#மதினா #அப்துல்ரஹ்மான்
புண்ணிய பூமி மதீனா மாநகர்.
காருண்ய நபிகளாரின் கண்ணிய தேகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் புண்ணியபூமி மதீனா மாநகர்; அவர்கள் துயில்கொள்ளும் புனித ரவ்லா ஷரீஃப்தான் மதீனா மாநகரத்து மஸ்ஜித் 'ஹரம் ஷரீஃப்';
அந்நகரத்தின் வீதிகளில் உலா வந்தால் மலர்களின் மகரந்தப் பரப்பில் நடப்பதைப் போன்ற மென்மை உணர்வு; ஆரவாரமில்லாமல் ஆனந்தமாய் மெல்ல வருடிப் போகும் தெவிட்டாத தென்றல்; அண்ணலாரின் அகங்குளிர்ந்த அன்சாரிகளின் சுவடுகள் ததும்பும் நிலப்பரப்பு; உலகில் அந்த மாநகர் மட்டுமே சுவனத்தின் சுந்தரப் பகுதியை நம் கண்களுக்குக் காட்டிடும் நயத்தகு நந்தவனம்; தேன் சுரக்கும் அந்த அதிசயப் பகுதியான சுவனத்து இன்பம் நம் இதயத்திற்கும் வேண்டுமே! அவசியம் வேண்டும்; அல்லாஹ் நாடினான். பெருமானாரின் சன்னிதானம் வந்து நேரில் சரணடைந்த மனநிறைவு.
சென்ற ஈராண்டுகளுக்கு முன்புதான் ஐ.நா. சபையின் உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) ஓர் ஆய்வை வெளியிட்டது. "உலக நாடுகளின் பல்லாயிரக்கணக்கான மாநகரங்களில் அமைதியும் தூய்மையும் நிரந்தரமாக நிலவும் முதல்தர மாநகர் மதீனா" என ஆய்வில் முதலிடம் தந்து பிரகடனப்படுத்தியது.
இந்த ஆய்வில் இடம்பெற்ற 72 நாடுகளின் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரத் துறை வல்லுநர்களில் ஒருவர்கூட முஸ்லிம் கிடையாது என்கிறது அவ்வறிக்கை.
யா ரஸூலுல்லாஹ்! இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் துயிலுறும் பூமி நற்பாக்கியங்கள் அனைத்தும் நிறைந்த நந்தவனம் அல்லவா?
'யத்ரிப்' எனப் பெயர்கொண்ட இந்நகர் "மாநகர்" எனும் பொருள்கொண்ட மதீனாவாக வரலாற்றில் பிரவாகம் எடுத்த அதிசயமே உங்களால்தானே! உலக மாந்தர் அனைவருக்கும் கிடைக்கப் பெற்ற
அருட்கொடை என்கிறதே அருள்மறை. அந்த அருள்மறை திருக்குர்ஆனாகவே வாழ்ந்த அற்புதம் அல்லவா நீங்கள்!
மனக்கண்ணால் மட்டுமே மானசீகமாகப் பார்க்கிறோம் யாரஸூலுல்லாஹ். உங்களின் சுந்தர வதனத்தால் 'ஷஃபாஅத்' எனும் பரிந்துரை பெற்று சுவனம் செல்ல ஏங்கி நிற்கிறோம் யாரஸூலுல்லாஹ். அந்நாளை நோக்கிய எங்கள் பயணமே இவ்வுலக வாழ்வின் இறுதி இலக்கு.
இறைவா! அதற்குத் தகுதியுடையோராக ஆக்கி ஈடேற்றம் தருவாயா! ஆமீன்.
------------------
*எம். அப்துல் ரஹ்மான்*
கருத்துகள்
கருத்துரையிடுக