நேர்வழியில் நிலைத்திருப்போம்!*
28.01.2022* ஜும்மா உரை
*நேர்வழியில் நிலைத்திருப்போம்!*
மனிதவாழ்வின் மிகவும் மகத்தான அருட்கொடை ஹிதாயத் எனப்படும் நேர்வழியாகும்;உள்ளங்கள் நேர்வழி பெறுதல் நமது கரங்களில் இல்லை;நேர்வழியை இறைவன் தான் நாடியவர்களுக்கே வழங்குகிறான்.
திருமறைக் குர்ஆனின் பின்வரும் பல்வேறு இறைவசனங்கள் இந்த செய்தியை தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன.
அல்லாஹ் ஓரிடத்தில் இவ்வாறு கூறுகிறான்;
فَرِيْقًا هَدٰى وَ فَرِيْقًا حَقَّ عَلَيْهِمُ الضَّلٰلَةُ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ
ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது; ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
(அல்குர்ஆன் : 7:30)
மற்றொரு இடத்தில்..
ذٰلِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.
(அல்குர்ஆன் : 6:88)
பிரிதொரு இடத்தில்..
مَنْ يَّشَاِ اللّٰهُ يُضْلِلْهُ وَمَنْ يَّشَاْ يَجْعَلْهُ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
அல்லாஹ் தான் நாடியவர்களைத தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
(அல்குர்ஆன் : 6:39)
யார் அல்லாஹ்வின் மூலம் நேர்வழி பெற்றுக் கொண்டார்களோ அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள்;யார் வழிகெட்டு போனார்களோ அவர்கள் மிகப் பெரும் நஷ்டவாளிகள் என்பதையும் ஒரு இறைவசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
(அல்குர்ஆன் - 6:39)
நேர்வழி விஷயத்தில் எப்போதும் இறைவனது உதவியை எதிர்பார்த்திருக்க வேண்டும்;நேர்வழியிலிருந்து வழி தவறச் செய்யும் ஷைத்தானுடைய வழிகெடுத்தல் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் வரலாற்றில் உண்டு.
*பல்அம் இப்னு பாஊரா*
நபி மூஸா (அலை) அவர்களது காலத்தில் வாழ்ந்த பல்அம் இப்னு பாஊரா என்பவர் மிகப் பிரபல்யமான துறவியாக இருந்தார்;வணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபாட்டுடன் இருந்தார்.
அவருக்கு அல்லாஹ் தனது மகத்தான பெயராகிய அல் இஸ்முல் அஃழம் என்பதை கற்றுக் கொடுத்திருந்தான்.
அந்தப் பெயர் கூறி பிரார்த்தித்தால் கேட்டது கிடைக்கும்; பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படுபவராக அவர் கேட்டு அல்லாஹ் எதையும் கொடுக்காமல் இருந்ததில்லை;அந்தளவிற்கு பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படுபவராக இருந்தார்.
வாழ்நாளில் அவர் செய்த எந்த துஆவும் மறுக்கப்பட்டதில்லை என்பதும்,இஸ்முல் அஃழம் எனும் அல்லாஹ்வின் விசேஷ திருநாமத்தை அறிந்திருப்பதும்,தவ்ராத் வேதம் முழுவதும் மனனம் செய்த நான்கு பேரில் ஒருவராக அவர் இருந்ததும் அவர் பெற்ற சிறப்புகளில் உள்ளதாகும்.
ஆனால் அவர் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரம் மற்றும் பகட்டின் பக்கம் சாய்ந்து அதன் இன்பங்களையும், சுகபோகங்களையும் எதிர்நோக்க ஆரம்பித்து பாவங்களில் குதித்தார்.
இறுதியில் நபி மூஸா (அலை) அவர்களுக்காகவும்,அவர்களுடன் இருந்தவர்களுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்ய எழுந்து நின்றார்.
இறுதியில் அகப் பார்வையை இழந்து அல்லாஹ்வுடைய அருளை விட்டும் தூரமாகி அழிவில் போய் விழுந்தார்;அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகள் அகற்றப்பட்டன;அவரது நாக்கு வெளியே தள்ளி நெஞ்சு வரை வந்து தொங்கியது;அல்லாஹ் அவருக்கு ஒரு அத்தாட்சியல்ல, பல அத்தாட்சிகளை வழங்கியதாக கூறுகின்றான்.
இந்தளவு தூரம் இறைநெருக்கம் பெற்ற ஒருவரை அல்லாஹ் ஈமானை பிடுங்கி சபித்த வார்த்தையை கவனியுங்கள்:
(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக் காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான். அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.
நாம் நாடியிருந்தால் நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்;அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று,அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்கவிடுகிறது;அல்லது அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கை தொங்கவிடுகிறது என்று கூறுகின்றான்.
பல்அம் நேரடியாக இணைவைப்பு, இறைமறுப்பு போன்ற காரியங்களில் ஈடுபடவில்லை;நபி மூஸா (அலை) அவர்களுக்கு எதிராக துஆவுக்காக கையேந்தினார் எனும் பாவமே அவரின் ஈமானிய இழப்புக்கு காரணமாகிவிட்டது.
இங்கே நாய்க்கு ஒப்பிட்டுக் கூறியதானது நாயானது உணவையும்,உடல் ஆசையையும் அடைவதில் மட்டுமே குறியாக இருக்கும்;நல்லறிவு, நல்வழி ஆகிய உயர்தளத்தை விட்டு வெளியேறி ஆசைகளை முன்னிறுத்தி மன விருப்பத்தைப் பின்பற்றி வாழ்பவன் ஏறத்தாழ நாயின் குணத்தைப் பெற்றவனாகின்றான்.
“நான் உங்கள் மீது மிகவும் அஞ்சுவது ஒரு (வகை) மனிதரைப் பற்றித்தான்;அவர் குர்ஆனை ஓதுவார்;அதன் பொலிவு அவரிடம் காணப்படும்;அவர் இஸ்லாத்துக்கு பக்க பலமாக இருப்பார்; (இந்நிலையில் அவரது பாவங்களின் காரணமாக) அல்லாஹ் அவரை தான் நாடியவாறு (வழிகேட்டின் பக்கமாக) மாற்றிவிடுவான்;அவரிடமிருந்து அந்தப் பொலிவு கழன்றுவிடும்;அவர் அதை தனது முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விடுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாக ஹுதைஃபா பின் அல் யமான் (ரழி) கூறுகிறார்.
(தஃப்ஸீர் இப்னு கஸீர்)
இது போன்ற வரலாறுகள் இறுதிவரை நேர்வழியில் நிலைத்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
நேர்வழியிலிருந்து நம்மை வழி பிறழச்செய்யும் பல்வேறு சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பது நேர்வழிக்குள்ள ஆபத்துகளாகும்.
இன்றைக்கு சமகால சூழ்நிலைகளும் கூட அப்படித்தான் உள்ளது;இஸ்லாத்தை பின்பற்றுவதிலும்,இஸ்லாத்தில் நிலை திருப்பதிலும் பல்வேறு சவால்களை நாம் எதிர் கொண்டிருக்கிறோம்;நம்மை வழி தவறச் செய்யும் தீய சக்திகள் எந்த வழியிலும்,எந்த தருணத்திலும் நம்மை நோக்கி வரலாம்;அந்த ஈமானை பாதுகாப்பதன் பின்னணியில் பல்வேறு சோதனைகளை,வேதனைகளை நாம் அனுபவிக்க நேரிடலாம்;அந்த நேரங்களெல்லாம் உறுதியான மனப்பான்மையோடு ஈமானில் நிலைத்திருப்பதற்கு இறைவனது அருள் மிகவும் அவசியமானது.
அதனால் தான் ஒவ்வொரு நேரத் தொழுகையிலும்..
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ
நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
(அல்குர்ஆன் : 1:6)
என்கின்ற பிரார்த்தனை வரிகளை ஓதுகிறோம்.
எனவே எப்போதும் நேர்வழியில் நிலைத்திருப்பதற்கான முயற்சிகளில் முழு கவனத்தோடு ஈடுபடவேண்டும்.
நேர்வழியில் நிலைத்திருப்பதற்கான வழிகள்;
*நேர்வழிக்காக துஆ*
ஹதீஸ் பகுத்ஸியில் அல்லாஹ் கூறுகிறான்;
يا عبادي! كلكم ضال إلا من هديته فاستهدوني أهدكم
என்னுடைய அடியார்களே!
நான் யாருக்கு நேர்வழியை அளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழிகெட்டவர்கள்; எனவே என்னிடம் நேர்வழியை கேளுங்கள்,நான் உங்களுக்கு நேர்வழியளிக்கிறேன்.
(முஸ்லிம்)
நபி(ஸல்)அவர்கள் கன்தக் யுத்த களத்தில் கூறிய வரிகள் இங்கே நினைவுகூரத்தக்கது;
اللَّهُمَّ لَوْلَا أَنْتَ مَا اهْتَدَيْنَا، وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَا
இறைவா!
நீ மட்டும் இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்; தானதர்மங்கள் செய்திருக்க மாட்டோம்; தொழுது இருக்க மாட்டோம்.
எனவே நேர்வழியில் நிலைத்திருப்பதற்கு பிரார்த்தனை மிகவும் அவசியமானது.
*நல்லோர்களின் தொடர்பு*
அல்லாஹ் கூறுகிறான்;
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يٰلَيْتَنِى اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا
அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு: “அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் கூறுவான்.
(அல்குர்ஆன் : 25:27)
يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا
“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”
(அல்குர்ஆன் : 25:28)
இந்த இரு வசனங்களும் தனது நட்பை மிக மோசமானவர்களுடன் ஆக்கிக் கொண்டவர்கள் எவ்வளவு கைசேதத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை தெளிவுபடுத்துகின்றது.
*இறுதியாக..*
ஹிதாயத்' எனும் நேர்வழியின் முக்கியத்துவத்தை அல்குர்ஆனை மையமாக வைத்து நாம் சிந்தித்தால் எவ்வளவோ படிப்பினைகளைப் பெறலாம்.
ஒரு நாட்டின் தலைவனோ,அரசனோ, பொறுப்பாளியாக இருந்தாலும் அவனுக்கு நேர்வழி கிடைக்காவிட்டால், அவனில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை ஃபிர்அவ்னின் சரித்திரம் நமக்கு தெளிவுபடுத்துகின்றது;
பனூ இஸ்ரவேலர்கள் அனைவரையும் பணியாட்களாகக் கொண்டு,முழு உலகையும் தனது ஆட்சி அதிகாரத்தின் கீழ் வைத்து செயல்பட்ட பிர்அவ்னுக்கு, நேர்வழி கிடைக்காததால் அவன் எந்தளவிற்கு சீரழிக்கப்பட்டான் என்ற சரித்திரம் நமக்கு குர்ஆனின் மூலம் விளக்கப்படுத்தப்படுகின்றது.
காரூன்,நூஹ் நபியின் மகன்,லூத் நபியின் மனைவி,முஹம்மது (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் என பலரும் பல்வேறு வாய்ப்புகளை பெற்றிருந்தும் ஈமானுக்கு பாக்கியம் பெறாதவர்களாக மாறிப்போனார்கள்.
அறிவு,அந்தஸ்து,அதிகாரம்,ஆட்சி,பணம், பட்டம்,பதவி,செல்வம்,செல்வாக்கு, தொழில் போன்ற எத்தகைய பாக்கியம் பெற்றவராக உலகில் இருந்தாலும், ஹிதாயத் எனும் பாக்கியம் கிடைக்காவிடில் அவனது வாழ்க்கை பிரயோஜனமற்றதென்பதை மேற்குறிப்பிட்ட வரலாறுகள் எமக்கு உணர்த்துகின்றன.
எனவே நேர்வழியில் நிலைத்திருக்க அயராத முயற்சிகளும்அல்லாஹ்வின் அருளும் அனுதினமும் தேவை என்பதை எப்போதும் நினைவில் நிறுத்த வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக