imaamshafi #ஷாஃபிஈ#கல்வி#மார்க்ககல்வி#பாவம்#மத்ஹப்#இமாம்கள்#imaamkal
இஸ்லாத்தின் நாற்பெரும் சட்டப் பள்ளிகளில் ஒன்றான ஷாஃபிஈ மத்ஹபைத் (Shafi'ee School of Law) தோற்றுவித்தவர்கள் குறைஷிக் குலத்தைச் சேர்ந்த பனூ முத்தலிப் குடும்பத்தில் பிறந்த இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களாவர்.
அன்னாரின் இயற்பெயர் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ் ஷாஃபிஈ என்பதாகும்.
வரலாற்று நூல்களில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் சிறப்புகள் ஏராளமாக பதியப்பட்டுள்ளன.
ஒருமுறை தம் ஆசிரியப் பெருந்தகையான இமாம் வகீஉ (ரஹ்) அவர்களிடம் இமாம் ஷாஃபிஈ,(ரஹ்) அவர்கள் தமது ஞாபக மறதி குறித்து முறையிட்டபோது தமக்கு தமது ஆசிரியர் செய்த உபதேசத்தை இமாம் அவர்களே கவிதையாகப் பாடியுள்ளார்கள்.
இமாம் அவர்களின் தன்னடக்கத்தைக் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்தக் கவிதையின் கருத்தை அறிந்து கொண்டால் போதும்.
பாவங்களை விட்டு மிகவும் பேணுதலான இறையச்ச மிக்க வாழ்க்கை வாழ்ந்து வந்த இமாம் அவர்கள் தமது ஆசிரியர் தன்னை நோக்கி 'என் இனிய மாணவரே! பாவங்கள் புரிவதை முதலில், நிறுத்தும். பாவங்களைக் கைவிட்டால் மட்டுமே இறையொளியான மார்க்கக் கல்வியை அடைந்திடத் தேவையான நினைவாற்றல் உமக்குக் கிடைக்கும்" என்று கூறிய பின்னரும் கோபப்படாமல் அதை அப்படியே ஏற்றுக் கொண்ட அப்பழுக்கற்ற அந்த ஞானியின் பணிவான குணத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை எனலாம்.
அந்தக் கவிதையைக் கேளுங்கள்:
شكوت إلى وكيع سوء حفظي
فأوصاني إلى ترك المعاصي
فإن العلم نور من إلهي
ونور الله لا يعطي لعاصي
ஷ(க்)கவ்த்து இலா வகீஇன் சூஅ ஹிஃப்ழீ
ஃப அவ்ஸா னீ இலா தர்கில் ம ஆஸி
ஃப இன்னல் இல்ம நூருன் மின் இலாஹீ
வ நூருல்லாஹி லா யுஃத்தா லிஆஸி"
நான் என் ஆசிரியப் பெருந்தகையான "வகீஉ" அவர்களிடம் 'எனக்கு ஞாபகமறதி அதிகமாக உள்ளது; (அது நான் கல்விகற்பதற்குத் தடையாக உள்ளது) என்று முறையிட்டேன்.
அதற்கவர்கள், "நீர் பாவங்கள் புரிவதை நிறுத்திவிடும்!" அப்போது உங்கள் நினைவாற்றலைத் திரும்பப் பெறுவீர்!
"ஏனெனில், கல்வியறிவு என்பது இறைவனிடமிருந்து வரும் ஓர் ஒளியாகும்; அந்த இறையொளி பாவிகளுக்கு வழங்கப் படுவதில்லை" என்று உபதேசித்தார்கள்.
இந்தக் கவிதையில் இறைநேசரும் இறைச்சட்ட ஞானியும் மாபெரும் அறிவு ஜீவியும் (Giant Intellectual) மிகவும் பேணுதலானஅண்ணலாரின் வழித்தோன்றலுமான தமது மாணவரிடமே பாவங்கள் புரியாமல் இருக்கும்படி உபதேசித்த அந்த ஆசிரியர் எத்தகைய பேணுதல் உடையவராய் இருக்க வேண்டும்?
அதைவிட வியப்பான விஷயம் என்னவெனில் இஸ்லாமிய உலகமே தன்னை வியந்து பார்த்துக் கொண்டிருக்க,
தனது இறையுணர்வையும் இறைபக்தியையும் உலகமே போற்றிக் கொண்டிருக்க, இப்படி சொன்னதற்காகக் கோபித்துக் கொள்ளாமல் தமது ஆசிரியருக்கு தம்மை விமர்சிக்கவும் தமக்கு உபதேசம் செய்யவும்
முழு உரிமை உண்டு என்ற மனப்பக்குவம் கொண்டிருந்தது மட்டுமன்றி அதைப் பெருமையுடன் பிற மக்களுக்குக் கவிதை வடிவில் எடுத்துரைத்து ஆசிரியரைக் கொண்டாடும் நற்பண்பும் அமைந்தவராய் இமாம் அவர்கள் இருந்தது நமக்கு வியப்பளிக்கிறது அல்லவா?
உண்மையில் தமது சின்னஞ்சிறு பிழைகளைக் கூட பாவங்கள் போல் கருதி இறைவனிடம் மன்னிப்பு கேட்டு வந்தவர்கள் தான் நமது இமாம்கள்! நமது இமாம்களின் வாழ்வில் நமக்குப் பல படிப்பினைகள் உள்ளன.
மௌலானா காஞ்சி அப்துல் ரவூப் பாகவி
கருத்துகள்
கருத்துரையிடுக