுதி இந்து மக்கள் "சாஹிபு சாமி" என்று பக்தியோடும், பரவசத்தோடும் அழைக்கிறார்கள்.
"சாஹிபு சாமி" என்று அழைக்கப்படுகிற அந்த இறைநேசரும் , அவர்கள் அடங்க பட்டிருக்கிற தர்ஹாவின் வரலாற்றுப் பின்னணியும் ஆச்சரியமானது. அற்புதமானது.
சுமார் 300 வருடங்களுக்கு முன்னால் இந்த தெற்கு விஜய நாராயணம் என்கிற ஊரையும் , அதன் சுற்றுப் பகுதிகளையும் ஒரு குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அந்த ஊர் தேவர்கள் நிறைந்து வாழ்கிற ஊர். அவர்களின் பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால் இந்த குறுநில மன்னன் வயதுக்கு வந்த. அந்த பெண் பிள்ளைகளை தூக்கிச்சென்று தன் அரண்மனையில் ஒரு வாரம் வைத்திருந்து நாசப்படுத்தி அனுப்புவது அவனின் கொடூர பழக்கங்களில் ஒன்று. மன்னனுக்கும், மன்னனின் படை பட்டாளங்களுக்கும் பயந்து அவனை எதிர்த்து கேட்பதற்கோ, போராடுவதற்கோ அங்கு யாருக்கும் தைரியமில்லை.
இந்நிலையில் அங்கு "செய்யது முஹம்மது மலுக்கு மேத்தப் பிள்ளை அப்பா" என்கிற ஓர் இறைநேச செல்வர் வருகை தருகிறார்கள். அவர்களின் சூஃபித்தனமான தோற்றத்தை கண்டு தங்கள் பிரச்சனையை கூறி "எப்படியாவது தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் வேண்டி நிற்கிறார்கள்".
"இந்த முறை அந்த குறுநில மன்னனும் அவன் பரிவாரங்களும் வரும்போது நான் பார்த்துக்கொள்கிறேன்".. என்று "மேத்தப்பிள்ளை அப்பா" அவர்கள் வாக்கு கொடுக்கிறார்கள்.
அதேபோன்று அவன் தன் பரிவாரத்தோடு மறுபடியும் அந்த ஊருக்கு தவறான எண்ணத்தோடு வருகிறான்.
மேத்தப்பிள்ளை அப்பா அவர்கள் தனி ஆளாக வாளெடுத்து அவனை எதிர்த்து போரிடுகிறார்கள். அல்லாஹ்வின் உதவிகொண்டு சில அற்புதங்கள் அங்கு நிகழ்கிறது. அந்தக் குறுநில மன்னன் வெட்டி வீழ்த்த படுகிறான். படைகள் சிதறி போகின்றன.
குறுநில மன்னன் கொலை செய்யப்பட்ட செய்தி மற்ற மன்னர்களுக்கும் பரவுகிறது. அவர்கள் நயவஞ்சகமாக மேத்தப்பிள்ளை அப்பா அவர்களை ஷஹீத் ஆக்கிவிடுகிறார்கள்.
தங்களுக்காக உயிரைவிட்ட மேத்தப்பிள்ளை அப்பா அவர்களின் கப்ரை சுற்றி தேவர்கள் அழகிய தர்ஹாவை எழுப்பி இருக்கிறார்கள். அதுவே
இன்று 240 வருடங்களை கடந்து திருநெல்வேலி மாவட்டத்தின் நான்குநேரி அருகேயுள்ள தெற்கு விஜயநாராயணம் என்கிற ஊரில் மதநல்லிணக்க நினைவுச்சின்னமாக அமைந்திருக்கிறது.
இன்றைக்கும் மேத்தப்பிள்ளை அப்பா அவர்கள் தங்களை எல்லாவித ஆபத்துக்களில் இருந்தும் காத்துக் கொண்டிருப்பதாக அங்கு வசிக்கும் தேவர்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கும் இக்கிராமத்தில் முஸ்லிம்கள் கிடையாது.
சுமார் 240 ஆண்டுகளாக தேவர்களின் வம்சாவழியினரே அந்த தர்ஹாவை பராமரித்து வருகின்றனர்.
பொதுவாகவே தர்ஹாக்களின் கந்தூரி விழா பிறையை கணக்கிட்டு நடத்தப்படும். ஆனால் இங்கோ வருடம் தோறும் ஆடி மாதம் 16ஆம் தேதி தேவர்கள் முன்நின்று இந்த அப்பாவின் கந்தூரி விழாவை மிக விமர்சையாக நடத்துகின்றனர்.
அதன் சுற்றுப்பகுதியில் இருந்து முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தவர்கள் என ஆயிரக்கணக்கில் இந்த கந்தூரி விழாவில் ஒன்று கூடுகிறார்கள்.
கந்தூரி விழாவிற்கு வருகை தருகிற முஸ்லிம்களை தேவர்கள் தங்கள் தங்களுடைய வீடுகளிலேயே கந்தூரி விழா முடியும் வரை விருந்தினரை போன்று தங்க வைத்து கண்ணியப்படுத்தி அனுப்பி வைக்கிறார்கள்.
தன் குழந்தைகளுக்கு "மேத்தப்பாண்டியன், மேத்தா" என்று அந்த இறை நேசரின் பெயரையும் சேர்த்தே வைக்கின்ற பழக்கம் இன்றைக்கும் அங்குள்ள தேவர்களிடம் உண்டு.
நாட்டின் மத நல்லிணக்கத்தின் அடையாளங்களாக இன்றைக்கு இதுபோன்ற இறைநேசர்களின் தர்ஹாக்கள் தமிழகத்தில் நிறைய இருந்து கொண்டிருக்கின்றன.
அதிலும் விஜய நாராயணத்தில் மறைந்து வாசம் செய்யும் "செய்யது முஹம்மது மலுக்கு மேத்தப் பிள்ளை அப்பா" (ரஹ்) அவர்கள் அங்கு மதங்களைக் கடந்து எல்லோராலும் இன்றைக்கும் நேசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
கருத்துகள்
கருத்துரையிடுக