கடன்
அழகிய கடன்
அதென்ன "அழகிய கடன்"
உறவுகளுக்குள்
நண்பர்களுக்குள்
வழங்கிக் கொள்ளும் கடன் "அழகிய கடனாகும்"
பலரும் கடன் ஆபத்தானது.
அது அன்பை முறிக்கும்.
உறவுகளை முறிக்கும் என்றெல்லாம் கருத்துகளை வைத்திருக்கலாம்.
என்னைப் பொருத்தவரை
அழகிய கடன் என்பது அன்பைப் பரிமாறிக்கொள்ளும் மற்றொரு முக்கியமான விசயமாகும்.
அழகிய கடனில் வட்டி இருப்பதில்லை.
எனினும் சக உயிர் மீது கொண்ட அன்பும் பாசமும் பரிவும் நிறைந்து இருக்கிறது.
இருவர் செய்து கொண்ட அன்பின் உச்சநிலை என்பது தியாகமாகும்
நாம் அன்பு செய்யும் ஒருவருக்கு
நமக்கு எதை விரும்புவோமோ அதையே விரும்புவதும்
நாம் கொண்ட செல்வத்தை அவர் முன்னேற சில காலம் தியாகம் செய்வதும் அன்பின் வெளிப்பாடே ஆகும்.
தற்கால வாழ்க்கையில்
திடீரென நிகழும் தொழில் சுணக்கம்
திடீரென வரும் மருத்துவ செலவுகள்
இது போன்ற முன்பின் எதிர்பாராத நிகழ்வுகளில் உறவுகள் நண்பர்கள் பக்கபலமாக நின்று அழகிய கடன்களை பெற்றும் வழங்கியும் வருவதாலேயே வாழ்க்கை மீது பிடிமானம் ஏற்படுகிறது.
நமது வாழ்க்கையில்
நாம் நேரடியாகவோ
அல்லது நமக்காக நமது பெற்றோரோ
இன்னொரு நபரிடமோ வங்கியிடமோ கடன் வாங்காமல் கழிந்திருப்பது அரிது.
ஆபத்து காலங்களில்
அவசர காலங்களில்
ஆதரவான வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு அழகிய கடன்களும் தேவையாக இருக்கின்றன.
பலமான உறவுகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
எனினும் மனித வாழ்க்கையின் நிலையில்லாமையை கருத்தில் கொண்டு
எப்போதும் எழுத்துப் பூர்வமான அல்லது எலக்ரானிக் ட்ரான்சாக்சன் சாட்சியங்கள் அல்லது மற்றொரு நபரின் சாட்சியங்களுடன் அழகிய கடன்களை வழங்குவதும் பெறுவதும் இன்னும் நல்லது.
தந்தை வாங்கிய கடனுக்கு
அவர்தம் மனைவியும் பிள்ளைகளும் பொறுப்புதாரிகள் என்றிருக்க மனைவிக்கோ
வளர்ந்த பிள்ளைகளுக்கோ தெரியாமல் தந்தை கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
இதையே வீட்டில் உள்ள அனைவரும் கடைபிடித்தல் நல்லது.
திடீரென மரணிக்கும் சூழ்நிலையில்
கடன் கொடுத்தவர்கள் வந்து கேட்கும் போது சங்கடங்களைத் தவிர்க்க இது உதவும்.
அழகிய கடனே ஆகினும்
கொடுப்பவர் அதற்கான காலக்கெடுவை வாங்குபவரிடம்
கூறி விட்டே வழங்க வேண்டும்.
அதை வாங்குபவரும் சரியாக கடைபிடிக்க வேண்டும்.
இது பரஸ்பரம் நம்பிக்கையை அதிகரிக்கும்.
ஒருவேளை அந்த காலக்கெடுவைத் தாண்டும் சூழ்நிலை ஏற்படின்
வாங்கியவர் அதை நினைவுபடுத்தி கூடுதல் அவகாசம் கேட்பது சிறந்தது.
இன்னும் கடன் வாங்கியவர்கள்
கடனைத் திருப்பித் தர இயலாத நிலையில் வறுமையில் இருந்தால்
கொடுத்தவர்களால் முடிந்தால்
கால அவகாசத்தை நீட்டிக்கலாம்
அல்லது
கடனில் தங்களால் இயன்றதைக் குறைத்துக் கொள்ளலாம்.
இறைவன் கடன் கொடுத்தவருக்கு
அளவின்றி வளங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால்
அந்த கருணையின் சிறு பகுதியை கடன் வாங்கியவர்களிடம் காட்டி கடனைத் தள்ளுபடியும் செய்யலாம்.
கடன் கொடுப்பவர்
நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கிறார்
கடன் பெற்றவர்
நாணயத்துடன் நடந்து அதை அடைக்கிறார்
அழகிய கடன் என்பது உறவுகளை பலப்படுத்த வேண்டுமே அன்றி
அதை உடைத்து விடக்கூடாது.
என்றைக்கும் நமது வரம்புக்கு மீறியோ
நம்பிக்கை இல்லாதவர்களிடமோ
கடன் வழங்கத் தேவையில்லை
நாம் கடன் வழங்கிவிட்டதாலேயே
நம்மால் தான் கடன் வாங்கியவரின் வாழ்க்கை முன்னேறியது என்று சுட்டிக் காட்டி இறுமாப்பு கொள்வது ஆபத்தான மனநிலை
இன்று நம் கையில் இருக்கும் செல்வம் நாளை மற்றொருவர் கையில் இருக்கும்
இன்று வழங்கும் நிலையில் இருப்பவர்
நாளை வாங்கும் நிலைக்கு மாறலாம்
இதுவே வாழ்வின் நிலையில்லாமை
எனவே எப்போதும்
கண்ணியம்
அடக்கம்
பொறுமை முக்கியம்
கடன் அன்பை முறிப்பதில்லை
கடன் அன்பை வெளிப்படுத்தும் மற்றொரு விதமே ஆகும்.
உனது ஆபத்தில் நான் இருக்கிறேன்
எனது ஆபத்தில் நீ இருக்கிறாய்
என்ற ஆற்றுப்படுத்துலின் வெளிப்பாடாக இருப்பவையே அழகிய கடன்கள்
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
கருத்துகள்
கருத்துரையிடுக