#mahadavapuram #mettupalayam#kattor#covai#coimbatore#mahadevar

தியாகி தோழர் மகாதேவன் அவர்களின் 44 ஆவது நினைவு நாள்
(மறைவு 10.12.1979)

மேட்டுப்பாளையத்தின் முக்கிய நகரப்பகுதி மகாதேவபுரம் ஆகும். மகாதேவர் உருவாக்கிய இப்பகுதி அவர் பேரிலேயே மகாதேவபுரம் என்று அழைக்கப்படுகிறது.

பிறப்பு

மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ணதேவருக்கும், குள்ளியம்மாளுக்கும் மகனாக 03-12-1912ல் பிறந்தவர். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இருந்த போதிலும் பொது அறிவு விசயத்தில் மிகவும் புத்தி கூர்மையானவர்.

ஓரளவு செல்வ செழிப்புடன் பிறந்த அவருக்கு பல ஏக்கர் புன்செய் நிலம், பாக்கு தோப்பு இருந்தது. தற்போதைய மகாதேவபுரத்தில் அவரின் சொந்த இடத்தை, தன்னை நாடி வந்த வீடில்லாத சாதாரண ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு மிக குறைந்த விலைக்கு இடம் கொடுத்து ஆதரித்தார். முற்றும் இயலாதவர்களுக்கு பணம் எதுவும் பெறாமலேயே இடத்தை கிரயம் செய்து கொடுத்தார். அவ்வாறு உருவான குடியிருப்பே மகாதேவபுரம் என்று அழைக்கப்படுகிறது.

*சுதந்திரபோராட்டம்*

அவரின் அரசியல் வாழ்க்கை காங்கிரஸ் கட்சியில் தான் துவங்கியது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ஒருமுறை கோவைக்கு சென்று கொண்டிருந்த அரசு கஜானா வாகனத்தை அவரது நண்பர் இராமசாமி என்பவருடன் சேர்ந்து துப்பாக்கி முனையில் மடக்க முயற்சித்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
அப்போதைய ஆங்கில அரசின் கவர்னர் ஒருவர், ரயிலில் உதகைக்கு பயணம் செய்து கொண்டு இருந்த போது ரயில் பாதையில் குண்டு வைத்து கவிழ்க்க முயன்று கைதானார். 

கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார். ஆகஸ்டு 1942 போராட்டத்தில் கலந்து கொண்டு அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார். நான்காண்டு காலம் சிறையில் இருந்த மகாதேவர் அங்கு அவருடன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு கம்யுனிஸ்ட் ஆக மாறினார். 

*தொழிற்சங்கம் உருவாக்கம்*

மேட்டுப்பாளையத்தில் பல தொழிற்சங்கங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர் மகாதேவர். உருளை கிழங்கு மண்டிகளில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களின் உரிமைகளை பெறுவதற்காக சங்கம் உருவாக்கியவர் மகாதேவர். மேட்டுப்பாளையம் நீலகிரி மோட்டார் தொழிலாளர் சங்கத்தை அமைப்பு ரீதியாக பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.

அப்போது நடூரில் இருந்த காப்பி வொர்க்சில் கூலி உயர்வு வேண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அந்த காப்பி வோர்க்சின் உரிமையாளர் கோவையை சேர்ந்த  கே,ஆர்.ஜி. என்று அழைக்கப்பட்ட கே.ஆர்.கோவிந்தராஜூலு நாயுடு. மிகவும் செல்வாக்கு பெற்ற காங்கிரஸ்காரர் அவர். போராட்டம் ராஜம்மாள் வெள்ளிங்கிரி தலைமையில் தீவிரமாக சென்றது. கந்தசாமி, அருணாசலம், சுகுமாரன், மருதாசலம், சுந்தரம், சுப்பிரமணி, குமாரசாமி, ராதாகிருஷ்ணன் போன்றோரின் உதவியுடன் போராட்டம் நடந்து வந்தது.

 பிடிவாதத்திற்கு பெயர் போன கே.ஆர்.ஜி அவர்களுடன் சாமர்த்தியமாக பேசி கூலி உயர்வை பெற்று போராட்டத்தை வெற்றி பெற வைத்தார் மகாதேவர்.
தொழிலாளர்களுக்கு போதுமான உரிமைகள் கிடைக்காத அந்த காலத்தில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார் மகாதேவர். ஆலோசனைகள் மட்டுமல்ல, அவர்களுக்காக போராட்ட களத்தில் முன்னின்றார்.

*பாக்குத் தொழிலாளர் போராட்டம்*

மேட்டுப்பாளையம் வரலாற்றில், பாக்குத் தொழிலாளர்கள் போராட்டம் மிக முக்கிய நிகழ்வாகும். அன்று மேட்டுப்பாளையத்தில் அதிக வேலைவாய்ப்பு கொடுத்த தொழில்களில் ஒன்று பாக்குத் தொழில் ஒன்று, அதனை சார்ந்து பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். அந்த பாக்குத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வெள்ளியங்கிரி தொடர் உண்ணாவிரதம் இருந்தார். 

அந்த சமயத்தில் கருப்பண்ணன், சி,இராமச்சந்திரன், பி.சாமிநாதன், டி.ரங்கசாமி, பாக்குக்காரத்தெரு பழனியப்பன், செல்லமூப்பன், மாரியப்ப நாடார், காளிமுத்து, அய்யாவு, என்.ஏ.கந்தசாமி, சுகுமாரன், அந்தோனி, கே.சங்கரன், உன்னிபாலன் உட்பட பலரை ஒருங்கிணைத்து போராட்டத்தை பொதுமக்கள் நகரின் வேறு தொழிலாளர்கள் இடையே கொண்டு சென்றார், சாதாரண மக்கள் கூட இவர் மீதுள்ள நம்பிக்கையால் மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

*மணி நகர் பள்ளி*

மணி நகர் பகுதியில் பள்ளி எதுவும் இல்லாமல் அந்த பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க சிரமப்பட்டனர். சி.ராமச்சந்திரன், சி.ஏ.அந்தோணி, உன்னிபாலன், சங்கரன், சுசிலா மற்றும் காளிமுத்து போன்றோரின் துணை கொண்டு பொது மக்களிடம் நன்கொடை பெற்று குறுகிய காலத்தில் அங்கு ஆரம்பப்பள்ளி ஒன்றை கட்டி நகராட்சியிட,ம் ஒப்படைத்தார். 

*நகராட்சி உறுப்பினராக....*

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மூன்று முறை உறுப்பினராக இருந்தார் மகாதேவர். அவர் உறுப்பினராக இருந்த காலத்தில், நகரை ஒட்டியுள்ள புறம்போக்கு பகுதிகளில், வீடு வசதியற்ற மக்கள் வீடு கட்டி குடியிருக்க உதவியாக இருந்தார். அவ்வாறு உருவான பகுதிகளில் மணிநகர், எம்.எஸ்.ஆர்.புரம், சங்கர் நகர், காமராஜ் நகர், எஸ்.எம்.நகர் போன்றவை  முக்கிய பகுதிகளாகும்.

அவர் நகரமன்ற உறுப்பினராக இருந்த ஒரு சமயத்தில் மகாதேவபுரம் பகுதிகளில், வளர்ச்சி பணிகள் செய்ய நகராட்சி ஒத்துழைக்க மறுத்ததை கண்டித்து வரி கொடா போராட்டத்தை நடத்தினார். 

ஒன்று திரண்ட மக்கள்  நகராட்சியின் எந்த வரிகளையும் செலுத்த வில்லை. பணிந்த நகராட்சி நிர்வாகம் அதன் பின்னர் சாலை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தந்தது. இந்த போராட்டத்தில் காளிமுத்து அவர்களும் முக்கிய பங்கு வகித்தார்.
1962-63ல் சில விசமிகள் தூண்டுதலில் நடைபெற்ற இன கலவரத்தை நிறுத்தி அமைதிப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார். மக்களின் அச்சத்தை போக்கி நிலைமை சீராக பிரச்சாரம் செய்தார்.

*கலை இலக்கியம்*

மேட்டுப்பாளையத்தில் கலை இலக்கிய பெருமன்றம் துவங்கவும், அதன் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தவர் மகாதேவர். அதன் துவக்கக் காலத்தின் நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அப்போதைய பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.லட்சுமி தலைமையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்தது, சோவியத் நாட்டின் உஸ்பெகிஸ்தான் கலைக்குழு ஒன்று கோவை வந்தபோது, அவர்களை நம் நகருக்கு அழைத்து வந்தார். இப்போது மூடி கிடக்கும் சிவரஞ்சனி தியேட்டர் அப்போது கே.எம்.எஸ். தியேட்டர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அங்கு அந்த குழுவினரின் புகழ்ப் பெற்ற பாலே நடனம் நடந்தது. அவர்களது நாட்டின் பருத்தி அறுவடை பாடல்களை, நடனமாக வடிவமைத்து இருப்பார்கள். அப்போது அதைப் பார்த்த  நகர மக்களின் நீங்கா நிகழ்வாக அந்த நிகழ்ச்சி அமைந்தது.
மறைவு
கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த மகாதேவர், கம்யுனிஸ்ட் கட்சி நடத்திய உள்ளூர் தொழிற்சங்க போராட்டம் முதல் நாடு தழுவிய நிலமீட்சி போராட்டம் வரை அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். தனது முதுமை காலத்திலும் மக்களுக்கான போராட்டங்களில் பங்காற்றியவர். அவரது தியாகத்துக்கு உறுதுணையாக விளங்கினார் அவரது மனைவி சிவகாமி அம்மையார். 

வாழும் வரை எளிய மக்களின் குரலாக வாழ்ந்த மகாதேவர் 10-12-1979 ல் மறைந்தார். இந்த நாளில் அவரை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறது *நமது மேட்டுப்பாளையம்*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?