#sathakkathulla Vali #keelakkarai irainesar#சதகத்துல்லாஹ் வலி
இறை நேச மாமேதை
சதக்கத்துல்லா அப்பா (ரஹ்)..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுமார் முன்னூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்...
புனித மக்கா நகர ஹரம் ஷரிபில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு அரபி பாட நூலை போதித்துக் கொண்டிருந்தார். நூலில் ஒரு இடத்தில் எழுத்துப் பிழை இருந்தது. அது தெரியாமல் அந்த ஆசிரியர் அந்த வார்த்தைக்கான விளக்கத்தை மாணவர்களுக்கு விளக்க முடியாமல் தவித்தார். தமிழகத்திலிருந்து ஹஜ் செய்வதற்காக வேண்டி வந்திருந்த வாலிபர் ஒருவரும் அச்சபையில் அமர்ந்து நடந்ததை கவனித்துக் கொண்டிருந்தார். வந்து அமர்ந்த அந்த வாலிபரும் சாதாரணமானவர் அல்ல.
தொழுகை நேரம் வரவே ஆசிரியரும், மாணவர்களும் எழுந்து தொழச் சென்று விட்டார்கள். அப்பொழுது அந்த அரபி நுாலில் பிழையாக இருந்த எழுத்தை அந்த வாலிபர் திருத்தி வைத்துவிட்டுத் தொழுகையில் கலந்துகொண்டார்.
ஆசிரியரும் தொழுகையை முடித்துவிட்டு தொடர்ந்து பாடம் நடத்த நூலைத் திறந்தபோது அதில் அவ்வெழுத்து திருத்தப் பட்டிருப்பதையும் அதன் பின் பொருள் தெளிவாக விளங்க வருவதையும் கண்டு மகிழ்ந்து அதனைத் திருத்தியவர்கள் யார்..? என்று விசாரித்தறிந்து அந்த வாலிபரிடம் ''தங்கள் பெயர் என்ன?" என்று வினவ ''சதக்கா" என்று பதில் அளித்தார் அந்த வாலிபர்.
" அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் தடுமாறிய நான் கஃபாவின் திரையைப் பிடித்து "இறைவா எனக்கு அருள் புரி.. என்று வேண்டினேன். இத்தருணத்தில் தங்களை அல்லாஹ்வே எங்களுக்குத் அருட் கொடையாக அனுப்பிவைத்தான்' என்று கூறி உங்கள் பெயர் இனி வெறும் "சதக்கா" அல்ல "அல்லாஹ்வின் அருட் கொடை" என்று பொருள்படும் "சதக்கத்துல்லாஹ்" என்று இவர்களை அழைத்து மகிழ்ந்தார் அந்த ஆசிரியர்.
அன்றிலிருந்து இவர் களுக்கு இப்பெயரே பிரபலமாகிவிட்டது.
சதக்கத்துல்லா என்று பெயர்பெற்ற அந்த வாலிபர்தான் "இல்மின் பல்கலைக்கழகம் , ஞான விளக்கு, நானிலம் கண்ட மகான், மாண்புமிகு இறைநேசர் என்றெல்லாம் போற்றப்பட்ட காயல்பட்டினத்தில் ஹிஜ்ரி 1042இல் பிறந்து ஹிஜ்ரி 1115 இல் மரணித்து கீழக்கரை ஜும்மா பள்ளியில் அடங்கப்பட்டிருக்கிற "ஞான மகான் சதக்கத்துல்லா அப்பா" (ரஹ்ஹ) அவர்கள் .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பலமுறை கனவில் தரிசித்த பாக்கியம் பெற்றவர்கள் சதக்கத்துல்லா அப்பா அவர்கள். அவர் எழுதிய பிரபல்யமான வித்ரியாவில் நபிமணியிடம் தன்னை ஒன்றும் இல்லாதவனாக்கி பணிவோடு முறையீடு செய்யும் வரிகள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கக் கூடியவை.
இதோ ஆத்மார்த்தமான அந்த வரிகள்.
“எனது உயிரோடு ஒன்றி ரத்த நாளங்களிலெல்லாம் கலந்து பரந்து நிற்கும் எனதருமை நாயகமே! ரத்த நாளங்கள் முழுவதிலும் தாங்களே நிறைந்து நிற்பதால் என்னுள் ஷைத்தான் குடிபுக இடமில்லை. என்றாலும் நான் செய்துள்ள பாவங்கள் எண்ணற்றவை. இறைவன் என்னுடைய பாவங்களைப் போக்கும்வரை எனக்காகத் தாங்கள் அவனிடம் மன்றாடுங்கள். தாங்கள் அவனுடைய துாதர் மட்டுமல்ல, நேசரும் ஆவீர்கள், அவனுடைய உவப்பிற்காவே தாங்கள் படைக்கப் பட்டிருக்கிறீர்கள். தங்களின் வேண்டுதல் முழுதும் அவனால் அங்கீகரிக்கப்படுவதாகும். ஆகவே எனக்காக , இந்த பாவிக்காக மன்றாடும் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்"...
வித்ரியாவின் அற்புத வரிகள் இவை.
மேலும் உமறுப் புலவர் சீறாப் புராணம் காவியத்தை இயற்றுவதற்கு சதக்கத்துல்லா அப்பாவே உரை வழங்கினார்கள்.
அந்நன்றியை நினைவு கூர்ந்து உமறுப் புலவர் அவர்கள் தனது சீறாப்புராணம் ஆரம்ப இறைவாழ்த்தில் ...
"இம்மையும் மறுமையும் பேறிலங்கிய சதக்கத்துல்லா. செம்மலர் அடி இரண்டும் சிந்தையில் இருத்தி னேனே"
என்று சதக்கத்துல்லா அப்பா அவர்களின் கல்வி ஞானம் பற்றி புகழ்ந்து பாடும் அளவுக்கு மிகச் சிறந்த இலக்கிய மாமேதையாகவும் திகழ்ந்தார்கள்.
அரபு மொழி இலக்கண, இலக்கியங்களில் புலமைபெற்ற , கல்வியின் பல்கலைக்கழகமாக வாழ்ந்த சதக்கத்துல்லா அப்பா அவர்கள் பல நுால்களை இயற்றியிருக்கிரார்கள். பல பாமாலைகள் பாடி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பிரபல்யமாக ஓதப்படுகிற முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் பற்றிய புகழ் மாலையான ‘யாகுத்பா’ என்ற கஸீதாவும் , நாகூர் ஷாஹுல் ஹமீது ஆண்டகை அவர்கள் மீது பாடப்பட்ட "யாஸையிதீ ஷைகி" என்ற கஸீதாவும் இவர்களின் பாமாலைகளில் குறிப்பிடத் தகுந்ததாகும்.
இந்த தமிழ் சமூகம் சதக்கத்துல்லா அப்பா அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு ஆச்சரிய தகவல் இன்று தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் ஓதப்படுகிற நபி புகழ் மாலையான "ஸுப்ஹான மௌலிதை" அரபு நாட்டிலிருந்து நம் நாட்டிற்குக்கொண்டு வந்து நபி நேசத்தை பரப்பிய பெருமைக்குரிய மகான் நம் சதக்கத்துல்லா அப்பா அவர்களே ஆகும்.
**செய்யது அஹமது அலி. பாகவி**
கருத்துகள்
கருத்துரையிடுக