பிலால் ரலி
பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) மீதான நபி (ﷺ) அவர்களின் அளப்பெரிய அன்பு:
அண்ணல் நபி (ﷺ) அவர்கள் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது கொண்டிருந்த அன்போ அளப்பரியது. “அரேபியாவில் நானே முதல் முஸ்லிம். அபிசீனியாவில் பிலாலே முதல் முஸ்லிம்” என்று இவர்களை அவர்கள் புகழ்ந்து கூறினர்.
ஒரு தடவை பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) நபி (ﷺ) அவர்கள் வழக்கமாகப் பால் அருந்தி வந்த கோப்பையைக் கை தவறிக் கீழே போட்டு உடைத்து விட்ட பொழுது, அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், நபி (ﷺ) அவர்களிடம், “நீங்கள் காட்டும் அதிகமான அன்பின் காரணமாகவே பிலால் கவனக் குறைவாக நடந்து கொண்டார். அவரை கண்டித்து வையுங்கள்: அல்லது அவரை விலக்கி விடுங்கள்” என்று கூறினார்கள்.
அது கேட்டு நபி ﷺ, “ஆயிஷா! ஒருவர் ஒரு செயலை ஆற்றும்பொழுது அதில் அவருடைய கவனம் குறைந்தால், அது வேறொன்றில் போய்ப் பதிந்து விடுகிறது என்று பொருள். பிலால் அப்பணியை ஆற்றும் பொழுது அவருடைய கவனம் என்னைப் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும்; என் மீது தான் சென்றிருக்க வேண்டும். அதற்காக வேண்டியா அவரை விலக்குமாறு கூறுகிறீர்கள்? ஒரு வேளை பிலாலை விலக்குவதா, ஆயிஷாவை விலக்குவதா என்ற பிரச்சினை ஏற்படின் உங்களை விலக்கி விடுவேனேயன்றிப் பிலாலை ஒரு போதும் விலக்க மாட்டேன்” என்றார்கள்.
குறைஷிகளைச் சிறிது குறைவாகப் பேசியதற்காக நபி தோழர் ஒருவர் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது சினந்து, அச் செய்தியை நபி (ﷺ) அவர்களிடம் வந்து கூறிய பொழுது,
“எவருடைய மனத்தை நோவினை செய்வது அல்லாஹ்வையும் அவனுடைய தூதுவரையும் வருத்தமுறச் செய்யுமோ அவருடைய மனத்தையா நீர் நோவினைச் செய்தீர்? என்று அத்தோழரிடம் சொன்னார்கள் அண்ணல். அக்கணமே அவர் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இவர்களைக் கலீபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சையிதினா (எங்களின் எசமானே) என்று அழைத்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக