மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி
ஃபாஜில் ஜமாலி M.A., M.Phil
ஆசிரியர் - அல் அஸ்ரார் மாத இதழ்

மவ்லித் ஷரீஃப் ஓதலாமா, மீலாது விழா கொண்டாடலாமா என்ற இது போன்ற கேள்விகள் இன்று நேற்று துவங்கியதல்ல. மாறாக, என்று மனித குல தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்டார்களோ அன்றே தோன்றியது.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை முன்நோக்கி ஸஜ்தா செய்யுமாறு அமரர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.
ஆணை ஏற்று அனைவரும் அடி பணிந்தனர் ஆனால், இப்லீஸைத் தவிர.
காரணம் என்ன தெரியுமா, ஸஜ்தாவிற்கான காரணமும் ஸஜ்தாவின் காரண புருஷர் யார் என்பதும் அவனுக்குத் தெரியும்.
இமாம் ஃபக்ருத்தீன் ராஜி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது தப்ஸீரில் கூறுவதாக அல்லாமா நப்ஹானி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்.

ان الملائكة امروا بالسجود لآدم عليه السلام  لاجل أن نور سيدنا محمد صلي الله عليه واله وسلم كان في جبهته

நிச்சயமாக மலக்குகள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸுஜுத் செய்ய பணிக்கப்பட்டதன் நோக்கம், அவர்களின் நெற்றியில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நூர் - பேரொளி இலங்கிக் கொண்டிருந்ததனால் தான். 
                                                                               நூல்: அன்வாருல் முஹம்மதிய்யா

ஆதம் அலைஹிஸ்ஸலாம் முன்னோக்கும் தலம் ஸுஜுது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத்தான்.
இந்த உண்மையை விளங்கியதாலேயே இப்லீஸ் ஸஜ்தா செய்ய மறுத்தான்.
இப்போது புரிகிறதா?
பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ் மீது கொண்ட பொறாமையே இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம்  காரணம்.
இத்தகையோரைத்தான் “ஹக்கு ரஸுல் மீது ஹஸது கொண்டோர்” என காதர் முஹ்யித்தீன் புலவர்  அவர்கள் பா(சா)டுகிறார்கள்.
மவ்லித் ஓதலாமா? என்ற கேள்விக்கு இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ உலமாக்கள் தங்கள் உரைகளாலும், எழுத்துக்களாலும் பதிலளித்து வந்தபோதிலும், அவர்களின் ஆதாரப்பூர்வமான பதில்கள் இன்னும் அவர்களின் செவிகளை சென்றடையவில்லை, சிந்தையில் பதியவில்லை என்றால் அது அவர்களின் கேள்வி அல்ல அது கேலியே ஆகும்.
மடமையிலும் மனமுரண்டிலும் உழன்று வரும் இதுபோன்றவர்களுக்கு எத்தனை பதில் சொன்னாலும் அது அவர்களின் பிடிவாத பெருநோய்க்கு பயனற்ற வெறும் மருந்தே ஆகும்.
ஆனாலும் அப்பாவி பாமர ஜனங்களில் சிலரும் அவர்களின் இனிப்பு தேய்க்கப்பட்ட விஷ(ம)ப் பிரச்சாரத்தில் வீழ்ந்து விடுகின்றனரே அவர்களுக்காவது நமது பதில் ஒரு வழிகாட்டுதலாக அமையட்டுமே. அதன் மூலமாவது அவர்கள் வழிகேட்டிலிருந்து விலகட்டுமே என்ற பேரவாவில்தான் சிறு தகவல்களை மட்டும் உங்கள் கவனத்திற்கு தருகிறேன்.

நாயகம் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழை ஓதும் முதல் காவியமே குர்ஆன் தான். அல்லாஹ்வே அவர்களின் புகழை குர்ஆனில் பல்வேறு இடங்களில் புகழ்ந்து பேசுகிறான்.

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ

(நபியே) நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள். (68:4)

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
(நபியே) உங்கள் கீர்த்தியை நாம் உயர்த்தியுள்ளோம். (94:4)

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

(நபியே) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம். (21:107)

அருமை சஹாபிகள் பலரும் நபிகளின் புகழை மிகச்சிறப்பாக கூறியுள்ளார்கள்.
அவற்றில் சில

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

وَفِيْنَا رَسُوْلَ اللهِ يَتْلُوْا كِتَابَهُ  اِذَا انْشَقَ مَعْرُوْفٌ مِنَ الْفَجْرِ سَاطِعٌ
اَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمى فَقُلُوْبُنَا       بِهِ مُوْقِنَاتٌ اَنَّ مَاقَالَ وَاقِعِ
يَبِيْتُ يُجَافِيْ جَنْبُهُ عَنْ فِرَاشِهِ    اِذَا اسْتَثْقَلَتْ بِالْمُشْرِكِيْنَ الْمَضَاجِعُ

எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப் பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்.

குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.
. இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும்போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 1087.

ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

هَجَوْتَ مُحَمَّدًا فَاَجَبْتَ عَنْهُ وَعِنْدَ اللهِ فِيْ ذَاكَ الْجَزَاءُ
هَجَوْتَ مُحَمَّدًا بَرًّا حَنِيْفًا رَسُوْلِ اللهِ شَيْمَتُهُ الْوَفَاءُ
وَقَالَ الله قَدْ اَرْسَلْتُ عَبدًا يَقُوْلُ الْحَقَّ لَيْسَ بِهِ خَفَاءُ

.(இறை மறுப்பாளர்களே) முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறைவுபடுத்தி நீங்கள் கவி பாடுகிறீர்கள். அதற்குப் பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு.
.நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்திப் பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.
அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான், சத்தியத்தைக் கூறுகிற ஓர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன். அதில் ஒளிவு மறைவு இல்லை.

அறிவிப்பாளர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல்: முஸ்லிம் 4545

கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
   
نبئت أن رسول الله أوعدني وَالْعَفْوَ عِنْدَ رَسُوْلَ اللهِ مَأْمُوْلُ
فَقَدْ اَتَيْتُ رَسُوْلِ اللهِ مُعْتَذَرَا وَالْعُذْرُ عِنْدَ رَسُوْلَ اللهِ مَقْبُوْلُ
اِنَّ الرَّسُوْلَ لَنُوْرٌ يُسْتَضَاءُ بِه وَصَارِمٌ مِنْ سُيُوْفِ اللهِ مَسْئُوْلٌ

நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.

மன்னிப்புத் தேடியவனாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது.

நிச்சயமாக முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் இருக்கிறார்கள்.

அறிவிப்பாளர்: ஆஸிம் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6558

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டுமல்ல அவர்களின் நல் வழி வந்த நாதாக்கள் மீதும் மௌலிது ஓதுவது நன்மை தரக்கூடியது என்பதையும் நபிமொழியின் ஒளியில் நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது

ذكر الأنبياء عبادة وذكر الصالحين كفارة

நபிமார்களை நினைவு படுத்துவது இபாதத் ஆகவும் வலிமார்களை நினைவு படுத்துவது பாவப் பரிகாரமாகவும் அமைகிறது (ஜாமிவுஸ் ஸகீர் லில் இமாம் ஸுயூத்தி ரஹிமஹுல்லாஹ்) 
إஇறைநேசர்களின் பேரில் மௌலிது ஓதுவது:

அருள் மறையாம் திருக்குர்ஆனும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளும் இறைநேசர்கள் பெயரில் மௌலிது ஓதுவதற்கு சான்றாக அமைந்துள்ளன.

இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறு, மாண்புகள் மற்றும் அற்புதங்களைக் கூறுபவைகளாகவே மௌலிதுகள் அமைந்துள்ளன.
குர்ஆனில் பல வலிமார்களின் செய்திகள் சொல்லப்பட்டுள்ளன :

மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு, வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 3:35-47, 19:16-29)
பருவமில்லாத காலத்திலும் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களுக்குக் கிடைத்த கனி வர்க்கங்கள் , (அல்குர்ஆன் 3:37)

இஸ்கந்தர் துல்கர்ணைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல் குர்ஆன் 18:83-98)

ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு (அல்குர்ஆன் 18:65-82)
முன்னூறு வருடங்களுக்கு மேலாக உறங்கிய குகைத் தோழர்களுக்கு நிகழ்ந்த அற்புதம் (அல்குர்ஆன் 18:9-25)
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அவையிலிருந்த ஞானம் பெற்ற ஓர் இறைநேசர் பன்னூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த பல்கீஸ் அலைஹஸ்ஸலாம் அவர்களின் சிம்மாசனத்தை கண்  இமைக்கும் நேரத்தில் கொண்டு வந்த அற்புதம் (அல்குர்ஆன் 27:38-40)

அல்குர்ஆன் இனிதாக எடுத்தியம்புகிறது. இதேபோல்தான் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறுகள், அற்புதங்கள் மௌலிதுகளில் கூறப்பட்டுள்ளன.

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

அறிந்து கொள்ளுங்கள் ! திண்ணமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எப்பயமும் இல்லை. அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:62)

ஹதீதுகள்:

عَنِ ابْنُ عُمَرَ قَالَ قَالَ رَسُوْلُ الله صَلَّى الله عليه وسلم: اُذْكُرُوْا مَحَاسِنَ مَوْتَاكُمْ .

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், உங்களில் முன் சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக் கூறுங்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி 940, அபூதாவூத் எண் 4254.

பத்ரு ஸஹாபிகள் மீது மௌலிது:

عَنِ الرَّبِيْعِ بِنْتِ مَعُوْذِ قَالَتْ دَخَلَ عَلىَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَاةَ بُنِيَ عَلَيّ وَجُوَيْرِيَّاتٌ يَضْرِبْنَ بِالدَّف يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ

ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹா  அறிவிக்கிறார்கள்
எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் யுத்தத்தில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தஃப் அடித்துக் கொண்டிருந்தார்கள்.  நூல்: புகாரி 3700, திர்மிதி 1010, 4276.

முஹாஜிர்-அன்ஸார் மௌலிது:

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிரார்த்தனை செய்து கவி படித்தார்கள்.

اَللهُمَّ اِنِّ الْعَيْشَ عَيْشُ الآخِرَةِ     فَاغْفِرْ لِلَانْصَارِ وَالْمُهَاجِرَة
اَللّٰهُمَّ اِنَّهُ لاَ خَيْرَ اِلاَّ خَيْرُ الآخِرَة  فَبَارِكْ فِي الاَنْصَارِ وَالْمُهَاجِرَةِ
اَللهُمَّ لاَ عَيْشَ اِلاَّ عَيْشُ الآخِرَة     فَاَكْرِمِ الاَنْصَارِ وَالْمُهاَجِرَةِ
اَللهُمَّ اِنَّ الاَجْرَ اَجْرُ الآخِرَةِ      فَارْحَمِ الاَنْصارَ وَالْمُهَاجِرَةِ

திண்ணமாக வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக!

நிச்சயமாக மறுமை நலனைத் தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக!

உறுதியாக மறுமை வாழ்வைத் தவிர வேறு எந்த வாழ்வும் இல்லை. இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களை கண்ணியப்படுத்துவாயாக!

திண்ணமாக நற்கூலி என்றாலே மறுமையின் நற்கூலிதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!

அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2622, 2623, 2741, 3616.

ஆயிஷா ஸித்தீகா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது மவ்லிது:

عَنْ مَسْرُقٍ قَالَ قَالَ دَخَلْنَا عَلى عَائِشَةَ وَعنْدَهَا خَسَّان بن ثَابِتٍ يُنْشَدُهَا شِعْرًا يُشَبَّبُ: بِأَبْيَاتٍ لَهُ وَقَالَ
خَصَّانُ رَزَانٌ مَاتَزَنِّ بِرِيْبَة وَتُصْبِحُ غَرْثِىِمْن لَحُوْمِ الْغَوَافِلِ

மஸ்ரூக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்
நாங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது கவிகளின் மூலம் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். (அவற்றில் ஒன்று)

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நல்லொழுக்கமும், நுண்ணறிவும் மிக்கவர்கள், ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எந்தவொரு பெண்ணைப் பற்றியும் தவறாகப் பேச மாட்டார்கள்.                                                           நூல்: புகாரி 3831, முஸ்லிம் 4543

மவ்லிது ஓதுவதின் பலன்கள்:

மவ்லிது ஓதக்கூடியவர்களுக்கு மலக்குமார்களைக் கொண்டு பாதுகாப்பு அரண்  இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்.

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُوْلُ الله صَلى الله عليه وسلم لِحَسَّانَ اِنَّ رُوْحَ الْقُدُسِ لاَيَزَالُ يُؤَيَّدُكَ مَانَفَحْتَ عَنِ اللهِ وَرَسُوْلِهِ

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்,

நீங்கள் இறைவனுக்காகவும் இறைத்தூதருக்காவும் கவிபாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மா(வான ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம்) உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: முஸ்லிம் 4545.

عَن انَسِ بنِ مَالِكٍ اَنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَّ بِبَعْضِ الْمَدِيْنَةِ فَاَذَا هُوَ بِجَوَارِ يَضْرِبْنَ بِدُفِّهِنَّ وَيَتَغَنَّيْنَ وَيَقَلْنَ نَحْنُ جَوَارِ مِنْ بَنِي النَّجَّارِ يَاحَبَّذَا مُحَمَّدٌا مِنْ جَارِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: يَعْلَمُ الله اِنِّيْ لأْحُبُّكُنَّ

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் ஒரு பகுதிக்குச் சென்றார்கள். அங்கே சில சிறுமிகள் தஃப் அடித்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். (அவற்றில் ஒன்று) நாங்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த சிறுமிகள். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த அண்டை வீட்டுக்காரர் ஆவார்கள்.

(இதைக் கேட்ட) நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், திண்ணமாக நான் உங்களை நேசிக்கிறேன்.(இதை) அல்லாஹ் அறிகிறான்.

அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு மாஜா 1889

.இப்படியாக ஏராளமான ஹதீஸ்கள் மௌலித் ஷரீபின் அவசியத்தையும் அகமியத்தையும் உரைக்கின்றன உணர்த்துகின்றன.

மவ்லிது ஓதுவதே கூடாது என்றவர்கள் அதைத் தாண்டி பள்ளிவாசலில் மௌலிது ஓதக்கூடாது என்கின்றனர். ஆனால் பள்ளி வாசல்கள் அல்லாஹ்வை தொழுவதற்கு மட்டுமல்ல அல்லாஹ்வின் ரசூலை புகழ்வதற்கும் தான் என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களோடு நிரூபிக்க முடியும்.

தொழுகையிலும் அல்லாஹ்வின் ரசூலை நினைக்காமல் தொழ முடியுமா? அவர்களுக்கு ஸலாம் சொல்லாமல் தொழுதால் தொழுகை கூடாமா?
யா நபி ஸலாம் அலைக்கும் யா ரசூல் ஸலாம் அலைக்கும் என்று ஸலாம் பைத் ஓதுவதைக் கூடாது என்போர் தொழுகையில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு என்று ஒதுகிறார்களா இல்லையா  தெரியவில்லை. ஓத வில்லையெனில் அவர்களுக்கு தொழுகையும் இல்லை. 

பள்ளிவாசலில் மௌலிது:

عَنْ اِبْن جَدْعَانَ قَالَ اَنْشَدَ كَعْبُ بْنُ زُهَيْرِبْنِ اَبِي سلّمَ رَسُوْل الله صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ

கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து படித்தார்கள்.

                    அறிவிப்பாளர்: இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு
                                நூல்: ஹாகிம் 6555.

عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُوْلَ الله صَلى الله عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ لحَسَّانَ مِنْبَرًا فِي الْمَسْجِدِ يَقُوْمُ عَلَيْهِ فَاِنَّمَا يُفاخِرُ عَنْ رَسُوْلِ الله صلى الله عليه وسلم .

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பள்ளிவாசலில் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள்.

அதிலே அவர்கள் ஏறி நின்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையேப் புகழ்வார்கள்.

  அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
                               நூல்: திர்மிதி 2773.

பள்ளி வாசலில் ஸலாம் பைத்
சுன்னத் ஜமாஅத் பள்ளி வாசல்களில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஸலாம் பைத் ஒதப்படுவது வழமை. ஆனால் அது ஏதோ ஆகாத காரியம் போலவும் ஷிர்க் என்றும் ஓலமிடுகின்றனர் ஒப்பாரி வைக்கின்றனர்.
ஆனால் தொழுகையிலேயே அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் சாலிஹீன் " என்று அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவ்லியாக்கலான சாலிஹீன்கள் மீதும் ஸலாம் சொல்கிறோமே அதை என்ன சொல்லப் போகிறார்கள் தெரியவில்லை.
மேலும் ஒவ்வொரு நபிமார்கள் மீதும் ஸலாம் சொல்கிறோம்.
سَلَامٌ عَلَى نُوحٍ فِي الْعَالَمِين அகிலத்தாரில் நூஹ்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது  ஸலாம் உண்டாவதாக
سَلَامٌ عَلَى إِبْرَاهِيم இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது ஸலாம் உண்டாவதாக
سَلَامٌ عَلَى مُوسَى وَهَارُونَ மூஸா ஹாரூன் அலைஹிமஸ்ஸலாம் அவர்கள் மீது ஸலாம் உண்டாவதாக
سَلَامٌ عَلَى إِلْ يَاسِينَ இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது ஸலாம் உண்டாவதாக
وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ அனைத்து ரசூல்மார்கள்  மீதும் ஸலாம் உண்டாவதாக
وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِينَ اصْطَفَى அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனின் அனைத்து அடியார்கள் மீதும் ஸலாம் உண்டாவதாக. 
என்று அல்லாஹ்வே குர்ஆன் மூலம் ஸலாம் கூறுகிறான் நம்மையும் கூறச் சொல்கிறான்.
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது வானவர்களும் இந்த நபியின் மீது சலவாத் சொல்கிறார்கள் முஃமின்களே நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள் (33:56)
என்ற இந்த தெய்வீக திருவசனத்தின் வழியே சாந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாம் சொல்லுமாறு கட்டளையிடுகிறான்.
அல்லாஹ்வின் அந்த கட்டளையை ஏற்று ஸலாம் சொல்வதை மஸ்ஜிதில் சொல்வது இன்னும் ஏற்றம் தானே தவிர அது எப்படி தவறாகும்.
இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ்வின் இல்லத்தில் நுழையும் போது  அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாம் சொல்லி விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். என்பதை பின் வரும் நபிமொழி வலியுறுத்துகிறது.
وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال
:   إذا دخل أحدكم المسجد فليسلم على النبي صلى الله عليه وسلم وليقل: اللهم افتح لي أبواب رحمتك، وإذا خرج فليسلم على النبي صلى الله عليه وسلم   أخرجه ابن ماجه بإسناد صحيح  .

உங்களில் யாரும் பள்ளியினுள் சென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாம் சொல்லி விட்டு உள்ளே செல்லுங்கள். பின்பு அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக ( யா அல்லாஹ் உன் அருள் வாசலை எனக்கு திறந்தருள்வாயாக ) என ஓதி விட்டு செல்லட்டும்.
பள்ளியிலிருந்து வெளி வருவதாக இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாம் சொல்லி விட்டு தான் வெளி வர வேண்டும். 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு
               நூல் : இப்னுமாஜா  
وفي حديث فاطمة بنت رسول الله صلى الله عليه و سلم قالت : كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل المسجد قال : بسم الله والسلام على رسول الله ، اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب رحمتك ، وإذا خرج قال : بسم الله والسلام على رسول الله ،
اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب فضلك . رواه الإمام أحمد والترمذي ، .
அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு மகள் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியினுள் செல்லும் போதும் வெளி வரும் போதும்  " பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் " என்று சொல்வார்கள்
                                                               நூல்; திர்மிதி , அஹ்மத்
இப்படியாக ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.
ஆதாரம் சொன்னால் தான் புகழ்வேன் என்றால் அதைவிட நீ புகழாமலே இருக்கலாம்.
வேண்டாம் விடுங்கள் அவர்களைப் புகழத்தேவையில்லை என்போரே பின்னர் புகழுக்கு தகுதியானவர்தான் யார்?

முஹம்மத் - புகழுக்குரியவர் என்றே பெயர் சூட்டப்பட்ட பூமானை புகழ்வதற்கு ஏன் ஆதாரம் வேண்டும்?

“லா இலாஹ இல்லல்லாஹ்” என ஆயிரம் முறை சொன்னாலும் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என ஒருமுறை கூறாதவரை ஒருவர் எப்படி முஸ்லிமாக முடியும்?

“லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று சொல்கிறோமே அதுவே மவ்லித்தானே.
“முஹம்மதுர் ரஸூலுல்லாஹ், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ரஸூலாக இருக்கிறார்கள் என்றுதானே சொல்கிறோம், இருந்தார்கள் என்று சொல்லவில்லையே ‘இருக்கிறார்கள்’ இன்றும் இருக்கிறார்கள் என்றும் இருப்பார்கள்  அதுவே மவ்லித்தானே. அவர்களின் புகழ் வாக்கியம்தானே.
அடிமைகள் நாம் அரசரைப் புகழ ஆதாரம் வேண்டுமோ?
படைத்த அல்லாஹ்வே அவர்களைப் புகழ்ந்து கொண்டு இருக்கிறான் பரதேசிகள் நாம் அவர்களைப் புகழ ஆதாரம் வேண்டுமோ?
விலங்குகளும், மரங்களும் அவர்களைப் புகழ்கின்றன. ஆறறிவு மனிதனே உன் பகுத்தறிவு ஏன் பாழ்பட்டுவிட்டது.
இப்படியாக ஏராள கேள்விகள் தாரளமாக கேட்கலாம்.
பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, புனிதர்களை புகழ்வதால் புகழ் பெறுவது நாமே. எனவே புகழ்வோம் புகல் பெறுவோம்.
(புகல் - தஞ்சம், அடைக்கலம் , வெற்றி இன்னும் பல)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

கல்வியா?செல்வமா?