பிக்ஹ்
ஹுலஃபாயே ராஷிதீன்களின் தவ்ஹீது ! ! !
நாம் கட்டுரைகளில் வைக்கும் ஆதாரங்களை எல்லாம் விட்டுவிட்டு, அதற்கு நாம் கொடுக்கும் வியாக்கியானங்களை சிலர் விமர்சிக்கின்றனர்.
எனவே வியாக்கியானங்களை குறைத்துக்கொண்டு ஆதாரங்களை மட்டும் வைக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...
இந்த தலைப்பிற்கு செல்வதற்கு முன்னால் " உஸுலுல் ஃபிக்ஹு " எனப்படும் இஸ்லாமிய சட்டக்கலையின் ஒரு சிறு பகுதியையும், உஸுலுல் ஹதீஸ் எனும் ஹதீஸ் கலையின் சிறு பகுதியையும், இறுதியாக அகீதாவின் சிறு புரிதலையும் ஆதாரங்களின் அடிப்படையில் இன்ஷா அல்லாஹுத் தஆலா பார்க்கலாம்...
அஹ்லுஸ் ஸுன்னாவினரின் மார்க்க ஆதாரம் நான்கு...
1. குர்ஆன்,
2. ஹதீஸ்,
3. இஜ்மா,
4. கியாஸ்.
இதில் குர்ஆன், ஹதீஸ் நமக்கு தெரியும்.
இஜ்மா என்றால் என்ன ?
ஒரு விஷயத்தில் குர்ஆன், ஹதீஸில் நேரடியான ஆதாரம் இல்லாத பொழுது ஒட்டுமொத்த சஹாபாக்கள் என்ன தீர்ப்பை கொடுக்கிறார்களோ அதற்கு இஜ்மா எனப்படும்...
உதாரணத்திற்கு,
குர்ஆனை ஒட்டுமொத்தமாக புத்தகவடிவில் ஒன்று சேர்ப்பது நபிகளார் காலத்தில் இல்லை, அவ்வாறு செய்யுங்கள் என்றும் நபிகளார் சொல்லவில்லை.
காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையில் சஹாபாக்கள் ஒன்றுபட்டு இவ்வாறு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள், இதற்கு பெயர்தான் இஜ்மாஃ.
இந்த இஜ்மாஃ என்பது கதயீ தலீல் எனப்படும் வலுவான மார்க்க ஆதாரமாகும்...
தனிப்பட்ட ஒரு ஸஹாபி மட்டும் மற்ற ஏனைய ஸஹாபாக்களுக்கு மாற்றமாக அறிவித்திருந்தால் அந்த கருத்துக்கு தஃபர்ருது எனப்படும்,,,
இது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படாது...
ஏனெனில் அனைத்து சஹாபாக்களுக்கும் மாற்றமாக இருப்பதால்...
ஒட்டுமொத்த சஹாபாக்களும் ஒரு விடயத்தில் உடன்பட்டால் அதற்கு இஜ்மாஃ ஸரீஹ் எனப்படும்.
இந்த வகையில் பார்க்கும் போது
இஜ்மாஃ இரண்டு வகைப்படும்..
1. இஜ்மாஃ ஸரீஹ்
(அனைவரும் இந்த விஷயத்தில் உடன்பட்டு இருக்கிறார்கள்.
எனவே இது மிக வலுவான ஆதாரம்).
2. இஜ்மாஃ ஸுகூதீ
ஒரு சஹாபி ஒரு செயலை செய்தார்கள்,
ஏனைய ஸஹாபாக்கள் அதைக் கேள்விப்பட்டு அதை எந்த விதத்திலும் விமர்சிக்கவில்லை என்றால் அதற்கு இஜ்மாஃ ஸுகூதீ எனப்படும்.
இந்த இரண்டாம் வகையான இஜ்மாஃ ஸுகூதீயில் தான் தடம்பிரள்வு ஏற்படுகிறது,
ஏனெனில் இது ஒரு நபரின் செயலை போல தெரிகிறது, ஒரு நபரின் செயலாக இருந்தாலும் ஒட்டுமொத்த ஸஹாபாக்களின் அங்கீகாரம் உண்டு என்ற விதத்தில் இதுவும் வலுவான இஜ்மாஃ தான்,
உஸூலுல் ஃபிக்ஹில் உள்ள மூன்று விதமான இந்த புழக்கச் சொற்களை நினைவில் கொள்ளுங்கள்.
1. தஃபர்ருது تفرد
2. இஜ்மாஃ ஸரீஹ் اجماع صريح
3. இஜ்மாஃ ஸுகூதீ اجماع سكوتي
இதில் இஜ்மாஃ ஸரீஹ் மிகத் தெளிவானது.
தஃபர்ருது மற்றும் இஜ்மாஃ ஸுகூதீ ஆகிய இரண்டிற்கும் மட்டும் வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.
தஃபர்ருது என்பது ஏனைய பெரும்பாண்மை ஸஹாபாக்களுக்கு முரண்பட்ட, ஒரு ஸஹாபியின் தனிப்பட்ட கருத்து.
1. ஃபிக்ஹிலும் தஃபர்ருது உண்டு,
உதாரணமாக,
உளு செய்யும் பொழுது கண்களின் கருவிழிகளையும் கழுவ வேண்டும் என்பது இப்னு உமர் ரலியல்லாஹு அவர்களின் ஃபிக்ஹில் ஏற்பட்ட தஃபர்ருதான கருத்து,
2. அகீதாவின் مسائل فروعي (கிளைச் சட்டங்)களிலும் தஃபர்ருது உண்டு,
அல்லாஹ்வை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தது கண்களிலா ? இதயத்திலா ?என்பதில் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் ஹஜ்ரத் அபூதர் கிஃபாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் கருத்து வேறுபடுகின்றனர்.
(இது அகீதாவில் தஃபர்ருது)
3. ஹதீஸின் ரிவாயத்களிலும் தஃபர்ருது உண்டு.
மிகப் பிரபல்யமாக சொல்லப்படக்கூடிய ஹதீஸ்,
انما الأعمال بالنيات
செயல்கள் அனைத்தும் எண்ணங்களை கொண்டே அமைகின்றன,
இது பிரபலமாக பேசப்பட்டாலும் இதன் இரண்டாம் மூன்றாம் அறிவிப்பு வரிசைகள் தான் அதிகமாக இருக்கிறது,
ஆனால் இதை அறிவிக்கும் ஒரே ஒரு சஹாபி உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அவர்கள் மட்டும்தான்,
எனவே இது ஹதீஸில் ஏற்படக்கூடிய தஃபர்ருது ஆகும்.
இந்த ஹதீஸில் ஏற்படக்கூடிய தஃபர்ருதுகளை ஹரீபான ஹதீஸ்கள் என்றும் சொல்வார்கள்.
பேச்சுவழக்கில் தான் மக்களிடத்தில் மஸ்ஹூராக இருக்கிறது, ஆனால் தரத்தில் ஹரீப் வகையாக இருக்கிறது.
தஃபர்ருதை பொறுத்தவரை அது ஏனைய சஹாபாக்களின் இஜ்மாஃஉக்கு மாறுபட்டால் அதை பல பெயர்கள் சொல்லி நீக்கிவிடுவார்கள்...
ஷாது, ஹரீபு, தஃபர்ருது என்று அது ஒதுக்கப்படும்...
முத்ஆ எனும் தற்காலிகத் திருமணம் கூடும் என்பது இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தஃபர்ருதான ஃபிக்ஹு ஆகும்.
அதை அவர்கள் வாழும் காலத்திலேயே ஏனைய சஹாபாக்கள் கண்டித்து விட்டார்கள்.
இந்த மசாயிலைப் பிடித்து தொங்கிக் கொண்டுதான் முத்ஆ திருமணம் மார்க்கத்தில் உண்டு என்று பனூ அப்பாஸியாக்கள் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தி கொண்டிருந்தனர்.
இது கூடாது என்று மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஃபத்வா கொடுத்ததால் கசையடி அடிக்கப்பட்டார்கள்...
இன்றைய சில ஷீஆக்களின் வாதமும் முத்ஆ திருமணம் கூடும் என்பதே, மாறாக அது தடைசெய்யப்பட்ட ஹராமாகும்.
தஃபர்ருதான கருத்து எப்பொழுது இஜ்மாவாக மாறும் என்றால்,
அவர்களின் அந்தக் கருத்தானது மூத்த சஹாபாக்களிடம் காட்டப்பட்டு அனைவரும் அதை பொருந்திக் கொண்டாலோ அல்லது ஹுலஃபாயே ராஷிதீன்களிடமோ , இஸ்லாமிய தலைநகரான மதீனாவின் சஹாபாக்களிடமும் அங்கீகரிக்கப்பட்டாலோ அப்பொழுது அது இஜ்மாஃ ஸுகூதீ அந்தஸ்தில் ஆகிவிடும்.
எனவே அந்த அறிவிப்பை, தஃபர்ருது எனும் தனிப்பட்ட கருத்து என்றெல்லாம் சொல்ல முடியாது, மாறாக அது இஜ்மாஃ ஆகிவிடும்.
3 நூற்றாண்டில் ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் ஒவ்வொரு விதமான சட்டங்கள் இருந்தன.
சஹாபாக்களை பொறுத்தவரைக்கும் ஹதீஸ்களின் அறிவிப்பு விஷயத்தில் அனைவரும் சமமே.
الصحابة كلهم عدول
ஸஹாபாக்கள் அனைவரும் நீதவான்களே...
எனவே ஸஹாபாக்களில் நல்ல சஹாபி, கெட்ட சஹாபி, ஷீஆ ஸஹாபி, ஹவாரிஜ் ஸஹாபி, சுன்னா ஸஹாபி, பிதுஅத் ஸஹாபி என்றெல்லாம் கிடையாது.
சஹாபி என்று வந்து விட்டாலே அவர்கள் நீதவான்கள் தான் என்பதில் ஏகோபித்த அறிஞர்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்.
எனவே இஜ்மாஃயே ஸுகூதியைப் பொறுத்தவரைக்கும்,
ஒரு சஹாபி ஒரு செயலை செய்து அதை ஏனைய சஹாபாக்கள் எந்த விமர்சனம் செய்யவில்லை என்றால் அது எல்லா சஹாபாக்களும் அங்கீகரிக்கப்பட்ட இஜ்மாயே ஸுகூத்தி தான்.
யாருக்கும் பயந்தும் எந்த சஹாபியும் சத்தியத்தை மறைத்தது கிடையாது.
ஒருவர் ஒரு அசத்தியத்தை வெளிப்படுத்தி அதைப்பார்த்து பொறுத்துக்கொள்ளும் பண்பு சஹாபாக்களுக்கு கிடையாது.
தவறு என்று தெரிந்து விட்டாலே அதை சரி செய்து விடுவார்கள், இணைவைப்பு உருவாகுவதற்கு முன்னாலேயே பிஞ்சிலேயே அதை கிள்ளி எறிந்து விடுவார்கள்.
ஆனால் இரண்டாம் நூற்றாண்டில் இஜ்மாஃ ஸுகூதியானது விமர்சனத்திற்கு உள்ளானது.
ஒரு தாபியீ ஒரு விஷயத்தை சொல்லி அதில் ஏனையோர் ஒன்றுமே சொல்லவில்லை என்றால் அதை பிறர் ஏற்றுக் கொண்டார்கள் என்ற அர்த்தம் இருக்கிறதா என்று வரும்பொழுது,
மூன்று கருத்துக்கள் நிலவுகின்றன,
முதலாவது கருத்து :
القول الأول: قول الأحناف والحنابلة: أنه إجماع وهو حجة
அது தாபியீன்களின் ஏகோபித்த இஜ்மாவாகவாகவும், ஹுஜ்ஜதாகவும் தான் கணிக்க வேண்டும் என்கிறனர் ஹம்பலி மற்றும் ஹனஃபீ மதுஹபைச் சார்ந்தோர்.
இரண்டாவது கருத்து
:
قول بعض الشافعية من المحققين وبعض الأحناف: أنه ليس بإجماع، لكنه حجة ظنية لا يلزم العمل به.
அது இஜ்மாஃ இல்லை ஆனாலும் அது மார்க்கத்தில் ஹுஜ்ஜத்து தான்.
இதை சொல்வது ஷாஃபியாக்களில் முதிர்ச்சியடைந்த அறிஞர்களும் சில ஹனஃபிய்யாக்களும்.
மூன்றாம் கருத்து :
அனைத்து ஷாஃபியாக்கள் மற்றும் மாலிகிய்யாக்கள் கூறுகிறார்கள்:
அது இஜ்மாஉம் இல்லை, ஹுஜ்ஜதும் இல்லை.
காரணம் மூன்று விதமான நிலைகள் இருக்கின்றன.
ஒருவர் ஒரு செயலைச் செய்து அதை யாரும் விமர்சிக்க வில்லை என்றால்.
ஒன்று,
1.அவருக்கு அந்த விஷயம் பற்றிய ஞானம் இல்லாமல் இருக்கலாம், அல்லது அதை ஆய்வு செய்யக் கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கலாம்.
2. அநியாயக்கார அரசனை பயந்து வெளியே தன்னுடைய சத்தியக் கருத்தை சொல்லாமல் இருந்திருக்கலாம்.
3. அல்லது அவர் செய்தது சரியா ? தவறா ? என்பதற்குறிய சரியான ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதற்கு காலதாமதம் ஆகியிருக்கலாம்.
இந்த மூன்று விதமான காரணங்கள் இருப்பதால் ஒருவர் ஒரு சட்டத்தை சொல்லி ஏனையோர் விமர்சனம் செய்யவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்ற அழகான உஸுலுல் ஃபிக்ஹு சட்டத்தை இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இயற்றினார்கள்.
முதன்முதலில் இந்த சமூகத்திற்கு இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி உதவி செய்தவர்கள் இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தான்.
அதே நேரத்தில் இந்த சட்டம் என்பது தாபியீன்கள் மற்றும் தபஃ தாபியீன்கள் பிறகு அதற்குப் பின்னால் வந்தவர்களைத் தான் குறிக்கும்.
சஹாபாக்களை குறிக்காது.
ஸஹாபாக்களை பொறுத்தவரைக்கும் அனைவரும் நீதவான்கள்.
பொய் பேசாதவர்கள், அல்லாஹ்வுடைய தூதர் விஷயத்தில் மிக பயபக்தியுடையவர்கள்,
எனவே சஹாபாக்கள் அறிவிக்கும் அறிவிப்பை பொருத்தவரைக்கும் அது உண்மையா ? பொய்யா ? என்ற ஆராய்ச்சியே வராது.
ஒரு சஹாபி ஒன்றை செய்து அதை ஏனையோர் விமர்சிக்க வில்லை என்றால் அது மற்ற சஹாபாக்களின் அங்கீகாரம்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஒரு கால் ஒரு ஸஹாபியின் தனிப்பட்ட கருத்து ஒன்று பெரும்பான்மை கருத்துக்கு மாற்றமாக உள்ளது என்றால் உடனடியாக அதற்கு கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்துவிடும்.
இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்,,,
இப்னு தைமிய்யாவிடம் உஸூலுல் ஃபிக்ஹில் ஏற்பட்ட கோளாறு என்பது இதில் தான்,,,
ஒரு சில சஹாபிகளின் இந்த ரிவாயத்களை இஜ்மாஃ ஸுகூதியாக பார்க்காமல் தஃபர்ருதாக பார்த்ததே இந்த தவறான புரிந்துணர்வு ஏற்படக் காரணம் ஆகும்...
இஜ்மாஃ விஷயத்தில் இப்னு தைமிய்யா ஸஹாபாக்களுக்கு மாற்றமாக நடக்க வில்லை, மாறாக தவறு இழைத்து இருக்கிறார் என்று சலஃபிகள் ஒத்துக் கொண்டுள்ளனர்..
وشيخ الإسلام لا يخالف الإجماع، ولكن يُخطِّئ من نقل الإجماع
இஸ்திஹாஸாவின் விஷயத்தில் 3 பலம்மிக்க ஆதாரங்கள் ஆஹாது எனும் ஸஹீஹான ஹதீஸ்களில் வரும் போது குறிப்பிட்ட சில சஹாபாக்கள் அறிவிப்பாளர் விஷயத்தில் வருகின்றனர்,,,
உதாரணமாக,
1. மாலிகுத் தார்
2. பிலால் இப்னு ஹாரிஸ்
3. காட்டரபி
ஆகிய மூன்று அறிவிப்பாளர்களின் மூன்று விதமான அறிவிப்புகள் இஸ்திஹாஸாவின் ஆதாரங்களாகும்.
பல ஹதீஸ்கள் வந்தாலும் அனைத்தும் இந்த மூன்று நபர்களை மையமாக வைத்து அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே இது தனிப்பட்ட சஹாபாக்கள் அறிவிப்பு என்று கிடையாது.
மாறாக இதில் மூன்று ஹுலஃபாயே ராஷிதீன்களும் இடம்பெறுகிறார்கள் என்பதால் தான் இதை நாம் இஜ்மாயே ஸுகூதி என்று ஒரு விதத்திலும் இஜ்மாஃ ஸரீஹ் என்று மற்றொரு விதத்திலும் இருக்கிறது என்று உறுதியாக கூறுகிறோம்...
இந்த அறிவிப்புகளை எல்லாம் பரிசீலனை செய்யும் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
قد اجمع العلماء
இந்த அறிவிப்புகளில் அனைத்து உலமாக்களும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்,
மூன்று ஹுலஃபாயே ராஷிதீன்களும் இதில் இடம் பெறுகிறார்கள் என்பதுதான் நம்முடைய கதயீ தலீல் எனப்படும் வலுவான மார்க்க ஆதாரம்...
_____________________________________
உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் இடம்பெறும் ஹாஜத் தொழுகையின் ஆதாரம்,
______________________________________
இந்த ஹதீஸில் உஸ்மான் எனும் இரண்டு சஹாபாக்கள் வருகிறார்கள்.
1. உஸ்மான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு,
2. உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்.
روى الترمذي في جامعه في كتاب الدعوات عن الصحابي عثمان بن حنيف قال :
உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஹதீஸை இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் பதிவு செய்கிறார்கள்:
أن رجلا ضرير البصر أتى النبي صلى الله عليه وسلم فقال :
பார்வை பறிபோன ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்:
ادعُ الله أن يعافيني
எனக்கு அல்லாஹ் சுகம் தரவேண்டும் என்று துவா செய்யுங்கள்
قال : إن شئتَ دعوتُ ، وإن شئتَ صبرتَ فهو خير لك
நீர் விரும்பினால் உமக்காக நான் துவா செய்கிறேன், மேலும் நீ பொறுமையுடன் இருக்க நாடினால் அது உனக்கு மிகவும் சிறந்தது இன்று பெருமானார் கூறினார்கள்.
. قال : فادْعه ،
அவர் கூறினார் அந்த (விஷயத்திற்காக எனக்கு) நீங்கள் துவா(வே) செய்து விடுங்கள்,
قال : فأمره أن يتوضّأ فيحسن وضوءه
அழகிய முறையில் உளூச் செய்ய பெருமானார் ஏவினார்கள்,
ويدعو بهذا الدعاء
மேலும் இந்த துவாவை ஓதச் சொன்னார்கள்,
بعد أن يصلي ركعتين
இரண்டு ரக்அத் தொழுததற்கு பின்னால்,
: " اللهم إني أسألك وأتوجّه إليك بنبيك محمد نبي الرحمة ،
யா அல்லா உன்னிடத்தில் நான் கேட்கிறேன் மேலும் ரஹ்மத்தான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை உன்பக்கம் வைத்து அவர்களை முன்னோக்கி உன்னிடம் கேட்கிறேன்,
يا محمد
ஓ முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே!!!
إني توجهت بك إلى ربي
நிச்சயமாக நான் என் ரப்பின்பக்கம் உங்களை கொண்டே முன் நோக்கினேன்,,,
في حاجتي لتقضى لي ،
என்னுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக,,,
اللهم شفعه فيّ "
யா அல்லாஹ் (பெருமானார்) அவர்கள் என்னுடைய விஷயத்தில் செய்யும் (ஷஃபாஅத்) பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக,,
وفي الحديث إن الرجل لم يغادر المجلس إلا وقد عافاه الله .
அந்த மனிதர் அந்த சபையை விட்டு போவதற்கு முன்னால் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் அளித்து விட்டான்...
قال الترمذي : هذا حديث حسن صحيح
இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்...
( இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ்)
- திர்மிதீ : 3578
- நஸயில் குபுரா : 10495
- அஹ்மது : 17279,
இந்த வார்த்தையைச் சொல்லி வஹ்ஹாபிகளே எந்த ஒரு நாளாவது நீங்கள் தொழுது இருப்பீர்களா???
யாஅல்லாஹ் என்று மட்டும்தான் சொல்வதற்கு அனுமதி இருக்கிறது.
யா ரசூலுல்லாஹ் என்று சொல்வதே ஷிர்க் என்று கூறுபவர்களே !
இவ்வாறு தொழுகையில் ஓத வேண்டும் என்று சொல்லி இமாம்கள், ஸலஃப் ஸாலிஹீன்கள் தங்கள் கிதாபுகளில் தலைப்பிட்டது உங்களுக்கு தெரியாதா ???
மேலும்,
ذكر ذلك الإمام النووي في كتاب الأذكار باب أذكار صلاة الحاجة )
இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய கிதாபுல் அதுகாரில் தேவையை நிறைவேற்றித் தொழுகும் ஸலாத்துல் ஹாஜத் எனும் தொழுகையில் ஓதும் திக்ருகள் என்ற தலைப்பில் இந்த ஹதீஸை கொண்டு வருகிறார்கள்...
நபியின் மரணத்திற்குப் பின்னாலும் ஒருவர் இவ்வாறு தொழுது யா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று தன் துஆவில் சேர்க்க வேண்டும் என்று ஸஹாபாக்களும், ஸலஃப் ஸாலிஹீன்கள் சொல்லி இருக்கிறார்கள்,
[عن عثمان بن حنيف:] أنَّ رجلًا كان يختلِفُ إلى عثمانَ بنِ عفانَ رضي اللهُ عنه في حاجةٍ له،
ஒரு மனிதர் தனக்கு உரிய தேவையை நிறைவேற்றித் தர
உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹு
(அவர்களிடம் சந்தித்து பேசுவதற்கு அனுமதி வேண்டி) வாதித்துக் கொண்டு இருந்தார்...
فكان عثمانُ لا يلتَفِتُ إليه،
உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் அவரின் பக்கம் திரும்பி(க்கூட) பார்க்கவில்லை...
ولا ينظرُ في حاجتِه
அவரின் தேவையை கண்டுகொள்ளவில்லை.
فلقِيَ عثمانَ بنَ حُنَيفٍ، فشكا ذلك إليه،
எனவே உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து முறையிட்டார்,,,
فقال له عثمانُ:
அவருக்கு கூறினார்கள்:
ائتِ الْمِيضأةِ،فتوضَّأَ،
ஒழு செய்யும் இடத்திற்கு சென்று ஒழு செய்,,,
ثم ائْتِ المسجدَ، فصَلِّ فيه ركعتَينِ،
பிறகு பள்ளிவாசலுக்கு வந்து இரண்டு ரக்அத் தொழு....
ثم قل: اللهمَّ إني أسألُك وأتوجَّهُ إليك بنبيِّنا محمدٍ ﷺ نبيِّ الرحمةِ،
பிறகு துஆ செய்,,,
யா அல்லாஹ் ! ரஹ்மத்தான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வைத்து உன்னை நான் முன்னோக்குகிறேன்,,
يا محمدُ
ஓ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே,
إني أتَوَجَّه بك إلى ربِّك عزَّ وجلَّ،
உங்களை வைத்தே உங்கள் இறைவனை நான் முன்னோக்குகிறேன்,,
فيقضى لي حاجَتي، -
(எதற்காக என்றால்) என் தேவை எனக்கு நிறைவேறுவதற்காக வேண்டி (இவ்வாறு பிரார்த்திக்கிறேன்)
உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த துஆவை சொல்லி விட்டு சொல்கிறார்கள்,,
وتذكَّر حاجتَك -
உன் தேவையை நீ (இவ்வாறு) கூறு,,
ورُحْ إليَّ حتى أروحَ معك،
என்னோடு வா நானும் உன் கூடவே வருகிறேன்,,,
فانطلق الرجلُ فصنع ما قال،
அந்த மனிதர் நடந்து சென்றார், அவ்வாறே கூறினார்,,
.
ثم أتى بابَ عثمانَ بنِ عفانَ رضيَ اللهُ عنه،
பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் (வீட்டின்) கதவுக்கு அருகில் வந்தார்,,
فجاء البوّابُ حتى أخذ بيدِه،
வாயிற் காவலர் வந்து அவரை தடுத்தார்,,,
فأدخلَه عليه،
( ஆனால், உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை ) உள்ளே அனுமதித்தார்கள்,,
فأجلَسه معه على الطَّنفَسةِ،
தன்னுடன் விரிப்பின் மீது அவரை அமரச் செய்தார்கள்,,
وقال: حاجتَك؟
உங்களது தேவை என்ன என்று கேட்டார்கள்,,
فذكر حاجتَه،
அவர் தன் தேவையை கூறினார்,,
فقضاها له،
அதை அவருக்கு நிறைவேற்றி கொடுத்தார்கள்,,
ثم قال له: ما ذكرتُ حاجتَك حتى كانت هذه الساعةُ،
இந்த நேரம் வரை நான் உம்முடைய தேவை என்ன என்று எனக்கு நினைவில் இல்லாமல் இருந்தது,,
(இப்பொழுதுதான் நினைவு வந்தது)
وقال: ما كانت لك من حاجةٍ فأْتِنا،
உமக்கு என்ன தேவை இருந்தாலும் நீர் நம்மிடம் வரலாம்,
ثم إنَّ الرجلَ خرج من عندِه،
பிறகு அந்த மனிதர் அவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றார்,,,
فلَقِيَ عثمانَ بنَ حُنَيفٍ،
உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அவர்களை சந்தித்தார்,,,
فقال له: جزاك اللهُ خيرًا،
உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக என்று கூறினார்,,
ما كان ينظرُ في حاجتي، ولا يلتفِتُ إليَّ حتى كلَّمتَه فيَّ،
நீர் எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயம் இல்லாத வரைக்கும் அவர் என் தேவையை நிறைவேற்றவும் இல்லை, என் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.
(அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வைத்து வசீலா தேடி செய்த துஆ பரக்கத்தின் மூலமாக அரசாங்க அலுவல் காரியம் மிக மிக விரைவாக முடிந்துவிட்டது என்று அந்த ஸஹாபிக்கு நன்றி சொல்கிறார்).
فقال عثمانُ بنُ حُنَيفٍ: واللهِ ما كلَّمتُه،
உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் மீது ஆணையாக அந்த விஷயத்தை நான் உனக்கு சொல்லித் தரவில்லை,,
(மாறாக இந்த வார்த்தைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தது)
ولكن شهدتُ رسولَ اللهِ ﷺ وأتاه ضريرٌ، فشكا إليه ذهابَ بصرِه،
மாறாக,
பெருமானாரிடம் நான் இருந்த பொழுது கண் பாதிக்கப்பட்ட ஒருவர் பெருமானாரிடம் அவர் பார்வை பறிபோனது சம்பந்தமாக முறையிட்டார்,,
فقال له النبيُّ ﷺ: فتصبِرُ؟
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
நீர் பொறுமையாக இருப்பீரா???
فقال: يا رسولَ اللهِ إنه ليس لي قائدٌ، وقد شقَّ عليَّ،
அல்லாஹ்வின் தூதரே என்னை அழைத்துச் செல்பவர் யாரும் இல்லை அதனால் எனக்கு சிரமமாக இருக்கிறது,,,
فقال النبيُّ ﷺ: ائْتِ الميضَأةَ،
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒழு செய்யும் இடத்திற்குப் செல்லும்,,,
فتوضأ ثم صلِّ ركعتَينِ،
உளுச் செய்து இரண்டு ரக்அத் தொழும்,,,
ثم ادْعُ بهذه الدَّعواتِ
பிறகு இந்த துவாவை ஓதும் என்று கற்றுக் கொடுத்தார்கள்,,,
قال عثمانُ بنُ حُنَيفٍ: فواللهِ ما تفرَّقْنا، وطال بنا الحديثُ حتى دخل علينا الرجُلُ كأنه لم يكن به ضُرٌّ قطُّ.
அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் அவ்வாறு பேசிக்கொண்டே இருந்தோம். கடைசியாக அந்த மனிதர் எந்தவிதமான கஷ்டமும் இல்லாத நிலையில் எங்களிடத்தில் வந்தார்.
أخرجه ابن خزيمة (٢/٢٢٥) مختصراً، والطبراني (٩/١٧)، والحاكم في «المستدرك» (١/٧٠٧)
முஸ்ததுரகுல் ஹாகிம் 1/ 707
தப்ரானீ 9/17
இப்னு ஹுஸைமா 2/225
صححه امام منذري في الترغيب والترهيب 1/476
இமாம் முன்திரிய்யி அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்று சான்று கொடுத்துள்ளார்கள்.
وقال المنذري في كتابه ( الترغيب والترهيب ) باب صلاة الحاجة
தேவையை நிறைவேற்றக்கூடிய தொழுகை ஸலாத்துல் ஹாஜத் எனும் தலைப்பின் கீழ் இதை கொண்டு வந்துள்ளார்கள்.
அத் தர்ஃகீப் வத் தர்ஹீபு 1/476
باب صلاة الحاجة مثل الإمام النووي في كتاب الأذكار والإمام جلال الدين السيوطي صاحب تفسير الجلالين في عمل اليوم والليلة ) .
இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய கிதாபுல் அதுகாரில் தேவையை நிறைவேற்றும் தொழுகை ஸலாதுல் ஹாஜத் எனும் தலைப்பில்தான் இதை கொண்டு வந்துள்ளார்கள்.
அதேபோல இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் தங்களுடைய அமலுல் யவ்மி வல்லய்லாவில்
ஸலாத்துல் ஹாஜத் தேவையை நிறைவேற்றும் தொழுகை முறை எனும் தலைப்பில்தான் பதிவு செய்துள்ளார்கள்.
وصححه امام نور الدين الهيثمي
المجمع الزوائد 2/279
اتحاف الاذكياء ص 8 - 10
இமாம் இப்னு ஹஜர் ஹைஸமீ இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்று கூறியுள்ளார்கள்.
அல் மஜ்மஃ ஸவாயித் 2/279
இத்திஹாபுல் அதுகியா 10/8
இந்த ஹதீஸின் துவாவில் வரும் மூன்று முக்கியமான வாக்கியங்கள்,,,
முதலில் அல்லாஹ்வை அழைத்து,
1. யா அல்லாஹ் நபிகளாரின் பொருட்டால் என் தேவையை பூர்த்தி செய்வாயாக,
இரண்டாவது நபிகளாரை அழைத்து,
2. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே எனக்காக அல்லாஹ்விடம் இந்த விஷயத்தில் பரிந்துரை செய்யுங்கள்,
மீண்டும் மூன்றாவதாக அல்லாஹ்வை அழைத்து,
3. யா அல்லா நபிகளார் எனக்கு இந்த விஷயத்தில் செய்யும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக.
புரிகிறதா உங்களுக்கு ? ? ?
தர்காவில் என்ன நடக்கிறதோ அது தான் இங்கு நடந்துள்ளது !!!
ஒரு மனிதர் ஒரு மஹானுடைய தர்காவிற்கு செல்கிறார்,
அங்கு அருகில் இருக்கும் பள்ளியில் தேவையை நிறைவேற்றி ஹாஜத் நபீல் இரண்டு ரக்அத் தொழுது
முதலாவதாக அல்லாஹ்விடத்தில்,
1. இறைவா இந்த நல்லடியாரை முன்வைத்து உன்னிடம் நான் கேட்கிறேன் என் தேவையை நிறைவேற்றித்தா என்கிறார்,
பிறகு இரண்டாவதாக இறைநேசர்களிடம்,
2. அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு இந்த விஷயத்தில் தேவை நிறைவேற அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுங்கள் என்கிறார்,
பிறகு மூன்றாவதாக அல்லாஹ்விடம்,
3. யா அல்லாஹ் அவர்கள் எனக்காக உன்னிடம் செய்யும் இந்த பரிந்துரையை நீ ஏற்றுக் கொள்வாயாக !
இதைத்தான் தர்காவில் செய்கிறார்கள்,
இந்த முறையை நாங்கள் யாரிடம் இருந்து கற்றுக் கொண்டோம் ?
யார் எங்களுக்கு இதை அனுமதித்தது ?
பதிலேதும் உங்களிடம் இருக்கிறதா ?
அல்லாஹ்வை அழைத்து பிறகு ஒரு நல்லடியார் இடம் தனக்காக அல்லாஹ்விடம் கேட்க சொல்லி பிறகு அல்லாஹ்விடம் யா அல்லாஹ் எனக்காக கேட்கும் இந்த நல்லடியாரின் பரிந்துரையையும் நீ ஏற்றுக் கொள்வாய் என்று சொல்வதில் என்ன இணைவைப்பை கண்டு விட்டீர்கள் ! ! !
இது தானே நபிகளார் வாழும் பொழுதும் நபிகளாரின் மரணத்திற்குப் பின்னாலும் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது !
ஹதீஸில் அந்த மனிதர்,
இதை நீங்கள் தானே எனக்கு சொல்லி கொடுத்து உள்ளீர்கள் என்று நினைத்துக் கொண்டார் ,,
அதற்கு அந்த சஹாபி அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறுகிறார்கள்,,,
இதை நான் சொல்லவே இல்லை இதை சொன்னது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,,
فقال عثمانُ بنُ حُنَيفٍ: واللهِ ما كلَّمتُه،
உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் மீது ஆணையாக அந்த விஷயத்தை நான் உனக்கு சொல்லித் தரவில்லை,
மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான், கண் பாதிப்பால் கஷ்டம் அடைந்த ஒருவருக்கு இவ்வாறு தேவையை நிறைவேற்றி தொழும் முறையை கற்றுக்கொடுத்தார்கள் என்று அந்த சஹாபி சத்தியமிட்டு கூறுகிறார்கள்...
உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் போல நாங்களும் சத்தியமிட்டு கூறுகிறோம் இந்த முறைகளை நாங்களாக செய்யவில்லை,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இந்த முறையை கற்றுக் கொடுத்தார்கள்.
இதற்கு அந்த ஸஹாபியும், அந்த அறிவிப்பில் இடம்பெறும் ஹுலஃபாயே ராஷிதீன்களில் ஒருவரான ஹஜ்ரத் உஸ்மான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுமே சாட்சி,
இந்த ஹதீஸ்களை சரிகண்ட
1. இமாம் திர்மிதீ
2. இமாம் தப்ரானீ
3. இமாம் ஹாகிம்
4. இமாம் பைஹகீ
5. இமாம் நவவீ
6. இமாம் ஹைஸமீ
7. இமாம் முன்திரிய்யு
8. இமாம் இப்னு ஹுஸைமா
ரஹ்மதுல்லாஹி அலைஹிம் அஜ்மயீன் ஆகியோரே சாட்சி...
இறைநேசர்களின் விஷயத்தை உங்களால் அங்கீகரிக்க முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் ஹதீஸில் இருக்கும் மூன்று விஷயங்களையாவது கேட்க வேண்டும்..
அதாவது ஏதேனும் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் இந்த முறையில் உளூச் செய்து இரண்டு ரக்அத் தொழுது,
1. அல்லாஹ்விடம் துவா கேட்டு,
2.நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அழைத்து துவா கேட்க சொல்லி,
3. அல்லாஹ்விடம் எனக்காக நபிகளார் கேட்கும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயா என்று சொல்வது.
நபிகளாரிடமாவது இவ்வாறு நீங்கள் பரிந்துரைக்க கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் போதுமானது.
இறைநேசர்களின் மீது நம்பிக்கை உங்களுக்கு வரவில்லை என்றால் இதை மட்டுமாவது செய்யுங்கள்.
ஹதீஸையும், ஸஹாபாக்களையும் பின்பற்றியவர்களாக மாறி விடுவீர்கள், வஹாபிய விலங்கிலிருந்து விடுதலையாகிவிடுவீர்கள் இன்ஷா அல்லாஹ்.
இதில் இரண்டு விதமான கையாடல் செய்யப்படுகிறது ,,,
1. மேற்கூறிய அந்த ஹதீஸை முற்றாக மறைத்து விடுகிறார்கள், அன்றாட வாழ்நாளில் நாம் செய்யும் துவாக்களை சொல்லிக் கொடுக்கிறார்கள், ஆனால் சிரமத்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு செய்ய வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் கூறியதை செய்வதே இல்லை.
2. இறைநேசர்கள் விஷயத்தில் இதேபோல் நடந்துகொள்ளும் மக்களைப் பார்த்து இணைவைப்பாளர்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பது.
எனவே சத்தியத்தை மறைப்பதும், மூமின்களை முஷ்ரிக்கள் என்று சொல்வதும் ஹவாரிஜ்களின் பண்புகளாகும்.
சம்பந்தமில்லாமல் இணைவைப்பாளர்களுக்கு சொல்லப்பட்ட வசனங்களை எல்லாம் மூமின்களுக்கு சொல்வது...
اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُـكُمْ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَـكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
(அல்குர்ஆன் : 7:194)
இந்த வசனம் குறைஷி காபிர்களுக்கு சொல்லப்பட்டது.
இதே வசனத்தை தர்காவில் வசீலா தேடும் மக்களுக்கு பயன்படுத்துவது.
நாம் அவர்களிடம் திரும்ப கேட்கிறோம்,
பெருமானாரை வசீலாவாக வைத்து, இரண்டு ரக்அத் நபில் தொழுது, பிறகு அல்லாஹ்விடம் உதவி தேடி , பெருமானாரிடம் துவா கேட்க சொல்லி, பிறகு அல்லாஹ்விடம் பெருமானாரின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளச் சொல்லும் முறையை ஏற்றுக்கொள்ளக்கூடிய முஃமின்களுக்கு இந்த வசனம் பொருந்துமா ?
அல்லாஹ் அல்லாமல் நீங்கள் அழைக்கும் தெய்வங்கள் உங்களைப் போன்ற அடியார்களே !
என்ற வசனம் நபிகளாருக்கு பொருந்துமா ?
முதலில் நபிகளாரை தெய்வம் என்றா நாம் அழைக்கிறோம் ?
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
(அல்குர்ஆன் : 7:194)
பதில் கிடைக்காது என்று குர்ஆன் கூறுகிறது.
ஆனால் நபிகளாரிடம் இவ்வாறு வசீலா தேடிய ஸஹாபிக்கு உடனே கண் பார்வை வந்தது என்று திர்மிதீ ஹதீஸும்,
நபிகளாரின் மரணத்திற்கு பின்னால் வஸீலா தேடிய மனிதரின் துஆ அங்கீகரிக்கப்பட்டு உஸ்மான் ரலியல்லாஹ் அவர்கள் அவரின் விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொண்டதை இப்னு ஹுஸைமாவில் வரும் உஸ்மான் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸும் உறுதிப்படுத்துகிறது.
எனவே, பொய்யான தெய்வங்களிடம் இணைவைப்பாளர்களைப் பார்த்து குர்ஆன் கேட்கச் சொல்வது வேறு,
நபிமார்களிடம் வஸீலா தேட சொன்னது வேறு.
ஒன்று இணைவைப்பு மற்றொன்று ஈமான்.
ஈமானை இணைவைப்பு என்று காட்டுவது தஜ்ஜால் உடைய பண்பு.
குறைஷி காபிர்களுக்கு சொல்லப்பட்ட வசனத்தை நபிகளாருடன் இணைப்பது எப்பேர்பட்ட அபாண்டமான பொய்யோ, அதே போலத்தான் இறைநேசர்களிடம் வஸீலா தேடும் மக்களுடன்இந்த வசனத்தை இணைப்பதும்.
அல்லாஹ் தான் நேர்வழியை காட்ட வேண்டும்....
ஹுலஃபாயே ராஷிதீன்களில் இரண்டாம் ஆதாரம் ,
___________________________________
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
______________________________________
قال الحافظ ابن حجر في فتح الباري (2 / 495): روى ابن أبي شيبة بإسناد صحيح من رواية أبي صالح السمان عن مالك الدار - وكان خازن عمر
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இப்னு அபீஷைபாவில் பதிவு செய்திருக்கும் ஹதீஸை ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி கொண்டு வருகிறார்,,,
قال: (أصاب الناس قحط في زمن عمر
உமர் ரலியல்லாஹு அவர்களுடைய காலத்திலேயே கடுமையான பஞ்சம் மக்களுக்கு ஏற்பட்டது,,,
فجاء رجل إلى قبر النبي صلى الله عليه وآله وسلم فقال
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லாவுக்கு அருகிலே வந்து சொன்னார்,,,
يا رسول الله استسق لأمتك فإنهم قد هلكوا....).،
யாரசூலல்லாஹ்! உங்களுடைய உம்மத்துக்காக மழை வேண்டி பிரார்த்தியுங்கள், நிச்சயமாக அவர்கள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள்...
அப்போது மழை பெய்தது.
ஃபத்ஹுல் பாரி 2/ 495.
ومالك الدار ثقة بالإجماع عدله ووثقه سيدنا عمر وسيدنا عثمان فولياه بيت المال والقسم ولا يوليان إلا ثقة ضابطا عدلا كما نص الحافظ ابن حجر في الإصابة في ترجمته،
இந்த சம்பவத்தை தன் கண்களால் பார்த்து அறிவிக்கக் கூடிய மாலிக்குத் தார் என்பவர் ஒட்டுமொத்த அறிஞர்களின் கருத்துப்படி மிகவும் உறுதியானவர்...
உமர் ரலியல்லாஹு காலத்திலும், உஸ்மான் ரலியல்லாஹ் அவளுடைய காலத்திலும் அவரை பைத்துல்மாலின் பொறுப்புதாரியாக ஆக்கி இருந்தார்கள்.
(இந்த ஹதீஸை அறிவிப்பவர் கூட அவர்தான்)
ونقل ذلك عن إمام المحدثين علي بن المديني،
இந்த உறுதியை அலீ இப்னில் மதீனி எனும் பெரும் முஹத்திஸிடமிருந்து இமாம் இப்னு ஹஜர் அவர்கள் எடுக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல இமாம் மாலிகுத் தார் அவர்கள் சிறுவயது சஹாபி என்ற கூட இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறுகிறார்கள்.
இமாம் புகாரி அவர்கள் இவர்களின் அறிவிப்புகளை தங்களுடைய தாரீஹுல் கபீரில் கொண்டு வருகிறார்கள்.
وساق هذه القصة، وابن سعد في طبقاته (5 / 12)
இமாம் இப்னு ஸஃது ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இந்த ஹதீஸை கொண்டு வருகிறார்கள்.
தபகாது இப்னு சஃது 5/ 12
மற்றோரு அறிவிப்பில்,,,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மண்ணறைக்கு முன்னால் அந்த மனிதர் மழை வேண்டி கேட்டு சென்றதற்குப்பின்னால்,
فأتاهُ رسولُ اللَّهِ، ﷺ، في المَنامِ،
எனவே அவருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள்,
فقالَ: ائتِ عمرَ فأقرئهُ منِّي السَّلامَ
உமரிடம் நீ சென்று என்னுடைய ஸலாமை அவருக்கு எத்திவைப்பீராக,
وأخبرهُ أنَّكم مُسقونَ،
மேலும் அவர்களுக்கு மழை பொழியும் என்ற செய்தியையும் எத்தி வைப்பீராக...
(இந்த செய்தியை கேட்டு ஹஜ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள்)
- இப்னு அபீ ஷைபா 32665
- பைஹகீ (தலாயிலுந் நுபுவ்வா) 7/47
- அல் பிதாயா வந் நிஹாயா 7/93,
இதன் ஸனதைப் பற்றி முஹத்திஸ்கள் கூறுகின்றனர்,
1. இமாம் இப்னு ஹஜர்
إسناده صحيح
இதன் அறிவிப்புத் தொடர் ஸஹீஹானது.
ஃபத்ஹுல் பாரீ 2/575,
2. ஷிஹாபுத் தீன் கஸ்தலானீ,
• [إسناده] صحيح
இதன் அறிவிப்புத் தொடர் ஸஹீஹானது.
அல் மவாஹிபுல் லதுன்னிய்யா 3/374.
3. இமாம் இப்னு கஸீர்
إسناده جيد قوي
இதன் அறிவிப்புத் தொடர் சிறந்து மிகப் பலமிக்கது
முஸ்னதுல் ஃபாரூக் 1/223.
இரண்டாம் ஆதாரத்தின் படி ஹுலஃபாயே ராஷிதீன்களில் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அவர்களும் இடம்பெற்றுவிட்டார்கள் என்பது நம் மார்க்க ஆதாரமான இஜ்மாவை உறுதிப்படுத்துகிறது...
முஸ்னத் என்றால் ஸஹாபாக்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எத்தனை ஹதீஸ்களை அறிவித்து இருக்கிறார்கள் என்பதை மட்டும் தனித்தனியாக எடுத்து அந்த நபிமொழி தொகுப்புகளுக்கு அவர்களின் பெயரையே வைப்பது.
முஸ்னது அபீபக்கர்,
முஸ்னது அலீ,
முஸ்னது ஆயிஷா,
இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்னதுகள் உண்டு.
ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஹதீஸ்களை மட்டுமே கோர்வை செய்து முஸ்னதுல் ஃபாரூக் என்ற தொகுப்பாக இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கிதாப் எழுதியுள்ளார்கள்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் நடந்த அனைத்து சம்பவங்களையும் அதில் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதில் ஒன்றுதான் இந்த சஹாபி பெருமானாரிடம் மழை வேண்டி துவா செய்யச் சொல்லி பிறகு பெருமானாரை கனவில் பார்த்து ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பெருமானாரின் சுபச்செய்தி சொன்னபொழுது ஹஜ்ரத் உமர் அவர்கள் அழுத செய்தியையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
பார்க்க,
முஸ்னதுல் ஃபாரூக் 1/223.
வாருங்கள் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆதாரத்தைப் பார்க்கலாம்,,,
இமாம் நவவீ தங்கள் கிதாபுல் மஜ்மூஃயில் கூறுகிறார்கள்
المجموع (8 / 274)
ما يستحب أن يقوله من يزور النبي (صلى الله عليه وسلم)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஜியாரத் செய்யக்கூடிய நபருக்கு விரும்பத்தக்க காரியம் என்னவென்றால்,,
إذا وقف أمام القبر الشريف مخاطبا رسول الله (صلى الله عليه وسلم)،
கண்ணியத்திற்குரிய அந்த மண்ணறைக்கு முன்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் பேசக் கூடியவராக நிற்கவேண்டும்,,,
ما نصه: ثم يرجع إلى موقفه الأول قبالة وجه رسول الله صلى الله عليه وآله وسلم
பிறகு தன்னுடைய முதலாவது நிலைக்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய (முபாரகான) முகத்திற்கு முன்னால் வந்து நிற்க வேண்டும்,,,
ويتوسل به في حق نفسه
அவர்களுக்கே உரித்தான (தகுதியை) வைத்து அவர்களிடம் வஸீலா தேட வேண்டும்,,
ويستشفع به إلى ربه سبحانه وتعالى
பிறகு அல்லாஹு ஸுபுஹானஹு தஆலாவிடம் அவர்களுடைய ஹக்கை வைத்து ஷபாஅத்து தேட வேண்டும்,,
ومن أحسن ما يقول
அவ்வாறு அவர் (வசீலா தேடுவதிலேயே) மிகவும் அழகிய சொல் என்னவென்றால்,,
ما حكاه الماوردي والقاضي أبو الطيب وسائر أصحابنا - يعني سائر الشافعية - عن العتبي مستحسنين له
இமாம் மாவுர்தீ, அல் காழீ, மேலும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த எங்களுடைய அனைத்து தோழர்களும் உத்பாவை தொட்டும் பதிவு செய்திருக்கும் ஹதீஸ் (உத்பாவின் அறிவிப்புகளை நாங்கள்) மிக அழகியதாகவே பார்க்கிறோம்.
அந்த ஹதீஸ் ஆனது,,,
قال: (كنت جالسا عند قبر رسول الله صلى الله عليه وآله وسلم فجاء أعرابي
நான் நபி ஸல்லல்லாஹு இஸ்லாம் அவர்களுடைய ரவ்லாவுக்கு அருகில் அமர்ந்து இருந்தேன் அப்பொழுது ஒரு காட்டரபி வந்தார்,
فقال: السلام عليك يا رسول الله،
அந்த ஸஹாபி கூறினார்:
அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்,
سمعت الله يقول:
அல்லாஹ் தஆலா சொல்லியிருக்கிறதை நான் கேட்டுள்ளேன்,
وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا
ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து விட்டு உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக தூதராகிய (நீங்களும்) மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 4:64)
وقد جئتك مستغفرا من ذنبي مستشفعا بك إلى ربي.....)
(அல்லாஹ்வின் தூதரே)
நான் உங்களிடத்தில் எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் மன்னிப்பு தேட வேண்டும் என்று வந்துள்ளேன்.
மேலும் உங்களை வைத்து அல்லாஹ்விடம் நான் பரிந்துரை தேட வேண்டும் என்றும் வந்துள்ளேன்.
இமாம் நவவீயுடைய கிதாபுல் மஜ்மூஃ 8/274
இந்த ஹதீஸ் அறிவிப்பைப் பற்றி இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் :
ما حكاه الماوردي والقاضي أبو الطيب وسائر أصحابنا - يعني سائر الشافعية - عن العتبي مستحسنين له
இமாம் மாவுர்தீ, அல் காழீ, மேலும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த எங்களுடைய அனைத்து தோழர்களும் உத்பாவை தொட்டும் பதிவு செய்திருக்கும் ஹதீஸ் (உத்பாவின் அறிவிப்புகளை நாங்கள்) மிக அழகியதாகவே பார்க்கிறோம்.
மேலும் இதே போல் ஒரு அறிவிப்பு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காட்டரபி வந்து பேசும்பொழுது பெருமானாரின் மண்ணறைக்கு அருகில் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
رُوي عن علي بن أبي طالب - رضي الله عنه -
அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட கூடிய ஹதீஸ்,
قال: قدم علينا أعرابي بعدما تُوفي رسول الله - صلى الله عليه وسلم - بثلاثة أيام
நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு பின்னால் ஒரு கிராமவாசி எங்களிடத்தில் வந்தார்,
فرمى بنفسه إلى قبر النبي - صلى الله عليه وسلم -،
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லாவின் மேல் (அழுதவாறு) விழுந்து விட்டார்.
இவ்வாறு ஒரு அறிவிப்பு வந்துள்ளது
- தஃப்ஸீர் இப்னு கஸீர் - 1/520,
- தஃப்ஸீர் குர்துபீ - 2/1929.
அல்ஹம்துலில்லா,
அல்ஹம்துலில்லா,
அல்ஹம்துலில்லா.
மூன்று கலீபாக்களின் ஆதாரங்களை அல்லாஹ்வுடைய அருளால் நாம் கொண்டு வந்துள்ளோம்.
அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தவிர,
அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் மரணத்திற்கு முன்னால் தன்னை நபிகளாரின் மண்ணரைக்கு முன்னால் வைத்து அனுமதி கேளுங்கள், அனுமதி வந்தால் மட்டும் என்னை அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்யுங்கள் என்று மரண சாசனம் சொல்லியிருந்தார்கள்.
அதனடிப்படையில் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அவர்களின் உடலை தூக்கிச் சென்று பெருமானாரின் ரவ்லாவிற்கு வெளியே வைத்த சம்பவத்தை அவர்களே கூறுகிறார்கள்
قال عليٌّ: فبادرت فقلت: يا رسولَ اللهِ، هذا أبو بكرٍ يستأذنُ،
யாரசூலல்லாஹ் இதோ அபூபக்கர் அவர்கள் உங்களிடம் அனுமதி கேட்கிறார்கள் என்று நான் சொன்னேன்.
فرأيت البابَ قد فتحَ،
அப்பொழுது கதவு திட்டமாக திறப்பதை நான் பார்த்தேன்.
وسمعتُ قائلًا يقولُ:
சொல்லக்கூடிய ஒருவரின் சப்தத்தை நான் கேட்டேன்.
أدخلوا الحبيبَ إلى حبيبِه، فإن الحبيبَ إلى الحبيبِ مشتاقٌ
நேசரை நேசரின் பக்கம் அனுப்பிவிடுங்கள், (அவரை விரும்பும்) நேசர் தன்னுடைய நேசரின் (வருகைக்காக) பேராவல் கொண்டவராக இருக்கிறார்.
இந்த ஹதீஸை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.
- லிஸானுல் மீஸான் 5/62.
ஆனால் இந்த சம்பவம் பலவீனம் ஆகும்.
அகீதா உடைய விஷயங்களுக்கு பலவீனமான சம்பவங்களை ஆதாரமாக பிடிக்க முடியாது.
ஹுலஃபாயே ராஷிதீன்களில் உஸ்மான்,உமர், அலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் மூன்று ஆதாரங்கள் மிக பல மிக்கவை.
எனவே அதுவே நம்முடைய முதல் கட்ட ஆதாரம்.
அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆதாரத்தை நாம் மூன்றாம் கட்ட ஆதாரமாக கொண்டு வருகிறோம்.
இப்படியும் ஒரு சம்பவம் இருக்கிறது என்பதே இதன் நோக்கம்.
இதன் கருத்து கூட தீனுக்கு முரண் கிடையாது,
இதே போன்று ஒரு சம்பவம் இறுதி காலத்தில் நடைபெறும்,
பெருமானாரின் முதல் கலீபா அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மரணத்தின் போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதை வாதத்திற்கு வைத்துக் கொண்டால் பெருமானாரின் இறுதி கலீபா ஹஜ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்விலும் இதேபோல ஒரு சம்பவம் நடக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ليَهْبِطَنَّ عيسى ابنُ مريمَ حَكَمًا، وإمامًا مُقْسِطًا،
மரியமின் மகன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நேர்மையான இமாமாக, தீர்பளிப்பவராக இறங்கி வருவார்கள்,
،ولَيَسْلُكَنَّ فَجًّا فَجًّا، حاجّا أوْ معْتَمِرًا،
ஒவ்வொரு பாதைகளிலும், தொலை தூரங்களிலும் ஹஜ் செய்பவராகவும், உம்ரா செய்பவராகவும் திட்டமாக தங்குவார்கள்
وَليأْتِيَنَّ قَبْرِي حتى يُسَلِّمَ عَلَيَّ،
இறுதியாக, என் மண்ணறைக்கு வந்து எனக்கு சலாம் சொல்வார்கள்,
ولَأَرُدَّنَّ علَيْهِ
திட்டமாக நான் அவர்களுக்கு பதில் சொல்வேன்.
அல் ஜாமிஉஸ் ஸஹீர் : 7723,
(ஸஹீஹ் தரம்)
والحديث قال الهيثمي
இமாம் ஹைஸமிர ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்
(8 / 211) : " رواه أبو يعلى، ورجاله رجال الصحيح ".
இதை (ஹதீஸை) அபூ யஃலா(வும்) அறிவிக்கிறார்கள், இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் ஸஹீஹ் (ஹதீஸிற்)குறியவர்களே.
எனவே அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் விஷயத்தில் இதுசாத்தியமில்லை என்று சொல்வதற்கில்லை.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இது இனிமேல் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக நடக்கப் போகிறது...
சிந்திப்பவர்களுக்கு இதுவே போதும்...
فباي حديث بعده يؤمنون
இதற்குப் பின் எந்த விஷயத்தை கொண்டு தான் இவர்கள் ஈமான் கொள்ள போகிறார்கள் ?
- அல் குர்ஆன் 77:50.
அல்லாஹு வரஸூலுஹு அஃலம்.
- இப்னு கபீர் சதகீ அஷ்அரீ.
கருத்துகள்
கருத்துரையிடுக