காயிதேமில்லத்
காயிதே மில்லத் - இந்த பெயரை ஸ்கூலில் படிச்சதோடு சரி.. ஆனால் இவரை பற்றி இன்றைய பிள்ளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.. எனவே பிள்ளைகளுக்காகவே சுருக்கி இவரை பற்றி பதிவிடுகிறேன்..!
காயிதே மில்லத், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களின் இதயவேந்தன்..!
"கண்ணியம்" என்றாலே அது சாட்சாத் காயிதே மில்லத் தான் என்பார் பேரறிஞர் அண்ணா..!
இவர் சாதாரணமாக பேசினால்கூட குரான் வசனத்தை மேற்கோள் காட்டிதான் பேசுவார்..!
இன்னைக்கு நெய்வேலியில் இருந்து நமக்கு கரண்ட் கிடைத்து வருகிறது என்றால் அதற்கு இந்த புண்ணியவான், சட்டமன்றத்தில் எடுத்து வைத்த வாதம்தான் காரணம்!
இஸ்லாமிய பிள்ளைகள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காகவே ஏராளமான கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியவர்..!
வருஷந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வெளியேறும் சென்னை "புதுக்கல்லூரி"யை உருவாக்கியவர்..!
எளிமையானவர் - தனக்கு வியாபாரத்தில் கிடைத்த பணத்தைகூட, ஏழைகளுக்காகவே அர்ப்பணித்தவர்..!
மேல்சபை, சட்டசபை, லோக் சபா என பல்வேறு ஆட்சி பீடங்களில் பதவிகளையும் வகித்தவர்..!
தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் முதன்முதலில் வாதிட்டவரே இவர் தான்..!
நாடாளுமன்றத்தில், இவர் பேசினாலே பலருக்கும் கை, கால் உதறல் எடுக்குமாம்.. கேள்விகளை கேட்டு திணறடித்து விடுவாராம்.!
அப்படித்தான் ஒருமுறை பேசும்போது, "பெரும்பான்மையோர் பேசுகிறார்கள் என்று ஹிந்தியை ஆட்சி மொழி ஆக்குவதாக சொல்றீங்களே, பெரும்பான்மையாக இருக்கும் காக்காவை தேசிய பறவையாக ஆக்காமல், மயில் ஏன் தேசியப் பறவையாக இருக்கிறது? பெரும்பான்மையாக நாய் இருக்கும்போது தேசிய விலங்காக அதை ஏன் அறிவிக்கவில்லை? என கேள்வி எழுப்பி அதிர்வை உருவாக்கியவர்
இவர் வீடு குரோம்பேட்டையில் இருந்தது.. ரொம்பவும் சின்ன வீடு அது.. யாராவது வீட்டுக்கு வந்தால், உட்கார வைக்ககூட வசதி இருக்காது.. குரோம்பேட்டையில் இருந்து ரயில் ஏறி, பீச் ஸ்டேஷனில் இறங்கி, அதுக்கப்பறம் ஒரு ரிக்ஷாவில் ஏறி மண்ணடியில் உள்ள கட்சி ஆபீசுக்கு செல்வாராம்.
எப்படியாவது இவருக்கு ஒரு காரை வாங்கி தந்துவிட வேண்டும் என்று நிறைய பேர் முயன்றனர்.. ஆனால், கார் எதுவும் வேண்டாம் என்று கறாராக சொல்லிவிட்டார்...!
கேரளாவில் கட்சிக்காரர்கள் சிலர், ஒரு காரை வாங்கி அந்த சாவியையும் கையிலேயே தந்துட்டாங்களாம்.. ஆனால் காயிதே, அங்கிருக்கிற இஸ்லாமிய கல்லூரிக்கு அந்த காரை இலவசமாக தந்துவிட்டுதான் ஊர் வந்து சேர்ந்தார்.
ஒருமுறை ஆபீசில் தன் பொறுப்பாளரிடம், ஒரு கவரையும், 2 அணாவையும் தந்து, "ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி போஸ்ட் பண்ணிடுங்க" என்று சொன்னார்..
அந்த பொறுப்பாளரோ, "2 அணா எதுக்கு? ஆபீஸ் செலவிலேயே அனுப்பிடலாமே, ஸ்டாம்ப்தான் இருக்கே" என்று கேட்டார். அதற்கு காயிதே, "இது என் தம்பிக்கு எழுதியிருக்கிற லெட்டர்.. இதுக்கு ஆபீஸ் பணத்தை செலவழிக்ககூடாது" என்றார்.
அப்போதும் அந்த பொறுப்பாளர் விடவில்லை, "உங்க தம்பியும் கட்சி பொறுப்பில்தானே இருக்கிறார்.. அதனால் கட்சி பணத்தை செலவு செய்வதில் என்ன தப்பு?" என்று கேட்டார்.
உடனே காயிதே, 'நான் ஒன்னும் இந்த லெட்டரில் கட்சி விஷயத்தை பத்தி எழுதலையே.. குடும்ப விஷயத்தை தானே எழுதியிருக்கேன்.. அதனால, நான் குடுத்த அந்த 2 அணாவில் ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி அனுப்புங்கள்" என்று கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாகவே சொன்னாராம்.
இவரது இந்த கண்டிப்பு வெளியில் மட்டுமில்லை, வீட்டிலேயும் அப்படித்தான் இருந்திருக்கிறது.. மகன் பெயர் மியாக்கான்.. அவர் என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டார்...!
ஆனால், பொறுப்பில் இருந்தும் காயிதே, தன் மகனுக்கு சிபாரிசு செய்யவே இல்லை.. எனினும் மியாக்கானுக்கு சீட் கிடைத்து காலேஜ் போக ஆரம்பித்தார்..!
6 மாசம் கழித்து, ஒரு அமைச்சர் காயிதேவிடம், மகனின் காலேஜ் படிப்பு பற்றி விசாரித்தார். காயிதேவுக்கு ஆச்சரியம், "என் மகன் என்ஜினியரிங் படிப்பது உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டார்.
அதற்கு அவர், "பேரை பார்த்ததும் உங்க மகன்னு தெரிஞ்சு போச்சு.. அதனால நான்தான் சீட் தந்தேன்" என்றார்.
அவ்வளவுதான், நேராக வீட்டுக்கு வந்த காயிதே, "இனி நீ காலேஜ் போக வேண்டாம்" என்று மகனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார்... அதுமட்டுமில்லை, 1962-ல் தன் ஒரே மகனான மியாக்கானை இந்த நாட்டுக்கு தானம் செய்வதாகவும் அறிவித்தும் விட்டார்..
தஞ்சை மாவட்டம் நிர்வாக காரணமாக அன்று, ரெண்டாக பிரிக்கப்பட நேர்ந்தது.. இந்துக்களின் புனிதத்தலமான திருவாரூரும் - முஸ்லிம்களின் புனிதத்தலமான நாகூரும் - கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான வேளாங்கன்னியும் ஒரே மாவட்டத்தில் ஒன்றாக இருந்தன..!
இதற்கு யாருடைய பெயரை சூட்டலாம் என தமிழக அரசு சிந்தித்தபோது, சட்டென வந்த முதல் பெயரே காயிதேதான். இதற்கு காரணம், சாதி - சமயங்களுக்கு அப்பாற்பட்டு இவர் செயல்பட்டதால்தான், "நாகை காயிதே மில்லத் மாவட்டம்" என்று பெயரிடப்பட்டது.
எப்பவுமே காயிதே, ஒரு பிரிவுக்கு மட்டும் சொந்தமில்லை.. இந்த ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே துணிவுக்கு தூண் போன்றவர்.. அதனால் தான், இவர் இறந்தபோது, இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்று தன் மரியாதையை வெளிப்படுத்தினார் எம்ஜிஆர்..!
இவரது புகழை தமிழகம் முழுதும் கொண்டு சேர்த்த பெருமை கலைஞர் கருணாநிதிக்கு நிறையவே உண்டு என்பதை உரக்க சொல்லலாம்.. சென்னையில் உள்ள காலேஜ்க்கு காயிதே மில்லத் என்று பெயர் சூட்டியதே கலைஞர் தான்..!
தன் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை, எந்தவித "நாகரீக மாயை"யிலும் விழாமல், எளிமையுடன் ஜன சமூகத்துக்கு உயிரூட்டி கொண்டே இருந்தவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக