காபீர் பத்வா#kafit fathva
*குப்ருடைய தீர்ப்பளிப்பதில் முன்னோர்களிடையே கருத்து வேறுபாடு*
குப்ரைக் கொண்டு தீர்ப்பு வழங்குவதில் அஹ்லுத் தஹ்கீக்குகள் என்னும் திடஞானிகளான உலமாக்கள் ஒருவரை மற்றவர் தக்லீது செய்ய (கண் மூடிக் கொண்டு பின்பற்ற) வில்லை அதற்கு மாறாக சில இடங்களில் பெரும் பெரும் இமாம்கள் முன்னோர்கள் போன்றோரின் வழிகாட்டலைக் கூட இவ்விஷயத்தில் பின்பற்றாமல் விட்டு விட்டதையே நாம் பார்க்கிறோம். அத்துடன் குப்ரைக் கொண்டு தீர்ப்பளிக்கும் விஷயத்தில் அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொண்டனர். பாருங்கள் யஸீதை இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காபிரென்று கூறி அதற்குரிய பத்வாவும்
தந்தனர். இவ்வாறே ஸையிதினா முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்ஹன்பலி மத்ஹபை பின்பற்றிய நிலையில் அக்கருத்தை தழுவி அவர்களும் யஸீதை காபிரென்று கூறுகின்றனர். ஆனால் அதேநேரம் காதிரிய்யா தரிக்காவை சார்ந்த பெரும் பெரும் சூஃபியாக்கள் யஸீதை காபிரென்று சொல்லவில்லை.அதிலும் குறிப்பாக இமாம் அஹ்மத் ரஜா பாஜில் பரேலவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் காதிரிய்யா தரிக்காவை சார்ந்தவராகவும் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு வர்களின்மிகப்பெரும் நேசராக இருந்தும் கூட அவர்கள் யஸீதை காபிரென்று சொல்லவில்லை.
இதுபோன்றே மௌலவி இஸ்மாயீல் தெஹ்லவி என்பார். இவரது "தக்வியத்துல் ஈமான்" என்னும் நூலில் நபிமார்கள்,வலிமார்கள் போன்றோரைக் குறித்து மிக மிகக் தரக்குறைவான வார்த்தைகளை எழுதப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம்.அதனை காரணமாகக் கொண்டே மௌலானா பஸ்லுல்ஹக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவர்மீது குப்ருடைய பத்வா கொடுத்தார்கள். இந்த பத்வாவுடைய பெயர் "தஹ்கீகுல் பத்வா ஃபீரத்தி அஹ்லித் தக்வா" என்பதாகும்.
இதை மௌலானா பஜ்லே ரஸுல் பதாயூனி அவர்கள் தமது "ஸைஃபுல் ஜப்பார்" என்னும் நூலில் 42மற்றும் 43ம் பக்கத்தில் குறித்துள்ளனர்.
இந்த பத்வாவின் சுருக்கமானது ....
"மௌலவி இஸ்மாயீல் தெஹ்லவி எப்படிப்பட்ட காபிரெனில் யார் அவருடைய குப்ரின் மீது சந்தேகம் கொள்கிறார்களோ அவரும் காபிராகி விடுவார்" என்பதாகும்.
இதுபோல "அல்மீஸான்" என்னும் பம்பாயிலிருந்து வெளிவரும் சஞ்சிகையின் "இமாம் அஹ்மத் ரஜா" என்னும் நெம்பரில் மௌலானா பஜ்லுல்ஹக் கைராபாதி அவர்களால் தரப்பட்ட பத்வா சரியானது தானென இருபது உலமாக்களும் அதிகமானோர் அதனை ஆமோதித்து கையெப்பமிட்டுள்ளனர்.
அந்த பத்வாவை ஆமோதிப்பவர்களில்
மௌலானா பஜ்லெ ரஸுல் நீங்கலாக
அஃலா ஹஜ்ரத் அஹ்மத் ரஜா பாஜில் பரேலவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஷைகாகிய மௌலானா ஸையத் ஷாஹே ஆலெ ரஸுல் சாஹிஹ் மார்ஹரவி அவர்களும், அஃலா ஹஜ்ரத் அஹ்மத் ரஜா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தந்தை மௌலானா நகீ சாஹிப் அவர்களும் உள்ளனர்.ஆனால் அஃலா ஹஜ்ரத் அஹ்மத் ரஜா பாஜில் பரேலவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அந்த பத்வாவை ஏற்றுக்
கொள்ளாததோடு மௌலவி இஸ்மாயீல் தெஹ்லவியின்மீது குப்ருடைய பத்வாவும் கொடுக்க முடியாதென்று மறுத்தும் விட்டனர்.இதுகுறித்து அவர்களே கூறுவதை பாருங்கள்....
"நான் இமாமுத்தாயிபா இஸ்மாயீல் தெஹ்லவியின் மீது குப்ரைக் கொண்டு தீர்ப்பளிக்க மாட்டேன். ஏனெனில் நமது நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் உடைய கலிமாவைச் சொன்னோர் மீது குப்ரைக் கொண்டு தடை செய்துள்ளனர்" என்பதை கூறுகின்றனர்.
நூல்: தம்ஹீதுல் ஈமான், பக்கம்- 43
இதேபோல பெரும்பான்மையான இஸ்லாமிய பெரியோர்கள் மீது குப்ரு மற்றும் மதங்கெட்டவர்கள் என்னும் பத்வாக்கள் தரப்பட்டுள்ளன. அதேநேரம் அதற்கு பதிலும் வேறு சில உலமாக்கள் தரப்பட்டுள்ளன. உதாரணமாக இமாமுல் அஃழம் அபூஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மீது கதீப் பக்தாதி என்பாரும், இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மீது இமாம் பகாயி என்பாரும், ஹுஸைன் பின் மன்ஸுர் ஹல்லாஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மீது நானூறு உலமாக்களும், ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மீது அவர்களது காலத்தை சேர்ந்த உலமாக்களும்,இதுபோன்ற பத்வாக்களை தந்துள்ளனர். இத்தனை ஏன்! மௌலானா ஜலாலுத்தீன் ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மீதும் குப்ருடைய பத்வா கொடுக்கப்பட்டதே இவ்வாறே ஹழ்ரத் முஜத்தித் அல்பஸானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மீது அல்லாமா அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குப்ருடைய பத்வா தந்துள்ளார்களே!
இருந்தபோதிலும் இதுபோன்ற பத்வாகளுக்கு எதிராக உலமாக்கள் தக்க பதிலும் தந்து அதற்கு சரியான விளக்கமும் கொடுத்துள்ளனர்.
மேலும் ஹழ்ரத் ஹுஸைன் பின் மன்ஸுர் ஹல்லாஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் எந்த வாக்கியமான "அனல் ஹக்" என்பதின் மீது நானூறு உலமாக்கள் குப்ருடைய பத்வாவை தந்தார்களோ அவர்களில் ஹழ்ரத் ஜுனைதுல் பக்தாதி, ஹழ்ரத் அபூபக்கர் ஷிப்லி ரஹிமஹுல்லாஹ் போன்ற பெரியோர்கள் எல்லாம் இருந்தனர். ஆனால் அந்த பத்வாவை ஸையிதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக மன்ஸுர் ஹல்லாஜ் அவர்களை அவர்கள்
ஒரு வலியென்றே நம்பினர். இவ்வாறே இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அவர்களை ஒரு வலியென்றும் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட வர்கள் என்றும் ஆதாரப்படுத்துகின்றனர்.
இன்னும் எவ்வளோ இவ்வுலகிலுள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் பெரும் பெரும் முஹக்கிகீன்ன்களான திடஞானிகளாகிய உலமாக்களின் பார்வையில் இப்படிப்பட்ட பத்வாக்களை தருவதற்கு என்று இரு வகையான நிலைகள் கையாளப்படுகின்றன. ஒன்று ஒரு முஸ்லிமின் மீது குப்ரு,ஷிர்க், மதங்கெட்டவன் அல்லது வழிகேடன் என பத்வா கொடுக்கும் விஷயத்தில் முடிந்தவரை தப்புவதற்கு எல்லா வகையிலும் முயற்சிக்க வேண்டும். இரண்டாவது ஷரீஅத்துடைய நிர்பந்தம் காரணமாக அப்படிப்பட்ட பத்வாவை தருவதிலிருந்து தப்ப முடியாதென்னும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்நிலையில் அதற்கெதிரான எச்சரிக்கைகளும் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.
உதாரணமாக இவ்விஷயத்தில் இமாம் அப்துல்வஹ்ஹாப் ஷஃறானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மற்றும் இமாம் தகியுத்தீன் சுப்கி ரஹிமஹுல்லாஹ் போன்றோரின் ஒரு பதிவை பாருங்கள்.....
أن الإقدام على تكفير المؤمنين عسير جداً. وكل من في قلبه إيمان يستعظم القول بتكفير أهل الهواء والبدعة مع قولهم لا اله الا الله محمد رسول الله فإن التكفير عظيم الخطر
முஃமீன்களை காஃபிர் எனக்கூறுவதில் முன்னோக்குவதானது மிகவும் ஆபத்தான ஒரு காரியமாகும். பின்னும் எவருடைய உள்ளத்தில் ஈமான் இருக்குமோ அவர் நப்ஸுக்கு வழிபடுவோரையும் பித்அத்வாகளையும் கூட காபிரெனக் கூறுவதை மிகவும் ஆபத்தாதென்றே எண்ணுவார். இப்படிப்பட்ட நிலையில் யார் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என கூறுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களை காபிரெனக் கூறுவது மிகப்பெரும் ஆபத்திற்குரிய ஒன்றாகும்.
நூல்: அல்யவாகீத் வல் ஜவாஹீர் பக்கம்- 27
இவ்வாறே ஹழ்ரத் முஜத்தித் அல்ஃபஸானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றனர்....
உலமாக்கள் கூறுகின்றனர். அதாவது 99 சதவீதம் குப்ருடைய நிலை காணப்பட்டு ஒரேயோரு சதவீதம் இஸ்லாத்திற்குரிய நிலை காணப்பட்டால் அந்த நிலையிலும் கூட குப்ரை கொண்டு திர்ப்பளிக்கக்கூடாது
நூல்:மக்தூபாத், பாகம்- 3, பக்கம்- 70
அல்லாமா ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திஸ் தெஹ்லவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் நல்லுபதேசம் போன்ற நமக்கு எடுத்துக் காட்டுகின்றனர். அதாவது ...
أما الوصية:
فان تكف لسانك من أهل القبلة ماداموا قائلين لا إله إلا الله، محمد رسول الله، غير منافقين لها.
والمناقضة تجويزهم الكذب علىيه بعذر، أو غير عذر، فإن التكفير فيه خطر.والسكوت لا خطر فيه.
"தன்னுடைய நாவை தக்ஃபீரை(குப்ரை) கொண்டு தடுத்துக் கொள்ள வேண்டும். எதுவரை அவர்கள் லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்பதை கூறுபவர்களாக இருக்கிறார்களோ அதுவரை. அதேநேரம் முனாபிக்கீன்களைத் தவிர ஏனெனில் முனாபிக்குத்தன்மை என்பதானது கலிமாவை பொய்யைக் கொண்டோ அல்லது தங்கடத்தைக் கொண்டோ அல்லது தங்கடம் இல்லாத நிலையிலோ சொல்வதாகும். எது எப்படி இருந்தாலும் காபிர் எனக் கூறுவதில் ஆபத்துண்டு. அதேநேரம் மௌனமாகி விடுவதில் எந்த ஆபத்தும் இல்லை.
நூல்: பதாவா அஸீஸி, பக்கம்-199
ஒருமுறை இமாமுல் அஃழம் அபூஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு மனிதரைக் குறித்து கேட்கப்பட்டு அவர் மீது என்ன தீர்ப்பு அளிப்பீர்கள் என்று வினவப்பட்டது.அந்த மனிதர் கூறிய வார்த்தையானது.....
لا أرجو الجنة ، ولا أخاف النار ، ولا أخاف الله تعالى ، وآكل الميتة ، وأصلي بلا قراءة وبلا ركوع وسجود وأشهد بما لم أره ، وأبغض الحق وأحب الفتنة
قال أصحابه : أمر هذا الرجل مشكل فقال الإمام : هذا الرجل يرجو الله لا الجنة ، ويخاف الله لا النار ، ولا يخاف بظلم من الله تعالى في عذابه ، ويأكل السمك والجراد ويصلي على الجنازة ، ويشهد بالتوحيد ، ويبغض الموت وهو حق ويحب المال والأولاد وهي فتنة
"நான் சொர்க்கத்தை ஆதரவ வைப்பவனல்ல. இவ்வாறே நரகத்தை குறித்து அஞ்சுபவனுமல்ல. மேலும் அல்லாஹ்வின் மீது எனக்கு எந்தப் பயமுமில்லை. அதே நேரம் நான் இறந்து போனதையே சாப்பிடுகிறேன். இது போன்றே நான் கிராஅத்,ருகூவு,ஸுஜூது போன்றவை இல்லாமலேயே தொழுகிறேன். இன்னும் நான் காணாத ஒன்றைக் குறித்து சாட்சியம் சொல்கிறேன். இது போல உண்மையை நான் வெறுக்கிறேன். அதேநேரம் குழப்பத்தை( பித்னாவை)
நேசிக்கிறேன்
என்றந்த மனிதர் கூறியதாக இமாம் அவர்களிடம் சொல்லிவிட்டு அவருடைய பிரச்சினை மிகவும் சிக்கலானதென்று சொல்ல, அதற்கு இமாமவர்கள் அப்படி ஒன்றும் சிக்கலானதாக எனக்கு தெரியவில்லை. அந்த மனிதர் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கமுண்டு. அதாவது அவர் அல்லாஹ்வின் மீது அதாரவுவைக்கிறார். அதேநேரம் சுவர்க்கத்தின் மீது அவருக்கு ஆதரவு இல்லை.இதே போன்றே அவர் அல்லாஹ்வை அஞ்சுகிறார் அதனால் நரகத்தின் மீது அவருக்குப் பயமில்லை. இவ்வாறு தான் வேதனை செய்யப்படுவோம் என்னும் விஷயத்தில் அல்லாஹ் தன் மீது அநியாயம் செய்யமாட்டானென்றும் நம்புகிறார். அதே போல அவர் மீனையும் ஒருவகை பூச்சியையும் சாப்பிடுகிறார். இவ்வாறு ஜனாஸாவுடைய தொழுகையை தொழுகிறார். (இத்தொழுகையில் தான் கிராஅத்,ருகூவு,ஸுஜூது போன்றவை கிடையாது) இதேபோன்றே தௌஹீதைக் குறித்து சாட்சி சொல்கிறார். அதே நேரம் மரணத்தை வெறுக்கும் அவர் தனது செல்வத்தையும் குழந்தைகளையும் நேசிக்கிறார். அவைதான் பித்னாவாகும் என்று விளக்கம் தந்தனர்."
நூல்:அல்இஷ்பாஹ் வன்நழாயிர், பக்கம்-149
ஒருவர் அவசியமின்றி தேவையில்லாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை உளறுகிறார். பின்னும் அந்த வார்த்தைகள் வெளிப்படையாக பார்க்கும் போது ஷரிஅத்திற்கு முற்றிலும் முரணான ஒன்றாக இருப்பதைக் கூட அவர் அஞ்சியாதாகத் தெரியவில்லை. இந்நிலையில் இமாம் அபூஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அதற்கும் விளக்கம் தருகின்றனர். எனில் அதற்குக் காரணம் இமாமவர்கள் ஒரு முஸ்லிமை முஸ்லிமுடைய ஸ்தானத்தில் நிறுத்தி வைப்பதற்காக அனைத்து வகையிலும் அவர்கள் தனது சமயோஜிதத்தைப் பயன்படுத்துவதை நாம் மேற்கண்ட சம்பவத்தை கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக