இருள் நீக்கும் அருள் விளக்கு கவிதை
*இருள் நீக்கும் அருள் விளக்கு*
نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين،
அதம் எனும் இருள் மறைத்து உஜூதின் ஒளி தந்தவனே!
ஆதி நபி ஜோதியிலே அனைத்துலகும் சமைத்தவனே!
இருள் படிந்த உளம் ஒளிர
அருள் வரங்கள் தாராயோ!
பொருள் செரிந்த கவி பாட
பெரு மழையாய் வாராயோ!
கவித்துவமும் இல்லை,
மொழித்திறனும் இல்லை
நபித்துவத்தின் நாயகரே
உம் மகத்துவமே எல்லை.
தங்கமே! திங்கள் முகமே!!
உம் அருள் வேண்டி உம்முள் நான் தஞ்சமே!!!
அணுவணுவாய் கமழ்ந்திலங்கும் அங்கமே!
தருவீர்;
உம் கொடைக்கேது பஞ்சமே!!
படைப்புக்கு அடையாளம் அவன் தந்தான்.
அந்த படைத்தவனின் அடையாளம் நீங்கள் தான்.
முதலவனின் முழு விலாசமே!
உங்கள் முகவரியை முன்னவனே சொல்லித் தந்தான்.
*قد جاءكم من الله نور*
அல்லாஹ்விடமிருந்து ஒரு பேரொளி உங்களை வந்தடைந்தது,
(سورة النور)
ஸூரத்துன் நூரில் உம்
(صورة)
ஸூரத்தையே சித்தரித்தான்.
தன் நூருக்கு உவமையாக
உம்மை அவன் காட்டித் தந்தான்
مثل نوره كمشكاة فيها مصباح
நீங்கள்
ஒரு மாடக்குழி, மறைபொருளாய்
இலங்கி நின்றீர்.
உம் உள்ளம் ஒரு திரு விளக்கு,
உம் நெஞ்சம் ஈமானும் ஹிக்மத்தும் சுடர் வீசும் அற்புதக் கண்ணாடி,
இப்றாஹீம் நபியெனும் வளம் நிறை பெருமரம் உம் சுடருக்கு எழிலூட்டுகிறது,
உமது நபித்துவத்திற்கு விளம்பரம் தேவையில்லை
அதன் பலன்களே உலகோருக்கு மாபெரும் அத்தாட்சி (ஸூரதுன் நூர்:35)
திருக்கலிமாவுக்கு ஆதாரமென்ன?
ஷிர்க் இருளில் மூழ்கியவன் வினா தொடுத்தான்.
நான் தான், என் ஒளிமய வாழ்வுதான் என பதில் கொடுத்தீர்.
فقد لبثت فيكم عمرا من قبلي
ஆம்
لا اله الا الله
வின் ஆதாரம்
محمد رسول
ஆகிய நீங்கள் தான்
உம் பேரொளிச் சுடர் வந்த வழித் தடங்களை என்னென்பேன்!
நூஹு நபி உம் நூரை சுமந்ததால், அல்லாஹ் அவர் ஊரையே கப்பலில் சுமந்தான்.
நபி இபுறாஹீமின் முதுகில் நீர் ஒளிர்ந்ததால்
நம்ரூதின் நெருப்பும் குளிர்ந்து நூர்ந்தது.
நபி இஸ்மாயீலை அறுத்திட கத்தி மறுத்தது,
நூறு சிவப்பு ஒட்டகைகள் உம் தந்தையை காக்க தம்முயிர் கொடுத்தன.
குர்பானியும் ஜம்ஜமும் உம் பேரொளிச் சிதறல்களன்றோ!
அன்னை ஆமினா (ரழியல்லாஹு அன்ஹா)
உமை கருவுற்ற போது, அவர் வீடு நபிமார் வாழ்த்தும் புண்ணிய பூங்காவனமானது.
சூரியனை "ஸிராஜன் வஹ்ஹாஜா" என்ற இறைவன்,
சுந்தரரே உமை "ஸிராஜம் முனீரா" என்றல்லவா சிலாகிக்கிறான்.
காரணம் சூரியன் சுட்டெரிக்கும்,
உம் சுடரொளிகள் சுகமளிக்கும்,
இடர் துடைக்கும்,
அருள் கொடுக்கும்,
உமை நினைக்கும் எவர்க்கும் இதம் கிடைக்கும்,
ஏகன் நிழலில் இடம் கிடைக்கும்.
பேரொளியே நீங்கள் அகற்றிய காரிருள் எண்ணற்றவை,
ஷிர்க் எனும் இருள்,
குஃப்ரு எனும் கூரிருள்,
ஆணாதிக்க இருள்,
அகந்தையிருள்,
ஆணவ இருள்,
மூட நம்பிக்கை எனும் மூர்க்கத்தன இருள் என அத்துணை இருள்களையும் விரட்டியடித்தீர்.
நீங்கள் சோக இருளகற்றிய அந்த அடிமையாய்
நானிருந்திருக்கக் கூடாதா?
*ஸெய்யிதுனா பிலால்* (ரழியல்லாஹு அன்ஹு)
தேகத்தின் கறுமையும் சோகத்தின் வெறுமையும் அவரை வாட்டிக் கொண்டிருந்தன.
அவருக்கு
குதிரை இலாயமே
புகலிடம்.
தன் உயிரை பொடித்து ஒட்டகைக்கு
தீனிஇடித்துக் கொண்டிருந்தார்...
இரவெல்லாம் ஒட்டகைக்கு தீனி இடிக்க,
பகலெல்லாம் ஒட்டகம் மேய்க்க,
இது தான் வாழ்க்கையென
சக்கரமாய் சுழன்றார்.
விடிந்தும் விடியாததொரு பகல் பொழுது.
உறங்கியும், உறங்காத விழிகள்.
கைகள் இடிக்கும் சப்தத்தில்
கண்கள் உறங்குகின்றன.
சூரியன் விழித்துவிட்டால்,
அவரது சுதந்திரம் இருண்டுவிடும்.
ஒரு நள்ளிரவு...
மாவிடித்து மாவிடித்து
உழைப்பின் களைப்பில்
உறங்கிப் போனார்.
அயர்ந்த இரவின் விளிம்பில்
அதிர்ந்து எழுந்தார்.
பகலவன் விழித்து விட்டால்...
பண்ணையார் வருவானே...
சாட்டைகள் கொண்டு வந்து,
சல்லடையாய்த் துளைப்பானே...
"தீனி எங்கேடா... - உனக்கு
தூக்கம் ஒரு கேடா?" என்பான்..
என் செய்வேன்.... என் செய்வேன்...
நன் செய்யும் நள்ளிரவே...
புண் செய்ய இன்று நீ
புறப்பட்டதேன்?.
ஓராயிரம் உஷ்ணங்கள்
ஒன்று கூடி பயமுறுத்த,
அவர்....
பதறியடித்து விழித்துப் பார்த்தார்.
பாய், தலையணையோடு
பத்திரமாய் படுத்திருந்தார்.
ஓர் ஓரமாய் ஒட்டகைத் தீனி
அடிமையை அமைதியோடு பார்த்தது.
அடிமைக்கோ சந்தோஷம்....
மன சாந்தத்தோடு,
புதிதாய் சந்தேகமும் பிறந்தது.
'உறங்கிப் போன இரவில்....
பணி நடந்ததெவ்வாறு?.
ஊர் உறங்கிய இரவில்...
ஊண் அயர்ந்த இருளில்...
மயங்கிப் போன கண்களோடு
நான் சரிய,
என் இரவுப் பணி இன்றே
சரியாய் செய்தது யார்?.'
பூதம் என்றே பயந்து போனார்.
மறுநாள் சங்கதியும்
அப்படித்தான் ஆனது.
இனி
மூன்றாம் நாள் இரவு...
அடிமை இன்று
உறுதி கொண்டார்.
"உறங்குவதாய் நடிப்போம்.
பூதம் வந்ததும் பிடிப்போம்"
நள்ளிரவு ஒரு மணி.
உலக்கை பிடித்த கையோடு...
உறங்கிப் போனதாய்
பாசாங்கு செய்தார் அடிமை.
இரவைக் கிழித்து வந்ததோர்
மண்ணகப் பேரொளி.
தூரத்திலிருந்து பார்த்தார்....
மழை மேகத்தின் மத்தியில்
மறைக்கப்படாத பௌர்ணமி போல
கலங்கமில்லாத முகத்தோடு
சுடர் வீசிக் கொண்டு
தொழுவம் புகுந்தார்.
அவர் இதயமெல்லாம் அடித்துக் கொண்டது.
அவருக்குள் அவரே கேட்டுக் கொண்டார்.
"அவர் யார்...? அவர் யார்...?
பார்வை பறிக்காத மின்னொளி போல...
விழி சிமிட்டாத விண்மீன் போல...
கண் கூசாத கதிரவன் போல...
நுரை கட்டாத பாலை போல...
விரிக்கப்படாத புத்தகத்தின்
உட்பக்கம் போல...
உடையாத உருவத்தில்...
களையாத புன்னகையோடு
அடிமை எனை நெருங்கி வருகிறார்?."
"வேதங்கள் போதிக்கும் வானவரோ?
வானவருக்கு தொழுவத்தில்
என்ன வேலை?"
ஒவ்வொரு இதயத்துடிப்போடும்
ஒரு வினாவும் துளிர்த்தது.
அடிமை அவரை
அமைதியாய் கவனித்தார்.
பூப்போன்ற உள்ளங்கை
பொடி இடித்துக் கொண்டிருந்தது.
எங்கிருந்தோ மலர் வாசம்
நாசியை வருடியது.
அடிமையின் அரைவிழிகள்....
அவரையே கண்காணித்தது.
அவர் வேலையை முடித்துவிட்டு,
ஓசையின்றி செல்லலானார்.
நிலவின் கைகளை
இருள் வந்து கவ்வியது.
ஆம்! அடிமை அவரை
கைப்பற்றிக் கொண்டார்.
முஹம்மதவர்,
முகம் திரும்பிப் பார்த்த போது,
அடிமையவர்,
புது நிலவை தம்மருகில் பார்த்தார்.
ஆம்!
இமை மூட மறந்தார்....
அவரைக்
கண்களால் அளந்தார்.
வயல் வெளி போல்
தலை கேசம்...
சுவர்க்கத்தின் பாலாற்றை போல
பள்ளமில்லாது பார்க்கின்றார்.
நெற்றி என்ற பெயர் சூட்டி,
திகட்டாது பார்க்கின்றார்.
கருப்பு நிறத்தில் வளைகோடு
புருவமென்ற பெயரில்
மலைத் தொடராய்
முளைத்திருந்தது.
கீழே இரு கண்கள்
கவர்வதற்காகவே திரண்டிருந்தன,
வசீகரப் பார்வை அவரை
வசியம் செய்து கொண்டிருந்தது.
அவரது இமை, மூடியும் திறந்தும்
அடிமையின் உயிரை
உறிஞ்சிக் கொண்டிருந்தது.
பேரழகில்
அணுவணுவாய்
அவர் உரைய....
சில வார்த்தைகள் அவரைத்
தட்டி எழுப்பியது.
"சொல்லுங்கள் பிலால்!
என்ன வேண்டும்?"
கருப்பருக்கோ....
குதூகலக் கொண்டாட்டம்.
அடிமை எனை
பெயர் சொல்லியல்லவா
புன்னகை சூரியன்
விளிக்கிறது.
"தாங்கள்...?"
அவருக்கு நா எழவில்லை
கண்கள் வழியே
அவர் அழகை மீண்டும்
பருக ஆரம்பித்தார்.
"நான் ஏகனின் தூதுவர்.
முஹம்மதென் பெயர்.
"குறைஷி" என் குலம்.
"உயர் குலத்து
கொடி ரோஜா....
அடிமைக்கு சேவகம் செய்ய
தொழுவத்திலா? "
என்றார்.
"அடிமை இங்கு யாருமில்லை.
யாவரும் படைத்தவனுக்கே
அடிமை"
என்றார்.
அடிமைக்கு புரியவில்லை
'யாரெ'ன்று கேட்டால்...
'இறைத் தூதெ'ன்கிறார்.
'இங்கென்ன பணி'யென்றால்
என்னென்னவோ பேசுகிறார்.
இறைவனைச் சுற்றியே பேசுகிறார்.
உண்மைத் தூதுவரென்கிறார்.
பொய்யங்கே எங்கேயுமில்லை.
சொல்லில் சுத்தமுண்டு.
சுகமான சுகந்தமுண்டு.
கேளாத புதுமொழி பேசுகிறார்.
ஏனோ.... ஏனோ.....
காந்தமாய் பார்க்கிறார்.
கல்பைக் கட்டி இழுக்கிறார்.
நிறுத்தச் சொல்லி மன்றாட,
கல்புக்கும் தோணவில்லை.
தூதர் முஹம்மது, திருக்கலிமாவை
இரவெல்லாம் எடுத்துரைத்தார்.
இரவெல்லாம் இருள் விலக....
முகமெல்லாம் அருள் வர ஆரம்பித்தது.
இப்போதவர் சாதாரண பிலால் இல்லை.
முழுமதி முஹம்மதின் பிலால்.
பொழுது விடிந்ததும்,
புதிதாய்ப் பேசினார் பிலால்.
சிலைகளைத் தொழும் எஜமானனிடம்,
காலையிலேயே தான்
கற்ற கலிமாவை
கள்ளம், கபடமின்றி
சொல்லிக் காண்பித்தார்.
ஏழை சொல் அம்பலமேறுமா?.
அதற்கவர் கொடுத்த விலை
கொஞ்சமல்ல... நஞ்சமல்ல.
காலத்தின் வெள்ள ஓட்டத்தில்
சில நல்ல நாட்டங்களும் நடந்தேறின.
அடிமை பிலால்,
இப்போது சுதந்திரமானார்.
அவர் தான் இப்போது
தொழுகையின் அழைப்புக் குரல்.
அல்லாஹு அக்பரென்ற
இவர் குரலுக்கு.....
நபியின் வீட்டிலிருந்தே
குதூகலம் பிறக்கும்.
அன்றொரு நாள்.....
இவர்....
அரபி இல்லை என்றும்,
அதனால்
உச்சரிப்புகள்
ஒழுங்காய் இல்லை என்றும்,
சிலர்
குறை சொல்கிறார்கள் என
நபி முன் புகார் வந்தது.
"ஆதலால்....?"
அடுத்த நாள்
வைகறைக்கான
தொழுகை அழைப்பு,
இன்னொருவரால்
விடுக்கப்பட்டது.
வைகறைத் தொழுகையும்
தோளிணைந்து தொழப்பட்டது.
'இந்நாள் இன்னமும் விடியவில்லை'
ஏனென்று எல்லாரும்
வெகுநேரம் பார்த்துக் கொண்டனர்.
வானவர் கோமான்
ஜிப்ரீல் வந்து....
"வைகறை அழைப்பொலி
ஒலிக்காததேன்?.
ஃபஜ்ரு தொழுகை
இன்னும் நடக்கலையோ?"
என்றார்.
"எல்லாம் முடிந்து,
இஷ்ராக்கை
எதிர்பார்த்திருக்கிறோம்....
என்ன? என்ன ஆனது?.
வானுலகில் என்ன தான் ஆனது?"
விவரத்தைக் கேட்ட
வள்ளல் நபி கோமான்,
பிலாலை அழைத்து
பாங்கோதச் சொன்னார்.
"விண்ணகத்தின் பள்ளியதில்
பிலாலின் அழைப்போசையே
அங்கும் அழைப்போசை!.
பிலாலின் குரல்,
அர்ஷின் அடி வரை கேட்கும்.
அது கேட்டே வானவர்,
தம் பணி துவக்குவர்"
என்றே இயல்பாய் இயம்பினார் ஜிப்ரீல்.
மீண்டுமொரு முறை
பிலால் பாங்கு சொல்லி,
அணி நின்று,
முதல் தொழுகை....
பாங்காய் நடந்தது.
பகலும் பிறந்தது.
ஏழை சொல் அம்பலம் ஏறாது.
ஆனால் அர்ஷினில் ஏறியது.
(ஏ. எம். முஹம்மது ஸுல்தான் அன்வாரீ பாகவீ,
ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா, குட்டிக்காட்டூர், கோழிக்கோடு, கேரளா.)
கருத்துகள்
கருத்துரையிடுக