#ஒற்றுமை #தொழுகை #சஜ்தா

அஸ்ஸலாமு அலைக்கும்

               ( உருது கவிதையின் தமிழாக்கம் )

முஸ்லிம்களிடையேயுள்ள பிரிவினைகள் பற்றி மகாகவி அல்லாமா இக்பால் அவர்கள் எழுதியது .

தமிழில்: காஞ்சி அப்துல் ரவூப் பாகவி
( IFTN- ஒருங்கிணைப்பாளர்)

நேற்று என் மதம்‌ எது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு என்னைக் கொல்லாமல் உயிர் பிழைக்க விட்டார்கள்!

இன்று அவர்களே என் மதத்திற்குள் நான் சார்ந்துள்ள பிரிவு எது என்று கேட்டு என் உயிரைப் பறிக்கிறார்கள்!

தொழுகையில் கையை உயர்த்த வேண்டுமா உயர்த்தக் கூடாதா என்ற சர்ச்சையில்  அதிகம் ஈடுபடாதீர்கள் முஸ்லிம்களே! 

ஏனென்றால், கையே இல்லாதவர்களின்‌ தொழுகை கூட நிறைவேறி விடுகின்றது‌!

"நீங்கள் தொழுகையில் கையைக் கட்டிக் கொள்ள வேண்டுமா?" அல்லது "கையைக் கட்டாமல் தொங்கவிட வேண்டுமா?" என்னும் சர்ச்சையில் மூழ்கிக் கிடக்கிறீர்கள். 

உங்கள் எதிரிகளோ உங்கள் கைகளை வெட்டுவதற்கு திட்டமிடுகின்றார்கள்.
உலகாசை எனும் ஏமாற்றகரமான மாயையில் மூழ்கி ஆயிரக்கணக்கான சஜ்தாக்களை நாம் வேளை தவறி நிறைவேற்றியுள்ளோம்!

ஆனால்,  நம் சொர்க்கத்தின் தலைவர்களோ மழை போல் பொழிந்த அம்புகளுக்கு இடையேயும் தொழுகையை அதன் நேரத்தில்  நிறைவேற்றத் தவறவில்லை!

இறைக்காதலுடன் கூடிய சஜ்தாவினால் இறைவணக்கத்தில் சுவை கிட்டுகின்றது!

வெற்று சஜ்தாவில் உலக. மோகம் மட்டுமே காணக் கிடைக்கின்றது!

கடமையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று மக்கள் கூறுகின்றார்கள்!

இறைவனிடம் பட்ட கடனைக் கழித்தால் போதும் என்ற மனநிலை தான் அவர்களிடம் தென்படுகின்றது. 

முஸ்லிமே! உனது சஜ்தா உன்னை இறைமறுப்பாளனாக்கிவிட வேண்டாம்!

ஏனெனில், நீ சிரம் தாழ்த்துவது ஓரிடத்தில் ! ஆனால், உன் சிந்தனை இருப்பதோ வேறிடத்தில்!

சிலர் சொர்க்கத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனில், வேறு சிலரோ கவலைகளால்  திகைத்துப் போயிருக்கிறார்கள்!!

மனிதனின் தேவைகள் தான் அவனை சஜ்தா செய்ய வைக்கின்றன‌!  
இறைவனை வணங்குவதற்காக யார் சஜ்தா செய்கிறார்?

சஜ்தாக்கள் செய்த அடையாளம் உன் நெற்றியில் இருந்தால் தான் என்ன? 

பூமியில் அடையாளம் விட்டுச் செல்லும் படியான ஒரு சஜ்தாவை யாரேனும் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

இன்று சத்தியத்திற்காக தன் உயிரை யாரேனும் அர்ப்பணிக்கட்டும்!

விசுவாசமே மெய்சிலிர்க்கும் அளவிற்கு யாரேனும் விசுவாசமாக நடந்து காட்டட்டும்!

தொழுகை ஆயிரத்து நானூறு ஆண்டுகளாகக் காத்திருக்கின்றது.....

என்னை நபித்தோழர்கள் நிறைவேற்றியதைப்  போல் நிறைவேற்றுபவர் எவரும் கிடைக்க மாட்டாரா என்று!

ஒரேயொரு சஜ்தா போதும்
இறைவன் நம் கோரிக்கைளை
ஏற்றுக் கொள்ள ...

ஆனால், மனிதனோ  உயிரை எடுத்துக் கொண்ட பின்பும் திருப்தியடைவதில்லை!

பள்ளிவாசல்களில் நாம் தொழுகைக்கு வாருங்கள் வெற்றியடைய வாருங்கள் என்று பாங்கு சொல்லிவிடுகின்றோம்!

ஆனால், பள்ளிவாசலுக்கு வெளியே அறிவிப்புப் பலகையில் இன்ன பிரிவைச் சேர்ந்தவர் உள்ளே வர அனுமதியில்லை என்று எழுதி வைக்கின்றோம்!

ஷைத்தானுக்குக் கூட இன்று முஸ்லிமைக் கண்டு அச்சம் ஏற்படுகின்றது.

ஏனெனில்,  இன்றைய முஸ்லிம் தொழுவதாயிருந்தாலும் கூட  "இந்தப் பள்ளிவாசல் எந்தப் பிரிவினருடையது?" என்று பார்த்துத் தான் தொழுகிறான்.

முஸ்லிம்களின் ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களை காஃபிர்கள் என்று கூறினர்!

ஆனால்   காஃபிர்கள் தான் நம் அனைவரையுமே முஸ்லிம்கள் என்று அழைத்து ஒரே மார்க்கத்தினராக ஆக்கியிருக்கின்றனர்.
-------------------------------------------------------------------------------
ISLAMIC FEDERATION OF TAMIL NADU
(IFTN- 9/10/2022)
--------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?