குழந்தைகள் தினம் #சாபம் #திட்டாதீர்
குழந்தைகளைச் சபிக்காதீர்கள்..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொன்ன பேச்சு கேட்கவில்லை எனில் உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டத் தொடங்கிவிடுவார்கள்.
கனிவுடன் கூடிய கண்டிப்பு என்றால் பரவாயில்லை. ஆனால் பெற்றோர்கள் சிலர் பிள்ளைகள் என்றும் பார்க்காமல் சபிக்கவே தொடங்கிவிடுவார்கள்.
‘நீ நாசமாய்ப் போக’
‘கழிச்சல்ல போக’ ‘
‘பிச்சை எடுத்துதான் அலைவ’
‘தரித்திரம் பிடிச்சவனே, ஏன்டா என் வயித்தில வந்து பிறந்த?’
இப்படிப் பிள்ளைகளை வாயில் வந்தபடி சபிக்கும் பெற்றோர்களுக்குக் குறைவே இல்லை.
ஆனால் ஒருபோதும் பிள்ளைகளைச் சபிக்கவே கூடாது. மாறாக, அவர்களின் நல்வாழ்வுக்காக இறைவனிடம் மனமுருகி இறைஞ்ச வேண்டும்.
ஊதாரியாய், தறுதலையாய், மொடாக்குடியனாய்த் திரிந்த ஒரு மகன் நபிமொழிக்கலை மேதையாய் மாறியதற்குக் காரணம், அவருடைய பெற்றோரின் இறைஞ்சுதல்தான்!
அப்துல்லாஹ் இப்னு முபாரக் என்பவர் மாபெரும் மார்க்க அறிஞர். நபிமொழிகளை ஆய்வுசெய்து அத்துறையில் பெரும் புலமை பெற்றவர்.
ஆனால் இவருடைய இளமை வாழ்வு எப்படி இருந்தது தெரியுமா? தவறான நடத்தை, ஊதாரித்தனம், கேளிக்கை, மது, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான்.
அப்துல்லாஹ்வின் பெற்றோர்கள் தங்கள் அன்பு மகனைத் திருத்த எவ்வளோ முயன்றார்கள். முடியவில்லை.
இறுதியில் இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இரவும் பகலும் இறைவனிடம் கையேந் தினார்கள்.
“இறைவா, எங்கள் மகனுக்கு நீ நேர்வழியைக் காட்டு” என்று தொழுகையில் கண்ணீர் சிந்தினார்கள்.
மகனுக்காக நோன்பு நோற்றார்கள். தான தர்மங்கள் செய்தார்கள்.
ஒருநாள் இந்தப் பெற்றோர்களின் இதயக் குரலுக்கு இறைவன் செவிசாய்த்தான்.
அப்துல்லாஹ் வழக்கம்போல் இரவில் மது அருந்திவிட்டுக் கூத்துக் கும்மாளம் எல்லாம் முடிந்து அயர்ந்து உறங்கத் தொடங்கினார்.
அப்பொழுது ஓர் அழகிய கனவு..!
கண்களைக் கவரும் ஓர் எழில்மிகு தோட்டம்!
அங்கு ஒரு பறவை, ‘இறைவனை நினைத்து உன் இதயம் நடுங்கும் நேரம் வரவில்லையா? சத்தியத்தை ஏற்பதற்கு இன்னும் காலம் கனியவில்லையா?’ என்று இனிமையாகப் பாடியது.
திருக்குர்ஆன் 57ஆம் அத்தியாயத்தில் உள்ள ஒரு வசனத்தின் கருத்தை தான் அந்தப் பறவை பாடலாய் இசைத்தது.
“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் இறைவனின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கிவைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?” (குர்ஆன் 57:16)
அவ்வளவுதான்! அப்துல்லாஹ்வின் உறக்கம் கலைந்தது. துள்ளி எழுந்தார்.
‘இறைவா, அதற்கான நேரம் வந்துவிட்டது; அதற்கான நேரம் வந்துவிட்டது” என்றார்.
உடனே குளித்து முடித்து இறைவனைத் தொழுதார். அதற்குப் பிறகு தம் வாழ்க்கை முழுவதையும் இறைவனுக்காகவே அர்ப்பணித்தார்.
வேதத்தையும் நபிமொழிகளையும் கசடறக் கற்றுத் தேர்ந்தார்.
அகிலம் புகழும் மார்க்க அறிஞர் ஆனார்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) என்று இன்றளவும் போற்றப்படுகிறார்.
பார்த்தீர்களா, குடிகாரனாய் இருந்த ஒரு மகனைப் பெற்றோரின் இறைஞ்சுதல் எப்படி மாற்றியது என்பதை?
ஆகவே பிள்ளைகளை ஒருபோதும் சபிக்காதீர்கள்.
அவர்களுக்காக இறைஞ்சுங்கள்.
பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் செய்யும் பிரார்த்தனை இறைவனின் அருள்வாசலைத் தட்டும் ஆற்றலுடையது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
“எந்தத் தந்தையும் தன் மகனுக்கு நல்லொழுக்கத்தை விடச் சிறந்த அன்பளிப்பைத் தர முடியாது.” (நபிமொழி)
கருத்துகள்
கருத்துரையிடுக