மனமகிழ்ச்சி

நான்கு விஷயங்கள் மன மகிழ்ச்சியை தருகின்றன.

1. பசுமையான மரங்கள் தாவரங்களை பார்ப்பது.

2. ஓடும் நீர் ( ஆறு மற்றும் நீர்வீழ்ச்சி) ஆகியவற்றை பார்ப்பது.

3. நேசத்திற்குரியவர்கள் அருகில் இருப்பது அல்லது அவர்களை பார்ப்பது அல்லது அவர்களுடன் பேசுவது அல்லது அவர்களை நினைப்பது

4. பழங்களை பார்ப்பது.

இப்னு ஷிமாஸா மஹ்ரீ {ரஹ்மத்துல்லாஹி அலைஹி} அவர்கள் கூறுகின்றார்கள்:
“ நாங்கள் அம்ருப்னுல் ஆஸ் {ரலியல்லாஹு அன்ஹு} அவர்களின் மரணத் தருவாயில் அவர்களின் அருகே அமர்ந்திருந்தோம். அவர்களோ சுவற்றின் பக்கம் தம் முகத்தைத் திருப்பியவர்களாகத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள். அவர்களின் மகனார் அப்துல்லாஹ் {ரலியல்லாஹு அன்ஹு} அவர்கள் “ என் அருமைத் தந்தையே! அல்லாஹ்வின் ரஸூல் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள் உயிரோடிருக்கும் காலத்தில், தங்களுக்கு இன்னின்ன நற்பேறுகளை நீங்கள் அடைவீர்கள்” என்று சோபனம் சொல்லியிருக்கின்றார்களே? தங்களுக்கு கிடைக்க விருக்கும் பாக்கியங்கள் குறித்து சுபச் செய்தி நல்கியிருக்கின்றார்களே? அப்படி இருக்க தாங்கள் ஏன் அழுகின்றீர்கள்? என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். 

இதைக் கேட்டதும், எங்களின் பக்கம் முகத்தைத் திருப்பி “ நான் மறுமைக்காக தயார் செய்து வைத்திருப்பதில் மிக உயர்ந்தது “இறைவன் ஏகனாம் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள் அல்லாஹ்வின் ரஸூல் என்ற சாட்சியம்” தான்.

நான் என் வாழ்நாளில் மூன்று வகையான காலங்களைக் கடந்து வந்துள்ளேன். 
ஒரு காலம் இருந்தது, அந்தக் காலத்தில் என்னை விட மாநபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களின் மீது வெறுப்புக் கொண்டவன் வேறு யாரும் இருந்திருக்க மாட்டார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால், அவர்களை எப்படியாவது கொலை செய்து விட வேண்டுமென்ற தீர்மானத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். இது தான் என் வாழ் நாளில் மிகக் கெட்ட காலமாகும், (அல்லாஹ் தான் காப்பாற்றினான்) இந்நிலையிலேயே நான் இறந்து போயிருந்தால் நிச்சயம் நரகவாசியாகி இருப்பேன். 

பின்பு இஸ்லாம் தான் சத்திய மார்க்கம் என்பதை அல்லாஹ் என் உள்ளத்தில் உதிக்கச் செய்தான். நான் அல்லாஹ்வின் ரஸூல் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களிடம் வந்து, “ தங்களின் திருக்கரங்களை நீட்டுங்கள்!” தங்களிடம் உடன் படிக்கை செய்ய வேண்டும் என வேண்டினேன். நபியவர்கள் தங்களின் புனித கரங்களை நீட்டினார்கள். நான் என் கையை விலக்கிக் கொண்டேன். “அம்ரே! ஏன் கையை விலக்கிக் கொண்டீர்!” என என்னிடம் மாநபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள் வினவினார்கள். ”தங்களிடம் நான் சில நிபந்தனைகளைக் கோர விரும்புகின்றேன்” என்றேன்.
”என்ன நிபந்தனை?” என்று மாநபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் “என்னுடைய பாவங்கள் யாவும் மன்னிக்கப் பட வேண்டும்” என்று கூறினேன். 
அதற்கு அண்ணல் நபிகளார் “அம்ரே! இறை நிராகரிப்பின் போது நிகழ்ந்த அனைத்துப் பாவங்களையும் இஸ்லாம் தகர்த்துவிடுகின்றது, ஹிஜ்ரத் (அல்லாஹ்விற்காக இடம் பெயர்வது) அதற்கு முன் உண்டான பாவங்களை அழித்து விடுகின்றது, ஹஜ் அதற்கு முன் உண்டான பாவங்களைப் போக்கி விடுகின்றது.” என்பது உமக்குத் தெரியாதா? என்று கூறினார்கள். 
 பின்னர் நான் அல்லாஹ்வி ரஸூல் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களின் கரங்களில் உடன் படிக்கை செய்தேன்.

என்னுடைய இந்த இரண்டாவது காலம் எத்துணை சிறப்பானதெனில், மாநபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களை விட நேசத்திற்கும், பாசத்திற்கும், கண்ணியத்திற்குரியவர் என் பார்வையில் யாருமே இல்லை. 
 ”அன்னாரின் மீது நான் கொண்டிருந்த அளப்பெரும் மரியாதை, நேசத்தின் காரணமாக முழுமையாகக் கண் கொண்டு காண்பதற்குக் கூட எனக்கு துணிவு பிறக்கவில்லை.” 

என்னிடம் அல்லாஹ்வின் ரஸூல் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களின் தோற்றத்தைப் பற்றி வருணிக்குமாறு கூறப்பட்டால் என்னால் வர்ணிக்க இயலாது. ஏனெனில், நான் ஒரு போதும் அல்லாஹ்வின் ரஸூல் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களை முழுமையாகப் பார்த்ததில்லை. இந்நிலையில், நான் இறந்திருப்பேனேயானால் சுவனவாசிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன் என ஆதரவுவைக்கின்றேன்.

பிறகு நான் சில பொருட்களுக்கு சொந்தக்காரனாக ஆனேன். இவைகளுக்கு மத்தியில் நான் எவ்வாறு வாழ்ந்தேன் என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது. 
இது என் வாழ்நாளின் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாம் காலமாகும்.” 
”நான் மரணித்துவிட்டால், ஒப்பாரி வைத்துக் கூச்சலிடும் பெண்களை என் ஜனாஸாவைப் பின் தொடர அனுமதிக்காதீர்கள். (அறியாமைக் காலத்தில் செய்தது போன்று) என் ஜனாஸாவுடன் நெருப்பைச் சுமந்து வர வேண்டாம்.

என்னை அடக்கம் செய்ததும், கப்ரில் நன்றாக மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். (அடக்கம் செய்த பின்) உங்களைக் கொண்டு நான் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் என் மண்ணறையின் அருகே, ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் அளவிற்கான நேரம் நில்லுங்கள்!” என்று அம்ர் இப்னுல் ஆஸ் {ரலியல்லாஹு அன்ஹு} அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம், ஹதீஸ் எண்: 321. பாபு கவ்னுல் இஸ்லாமு யஹ்திமு மா கப்லஹூ…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?