#பெண் #பெண்குழந்தை #girl child



பெண்பிள்ளைகளைப் போற்றுவோம்

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
----------------------------- 

அறியாமைக் காலத்தில் பெற்றெடுத்த பிள்ளைகளைத் தம் வறுமை காரணமாக மக்கள் கொன்றார்கள். குறிப்பாகப் பெண்பிள்ளைகளை உயிரோடு புதைத்தார்கள். அவர்கள் பிறப்பதையே வெறுத்தார்கள். ஊரில் யாரேனும் உனக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது என்று கேட்டால், ‘பெண் பிள்ளை’ என்று சொல்ல வெட்கப்பட்டார்கள்; வெறுத்தார்கள். அத்தகைய காலக்கட்டத்தில், இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதால் ஒருவர் சொர்க்கம் செல்லலாம் என்ற நற்செய்தியைக் கூறி, பெண்களுக்கான பிறப்புரிமையை நிலைநாட்டினார்கள். 

பெண்பிள்ளைகளை உயிரோடு புதைப்பவர்களை எச்சரிக்கை செய்யுமுகமாக அல்லாஹ் திருக்குர்ஆனில், “உயிரோடு புதைக்கப்பட்ட பெண்குழந்தை என்ன பாவத்தின் காரணமாகக் கொல்லப்பட்டது என்று கேட்கப்படும்“ (81: 8-9) எனக் கூறுகின்றான். ஆகவே பெண்பிள்ளைகளை உயிரோடு புதைப்பவர்களை அல்லாஹ் மறுமையில் சும்மா விட்டுவிடமாட்டான். அதற்கு உரிய விசாரணையும் உண்டு; உரிய தண்டனையும் உண்டு என்பதை நினைவில் கொள்வோம். 

 

“யார் பெண்பிள்ளைகள் இருவரை (அவர்கள் பருவம் எய்தும் வரை) பொறுப்பேற்று வளர்க்கிறாரோ அவரும் நானும் இவ்வாறு சொர்க்கத்தில் நுழைவோம்“ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிவிட்டுத் தம் இரண்டு விரல்களை இணைத்துச் சைகை செய்தார்கள். (திர்மிதீ: 1837) 

பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதால் ஒருவர் சொர்க்கம் செல்லலாம் என்ற ஆர்வமிகு அறிவுரைகளைக் கூறி அன்றையக் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெண்பிள்ளைகளைக் காப்பாற்றினார்கள். அவர்களின் அறிவுரை இன்று வரை முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு வருவதைக் காணலாம். ஆனாலும் இன்று வரை பிற சமுதாய மக்களிடம் ஆங்காங்கே பெண்சிசுக்கொலை தொடரவே செய்கிறது.

 
இஸ்லாம் பெண்களுக்குப் பிறப்புரிமை, கல்வி கற்கும் உரிமை, சொத்துரிமை, வாரிசுரிமை, நடமாடும் உரிமை, வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை வழங்கி அவர்களைக் கண்ணியப்படுத்தியுள்ளது. “தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது” என்று கூறி, தாயின் வழியாகப் பெண்களுக்கு உயர்மதிப்பை வழங்கியது இஸ்லாம். இதன் அடிப்படையில் ஆண்கள் தம் அன்னையர்க்கு மரியாதை செலுத்தவும் அவர்களை மதிக்கவும் போதிக்கப்படுகிறது. அவர்களின் உள்ளங்களில் தாயைப் பற்றிய உயர்மதிப்பு விதைக்கப்படுகிறது.

இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு எல்லாவிதமான உரிமைகளையும் வழங்கியுள்ளதோடு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது. அதனால் அன்று முதல் இன்று வரை பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஒளிர்கின்றார்கள். கேரளாவைச் சார்ந்த பாத்திமா பீவி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து, பின்னர் தமிழ்நாட்டு ஆளுநராகப் பதவியேற்றுப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய இராணுவத்தில் போர் விமான ஓட்டியாக சானியா மிர்சா எனும் ஒரு முஸ்லிம் பெண் தேர்வுபெற்றுள்ளார். சானியா மிர்சா எனும் அதே பெயரில் மற்றொரு பெண் உலக அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். தற்போது சவூதியில் பத்து முஸ்லிம் பெண்கள் மெட்ரோ இரயில் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். பாகிஸ்தானில் போர் விமான ஓட்டியாக ஆயிஷா பரூக் என்பவர் பணியாற்றி வருகிறார். இப்படிப் பெண்கள் பலர் ஆண்களுக்கு நிகராகப் பணியாற்றி வருகின்றனர். 

இந்திய அரசு பெண்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கியிருந்தாலும் இன்று வரை அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லை என்ற நிலையே தொடர்கிறது. பெண்கள் தனியாக நடந்து செல்லவோ பேருந்தில் தனியாகப் பயணிக்கவோ இயலவில்லை. பெண் சீண்டலும் கூட்டுப் பாலியல் வன்புணர்வும் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன. பெண்களுக்கெதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை கிடைப்பதில்லை என்பதே, பெண்களை அரசு உரிய முறையில் மதிக்கத் தவறிவிட்டது என்பதற்கான சான்றாக உள்ளது.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவங்களிலும், வக்கிரப் புத்திகொண்ட ஆண்களால் பெண்கள் மிகுந்த தொல்லைக்கும் இன்னலுக்கும் ஆளாகின்றார்கள். மணம்புரிந்துகொண்ட ஓர் ஆண் மது அருந்தினால் அவனுடைய வீட்டில் மனைவி எனும் மாதுதான் பாதிக்கப்படுகின்றாள்; மணம்புரியாத ஓர் இளைஞன் மது அருந்தினால் வீதியில் செல்லும் பருவப்பெண் பாதிக்கப்படுகின்றாள். ஆக எல்லா நிலைகளிலும் பெண்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். குழந்தை முதல் குமரி வரை, இளம்பெண் முதல் பேரிளம்பெண் வரை அனைத்து வயதினரும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது நிதர்சன உண்மை. அன்றாட நாளிதழ்கள் அதற்குச் சான்று பகர்கின்றன. 

மனிதன் எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சி கண்டாலும் ஒழுக்கமற்ற ஒரு சமுதாயத்தைத்தான் இன்று நாம் காணமுடிகிறது. ஒழுங்கீனமான ஆண்-பெண் நிறைந்த சமுதாயத்தில் பெண்ணுக்கான பாதுகாப்பை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. எதிர்பாலினத்தை ஈர்க்க ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் போட்டிபோடுகின்றனர். சமூக வலைதளங்களில் தம் ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொண்டு எத்தனை விருப்பங்கள் (லைக்) கிடைத்துள்ளன என்பதைப் பார்த்துப் பார்த்து மகிழ்கின்றார்கள். இதில் சாதி, மதப் பாகுபாடின்றி எல்லாப் பெண்களும் ஈடுபட்டுள்ளார்கள். அரிதாகச் சிலர் ஈடுபடாமல் தவிர்ந்திருக்கலாம். பெண்களால் பதிவேற்றப்படுகின்ற ஒளிப்படங்களை வக்கிரப்புத்தி கொண்ட ஆடவர்கள் உருமாற்றம் (மார்ஃபிங்) செய்து ஆபாசப் பட வலைதளங்களுக்கு விற்றுவிடுகின்றார்கள். இதன்மூலமாகவும் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.  

 
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமெனில் இஸ்லாம் வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றினால்தான் சாத்தியமாகும். பெண்கள் தம் உடல் முழுவதையும் மறைக்கும் வண்ணம் ஆடை அணிதல், இருபாலருக்கும் தனித்தனிப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அமைத்தல், தனித்தனிப் பேருந்துகளை இயக்குதல் ஆகியவற்றைச் செயல்படுத்த வேண்டும். 

அத்தோடு பெண்களின் உடற்கூறு குறித்துப் பதின்பருவ இளைஞர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்கள்தம் பருவ வயதிலிருந்து படிப்படியாக அனுபவிக்கும் தொல்லைகள், துன்பங்கள் குறித்து வகுப்பெடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அவர்கள் அனுபவிக்கின்ற தொல்லைகள் குறித்து விளக்கிக் கூற வேண்டும். இத்தகைய தொல்லைகளை அனுபவிக்கின்ற அவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஆண்கள் பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் குறித்த இளைஞர்களின் பார்வை மாறும். 

திரைப்படங்கள், சின்ன திரை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பெண்களைக் கொச்சைப்படுத்துகிற, கீழ்மைப்படுத்துகிற காட்சிகள் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றன. அவர்களை வன்புணர்வு செய்தல், நையாண்டி செய்தல், கேலி செய்தல் உள்ளிட்ட காட்சிகளைப் பார்க்கின்ற இளைஞர்கள் அக்காட்சிகளின் உணர்வுகளால் உந்தப்பட்டு, அவற்றைச் செயல்படுத்த முனைகின்றார்கள். அதனால் சமுதாயப் பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றார்கள்.  

‘தேசிய பெண் குழந்தை நாள்’ ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. பெண் பிள்ளைகளைக் காப்பதும் அவர்களுடைய கல்வி முன்னேற்றமும்தான் அதன் நோக்கமாகும். அந்த வகையில் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிற இந்த நாள் பெண் பிள்ளைகள் குறித்த மரியாதையை மக்கள் மனங்களில் விதைப்பதாக அமைய வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விதைக்க வேண்டும்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. பெண் பிள்ளைகளைக் காப்போம் திட்டம், பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ (பெண் பிள்ளையைக் காப்போம்; பெண் பிள்ளையை வளர்ப்போம்) திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்புத்) திட்டம், கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பெண்களுக்கு இலவசக் கல்வி அல்லது மானியம் வழங்கப்பட்ட கல்வித் திட்டம் போன்ற திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. 

ஆதரவற்ற விதவைகளுக்கான ஓய்வூதியத் திட்டம், மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம், டாக்டர் தர்மாம்மாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் பெண்களுக்கான பாதுகாப்பிற்காக இன்னும் முழுமையான திட்டங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆங்காங்கே திறந்து வைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளால் இளம்பெண்கள் முதல் குடும்பப் பெண்கள் வரை பலர் பாதிக்கப்படுகின்றனர். இது ஒன்றே சட்டங்கள் பல இருந்தும் எதுவும் இல்லாததைப் போன்று காட்சியளிக்கிறது. ஒரு பக்கம் மகளிரின் கழுத்தில் தாலி ஏறத் திருமண உதவித்தொகை மற்றொரு புறம் அந்தத் தாலியை அறுக்க ஆங்காங்கே திறந்துவைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள். இது என்ன வினோதம்? இது என்ன முரண்பாடு? 

எனவே இனிவரும் காலங்களிலாவது மதுவை ஒழித்து மாதுவைக் காப்போம் என்று சபதமேற்றுச் செயல்பட அரசு முன்வர வேண்டும் என்பதே பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாகும். அதுவே மகளிரைக் காக்க அரசு செய்ய வேண்டிய முக்கியப் பணியாகும். 
=====================================

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?