#umarfaruk hajrath #eerode #dawothi #dawothiyya #vafath #alim #imaam

அச்சமூட்டும்மறைவுகள்!
முஹம்மதுகான்பாகவீ
கண்ணியமிக்க 
 மெளலானா உமர் பாரூக் தாவூதி ஹள்ரத் அவர்களின் மறைவு உண்மையிலேயே கவலையளிக்கும் செய்தியாகும்.அன்னாரது முற்போக்கு சிந்தனைகள், கனிவான அணுகுமுறை, பிறரை ஊக்குவிக்கும் போக்கு நினைவுகூரத் தக்கவை ஆகும்.

ஜமாஅத்துல் உலமா பொறுப்பில் அன்னார் இருந்தபோதுதான் பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் சபையின் கிளை உருவானது. இதன் உருவாக்கப் பொறுப்பை என் வசம் ஒப்படைத்த ஹள்ரத் அவர்கள் எனக்கு ஊக்கமளித்து வெற்றியும் காண வழிவகுத்தார்கள்.

சபையின் முன்னேற்றத்திற்கு உழைத்த அன்னார், சபையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றார்கள் எனலாம்.
 
ஆசிரியர் பணி, பரப்புரை,சமூகப் பிரக்ஞை எனப் பல்வேறு துறைகளில் பரிணமித்த முன்னுதாரண ஆலிம்
 பெருமகன்.
நிச்சயம் இது பேரிழப்பு தான்.சந்தேகமில்லை.

இப்படி பல அச்சமூட்டும் மறைவு கள் தொடர்வது தான் பெரும் வேதனை.இடங்கள் காலியாகின்றன. நிரப்புவதற்குத்தான் ஆள் இல்லை.தீர்வு என்னவென்று புரியவுமில்லை.

காலவோட்டத்தில் அனைத்தையும் சீரணித்துப் பழகிக்கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. இம்மையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மறுமைக்காகவே உழைத்த உத்தமர்கள் அவர்கள். இம்மை இல்லையேல் எந்தப் பசுமையும் இல்லை என்ற மன நிலை வலுவாககிவருகிறது.
இறைவா! காப்பாற்று!
*கனத்த* *இதயத்தோடு* 
 *உங்கள்* *கான்* *பாகவி* .
18.12.2022

*அனையா ஜோதி அனைந்தது!*

தமிழக ஆலிம்களின் மானசீக ஆசான்
தாவூதிகளின் தங்க தலைமகன்
தமிழ் மாநில உலமா சபையின் தகுதி மிக்க செயல் வீரர்...
சட்டவியல் சாணக்கியர்
ஞானக் கருவூலம்...
பல்துறை பாண்டித்தியம் பெற்ற பல்கலைக்கழகம் !
அரசியல் சாசனத்திற்கு ஆலோசனை வழங்கும் 
சட்ட மேதை! 
கனிவும் கண்டிப்பும் கலந்த நிர்வாக ஆளுமை!
சி எம் என்று மாணவர்களால் பாசமாக அழைக்கும் எங்கள் வாழ்வியல் முதல்வர்...
எழுத்து துறையின் எழுச்சி நாயகர்...
தாவூதிகளின் நம்பிக்கை நட்சத்திரம்...
அனையா அருட் பெரும் ஜோதி அனைந்தது...
தகவல் அறிந்து எங்கள் இதயங்கள் இருண்டது...
கவலை மேகம் திரண்டது...
கண்களில் கண்ணீர் உருண்டது...
ஆய்வரங்கம் கண்ட கண்கள் மண்ணறையை ஓய்வரங்கமாக்கியது!

தன் முன் மண்டியிட்டு படித்த பிள்ளைகளின் கல்வியறிவை அகமகிழ்ந்து கேட்டு கண் குளிர பார்த்து ரசித்த ஆன்மீக தந்தை தன் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தாவூதிகளின்
 தரம் உயர விண்ணிலிருந்து மன்றாட சென்று விட்டார்கள்...

எங்கள் நாஜிர் ஹழ்ரத் அவர்கள் தரஜாஉயர 
நாங்கள் மண்ணில் இருந்து மன்றாடுகிறோம்...

பாட அறையில் 
பண்பு குறையில்

நாங்கள் இழைத்த தவறுகளை மன்னித்து துஆ செய்யுங்கள் அறிவுச் சூரியனே...

தந்தையின் பேச்சு மீறி நடக்கும் குழந்தைகளாய் நாங்கள் செய்த குறும்புகளை குற்றமாக கருதாமல் தாயுள்ளத்தோடு மன்னித்து கல்வி பிச்சை வழங்க வேண்டுகிறேன் 
கல்வி பெருங்கடலே...

உங்கள் வழிகாட்டுதல் எண்ணங்களால் எழுத்தால் நற்போதனையால்
நன்னெறியால்
 வழி காட்டும்!

எங்கள் ஊர் சித்தரேவு ரவ்ளத்துல் உலமா சபையின் ஐம்பெரும் விழாவில் தாங்கள் தந்த வாழ்த்துரை எங்களை ஏற்றமுடன் வாழ வைக்கும்...

உங்களுக்கு ஓர் உயர்விடத்தை
நிரந்தர சுவன உறைவிடத்தை வல்ல இறைவன் அருள் கொண்டு வழங்க பரிபூரண மன்னிப்பை இறைவன் வழங்கி நற்பாக்யம் நிறை நபிகளாரோடும் அவர்கள் தம் தோழர்களோடும் சட்டவியல் மேதைகளும் ஒன்றிணைக்க இதயம் கசிந்த கண்ணீருடன் துஆ செய்கிறேன்...

கற்றவர்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்று செல்வதைப் போல...

உங்கள் மண்ணறையிலும் சிறப்பு சேர்க்க துஆ செய்து பிரிய மனமில்லாமல் பிரியமுடன் 
விடை கொடுக்கிறேன்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு எங்கள் ஆசானே....
வலி மிகுந்த இதயத்துடன்...
உங்கள் மாணவ மகன்...
S.S. ஷேக் ஆதம் தாவூதி
கடலங்குடி
ரவ்ளத்துல் உலமா சபை செயலாளர் சித்தரேவு...


எளிமையின் ஆசான் அல்லாமா உமர் ஃபாரூக் ஹள்ரத் கிப்லா

17 - வயதில் ஹாஃபிழ், ஆலிம் தாவூதி ஸனது பெற்றார்கள்.

18 வயதில் தாருல் உலூம் தேவ்பந்தில் தவ்ரா (மேற்படிப்பு) ஓதினார்கள்.

19 வயதில் பெங்கலூர் தாருல் உலூம் ஸபீலுர் ரஷாதில் பேராசிரியராக பணியாற்றினார்கள்.

20 வயதில் ஈரோடு தாவூதிய்யா அரபிக்கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்து ஏறக்குறைய 60 வருடங்கள் தாவூதிய்யாவிலேயே கல்விப்பணியாற்றியுள்ளார்கள்.

இதில் முதல்வராக 35 வருடங்கள் பணியாற்றியுள்ளார்கள்.

ஹள்ரத் கிப்லா அவர்கள் மற்ற உஸ்தாதுமார்கள் எடுக்க தயங்குகின்ற கிதாபுகளை எடுப்பார்கள். நூருல் ஈழாஹ், தஸ் ரீஹுல் மன்திக்,ஷரஹுத் தஹ்தீப்,முக்தஸருல் மஆனி, போன்ற கிதாபுகளை ஹள்ரத்தவர்களிடம் ஓதியுள்ளேன். சிரமமான இடங்களில் கூட மிக எளிமையான விளக்குவார்கள். குறைவான வார்த்தைகளில் நிறைவான கருத்துக்களை கூறுவதில் ஹள்ரத்துக்கு நிகர் ஹள்ரத்தான்.

படோபடம் இல்லாத எளிமையான வாழ்விற்கு சொந்தக்காரர்கள். 

பேருந்தில் வரும் போது புதிதாக வரும் மாணவர் ஹள்ரத்திடம் நீங்க ரகீப்ஸாவா எனக்கேட்டபொழுது ஹள்ரத் அவர்கள் ஆம என்று சொல்ல இந்த பெட்டியை கொஞ்சம் தூக்கி வாங்க. ஹள்ரத்தும் அதைவாங்கி கொண்டு மதரஸாவில் கொண்டு வந்து கொடுத்தார்களாம் அவ்வளவு எளிமைக்குரியவர்கள்.

பிக்ஹு விஷயமாக பற்பல நூல்கள் எழுதியுள்ளார்கள்.குறிப்பாக ஷாபான் வழக்கில் இந்தியா முழுவதும் பெரும் கொநதளிப்பு ஏற்பட்ட போது. ஹள்ரத் அவர்கள் கொடுத்த குறிப்புக்கள் பாராளுமன்றத்தில் பனாத் வாலா பேசுவதற்கு பெரும் துணையாக இருந்தன.

சமீபத்தில் நடந்த முத்தலாக் பிரச்சனையிலும் ஹள்ரத்தின் பங்களிப்பு பிரதானமானது.

தங்களுக்கு கீழே பணியாற்றும் உஸ்தாதுமார்கள் மாணவர்களாக இருப்பினும் மிக கண்ணியமாக நடந்து கொள்வார்கள்.

ஆறாம் ஜும்ரா வரை மாணவர்களை பெயர் சொல்லி அழைப்பார்கள். ஏழாம் ஜும்ரா மாணவர்களை மரியாதையாக கூப்பிடுவார்கள்.

சேட்டை செய்யும் மாணவரிடம் உன்னை நாஜிராக்க பத்துஆ செய்திருவேன் என்று மிரட்டுவார்கள் .

மொத்தத்தில் ஹள்ரத் பெருந்தகை அவர்கள் அல்லாஹ்வினால் மக்பூலான ஆலிமாக விளங்கினார்கள். தமிழத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மூத்த முத்தாய்ப்பான பெரும் மார்க்க அறிஞராக அறியப்பப்பட்டவர்கள். 

ஹள்ரத் அவர்களின் இழப்பு தாவூதிவிற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அன்னாரின் மறுமை வாழ்வில் உயர்ந்த தரஜாக்களை ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் கொடுப்பானாக!

இறங்கல்.
  மௌலானா, ஹாஃபிழ், 
காரிநைனார் முஹம்மது பாகவி. மற்றும் நூருல் இஸ்லாம்அரபிக்கல்லூரிபேராசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள் . சேலம்.

கரையும் கையிருப்புகள்.
<><><><><><><><><>

கையிருப்புகளில் ஒவ்வொன்றையாக இழந்து கொண்டேயிருக்கிறோம்.

நபி(ஸல்) அவர்களின் எளிமையை நினைவூட்டிக் கொண்டிருந்த சீலர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுக்கொண்டேயிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் ஜமாஅத்துல் உலமா சபையை கட்டிக்காத்த கண்ணியவான்கள் ஒருவர் பின் ஒருவராக காலமாகிக் கொண்டேயிருக்கிறார்கள்.

“வாப்பா” என்று வாய் நிறைய நாங்கள் அழைக்கும் ஷைகுல் ஹதீஸ், என்னை வளர்த்த இன்னோர் அன்னை TJM என்ற மூன்றெழுத்து நாயகர் இவர்களின் வரிசையில் இப்போது ஈரோடு உமர் ஃபாரூக் தாவூதி அவர்களும் இணைந்து கொண்டார்கள்.

(இன்று 18.12.2022 ஞாயிறு காலை அன்னார் இறைவனிடம் ஏகினார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).

ஏகனாம் இறைவனின் தவிர்க்க முடியாத தீர்ப்பு இது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் மனம் ஏற்கத் தயங்குகிறது.

ஒவ்வொரு மரணமும் நம்மை சில நாட்கள் பாதிக்கின்றன. பின்னர் மெல்ல மீண்டு இயல்புக்கு திரும்பி விடுகிறோம்.

ஆனால் ஒவ்வொரு பேராளுமைகளின் மரணங்களும் நமக்கொரு கேள்வியை கேட்கின்றன: “இவ்வுலகில் எங்களுக்கு பின்னரும் உயிர்வாழும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நீங்கள் எங்களின் இடத்தை நிரப்ப முடியுமா?”

இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

ஈரோடு உமர் ஃபாரூக் தாவூதி ஹழ்ரத் அவர்களிடம் நான் அவதானித்த ஒரு குணம் அவர்கள் எந்த முடிவுகளையும் தள்ளிப்போட மாட்டார்கள். தயக்கமின்றி விரைந்து எடுப்பார்கள்.

மரணம் என்ற இந்த முடிவாவது அவர்களுக்கு கொஞ்சம் தாமதமாக வந்திருக்கலாமோ!

ஆம். அடுத்த மாதம் (2023 ஜனவரி 15,16 ஆகிய இரு தேதிகள்) ஈரோட்டில் ஜமாஅத்துல் உலமா சபை நடத்தவிருக்கின்ற பிரம்மாண்டமான மாநிலந் தழுவிய “தேச ஒற்றுமை” மாநாட்டில் பங்கேற்றிருந்தால் மாநாட்டின் முடிவில் எங்களை மலர்ந்த முகத்துடன் பாராட்டி, கனிவான துஆவும் செய்திருப்பார்கள்.

அந்த துஆக்களை நினைத்துக் கொண்டே இன்னும் கொஞ்ச நாட்கள் பொதுவாழ்வை ஓட்டிக் கொள்வோம்.
என்ன செய்வது! அல்லாஹ்வின் நாட்டத்தை பொருந்திக் கொள்வோம்.

-இல்யாஸ் ரியாஜி
18.12.2022.

ஈரோடு தாவூதிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வரும் நீண்ட கால ஜமாத்துல் உலமா சபையில் மூத்த தலைவர்களில் ஒருவருமான உமர் பாரூக் தாவூதி ஹஜ்ரத் அவர்கள் வஃபாவிட்டார்கள் என்று வரும் செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இன்னாலில்லாஹி…

இஸ்லாமிய சட்டத்துறையில் ஹஜ்ரத் அவர்களின் ஆளுமை உலகறிந்தது என்றாலும் அவர்களது எளிமையும் தொண்டாற்றுகிற இயல்பும் உன்னதமானது

சுமார் 30 வருடங்களுக்கு முன் ஹஐ்ரத் அவர்கள் கோவை மாவட்ட ஜமாத்துல் உலமா சபையினுடைய செயலாளராக பணியாற்றுகிற காலத்தில் ஒரு நாள் பூமார்க்கெட்டில் உள்ள லங்கர் கானா பள்ளிவாசலில் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார். நாங்கள் ஆலிம்களுக்கு உணவு பரிமாறினோம் முதலில் சாப்பிட்டு முடித்து விட்ட ஹஜ்ரத் அவர்கள் ஆலிம்கள் சாப்பிட்ட இலையை எடுக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் பதறி “ ஹஜரத் நாங்கள் செய்கிறோம்” என்றோம் . அதனால் என்ன நானும் செய்கிறேன் என்று அவர்களும் பங்கு எடுத்துக் கொண்டார். 

ஆலிம்களின் மூத்த ஒரு தலைவராக இருந்த போதும் கூட ஹஜ்ரத் அவர்களை சிந்திக்கிற ஒவ்வொரு சமயத்திலும் தொண்டாற்றுகிற அவரது இயல்பே என் மனக்கண் முன் நிற்கும்

ஒருமுறை வேலூரில் இருந்து திரும்புகிறபோது ரயில் பெட்டியில் அவர்கள் நின்று கொண்டே பயணித்த காட்சியை பேஸ்புக்கில் பதிவிட்டேன் அதற்கு கிடைத்தது போன்ற வரவேற்பு என் பதிவுகளில் வேறு எதற்கும் கிடைத்ததில்லை 

ஜமாத்துல் உலமா சபையை தன் ஊனிலும் உணர்விலும் கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள். தள்ளாமையிலும் கூட ஒரு இளம் பங்கேற்பாளரைப் போல அவர்கள் செயற்குழு பொதுக்குழு கூட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வார்கள். நிறைவாக மாநில ஜமாத்தில் உலமா சபையில் புதிய பைலாவை உருவாக்கும் குழுவுக்கு தலைமை தாங்கினார்.

ஜமாத்துல் உலமாவுக்கு உண்மையில் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு இது.

    தமழக ஆலிம்களுக்கு ஏற்பட்டிருக்கிற பெரும் துயரம் இது.

ஹஸரத் அவர்களை அல்லாஹ் ஒப்புக்கொள்ளட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?