#வாசப்படி #மனைவி#குடும்பம்#இப்ராஹீம் நபி#இஸ்மாயீல்நபி

உள்ளே - வெளியே 3

( வாயிற் படி )

ஒரு பாலைவனத்தில் சிற்றூர். 

குதிரையில் வந்த ஒரு பெரியவர் ஒரு வீட்டின் முன் நின்றார் . "வீட்டில் யார் இருக்கிறார்கள் ?" என்று குதிரையில் இருந்தபடியே கேட்டார். 

வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண் வாசற்படியில் வந்து நின்றாள் .
பெரியவர் அவளிடம் , " உன் கணவர் எங்கே ? " என்று வினவினார் .

அவள் சிடுசிடுப்போடு , "வீட்டில் இல்லாதவரைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள் ? " என்றாள் .

அவர் " உன் கணவர் எப்போது திரும்புவார் ? "என்று கேட்டார் .

அவள் "யாருக்கு தெரியும் ? என்றாள் .

அவர் " உண்ண ஏதேனும் கிடைக்குமா ?" என்றார் .

அவள் "நாங்களோ பசியிலும் பட்டினியிலும் வாடிக் கொண்டிருக்கும் இதில் உங்களுக்கு எதைக் கொடுப்பது ?" என்றாள் 

அதைக் கேட்ட அந்த பெரியவரின் முகம் வாடியது .

அவர் , " நல்லது நான் சென்று வருகிறேன் . உன் கணவர் வீட்டுக்கு வந்ததும் இன்ன இன்ன அடையாளம் உடையவர் இங்கே வந்து இருந்தார். தங்களுக்கு வாழ்த்துக் கூறினார். அதன்பின் இந்த வாசல்படி நன்றாக இல்லை எனவே அதை மாற்றி அமைக்கச் சொன்னார் என்று உன் கணவரிடம் சொல் " என்று கூறி விட்டு போய்விட்டார் .

அவளுடைய கணவர் மாலையில் வீடு திரும்பினார் .

அவள் அவரிடம் " இன்ன இன்ன அடையாளம் உடைய ஒரு பெரியவர் வந்திருந்தார் . உங்களுக்கு வாழ்த்துக் கூறினார் " என்றாள் .

வந்தவர் யார் என்பதை புரிந்து கொண்ட அவர் , " அவரை வீட்டுக்குள் அழைத்தாயா ? உணவு கொடுத்து உபசரித்தாயா ? என்று கேட்டார் .

அவள் குற்ற உணர்வோடு தலை குனிந்து நின்றாள் .

'அவர் " அந்தப் பெரியவர் ஏதாவது சொன்னாரா ? " என்று கேட்டார்.

அவள் " ஆம் . இந்த வீட்டு வாசற்படி நன்றாக இல்லை அதனால் வேறு வாசற்படியை வைக்கச் சொன்னார் " என்றாள் .

அவர் " பாவி பெண்ணே ! வந்திருந்தவர் என் தந்தையார். நெடுங்காலத்திற்கு பிறகு என்னை பார்க்க வந்திருக்கிறார். நெடும் தூரத்திலிருந்து வந்து இருக்கிறார். அவரை நீ உபசரிக்க வேண்டுமா ? என்று கேட்டார் .

" அவர் உங்கள் தந்தை என்று என்னிடம் கூறவே இல்லையே ! "

" நீ கேட்டிருக்கலாமே ? அவர் உன்னை சோதித்திருக்கிறார் . சரி, யாராக இருந்தால் என்ன ? நெடுந்தூரப் பயணம் செய்து களைத்து போயிருக்கும் ஒரு முதியவரை நீ உபசரிக்க வேண்டாமா ? அவர் "வாயிற்படி " என்று சொன்னது உன்னைதான். அவரை உன்னை சரியாக மதிப்பிட்டு இருக்கிறார். வீட்டுக்கு வந்தவர்களை அன்போடு உபசரிப்பவள்தான் இல்லத்தரசி . அந்த குணம் கொஞ்சம் கூட இல்லாத உன்னோடு குடும்பம் நடத்துவது பாவம். இல்லறம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று கூறி அவர் அவளுக்கு மண விலக்கு அளித்து அனுப்பி விட்டார் .

பின்னர் அவர் மற்றொரு பெண்ணை மணம் புரிந்து கொண்டார்.

அடுத்த ஆண்டு அதே பெரியவர் அதே வீட்டிற்கு முன் வந்து நின்றார். 

வெளியிலிருந்து வந்த ஓசையைக் கேட்டு ஒரு பெண் வாயிற்படியில் வந்து நின்றாள் . 

பெரியவர் " அம்மா நீ யார் ? "என்று கேட்டார் .அந்த பெண், "நான் இன்னாரின் மனைவி, இன்னாரின் மகள் " என்றாள் .

" நீங்கள் நலமாக இருக்கிறீர்களா ?"என்று பெரியவர் கேட்டார் . 

" இறைவனின் அருளால் நலமாக இருக்கிறோம்". 

" உன் கணவர் எப்படிப்பட்டவர் ?"

"நல்லவர் என்னை அன்போடு பார்த்துக் கொள்கிறார்" .

" உன் கணவர் எங்கே ?"

" வேட்டைக்காக போயிருக்கிறார்" 

" எப்போது வருவார் ? " 

" இது அவர் வரும் நேரம்தான். நீங்கள் வயது முதியவராக இருக்கிறீர்கள். நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பும் பசியும் உங்கள் முகத்தில் தெரிகிறது தயவுசெய்து நீங்கள் எங்கள் வீட்டில் தங்கி இளைப்பாற வேண்டும் .ஏதோ எங்களிடம் இருக்கும் உணவை தருகிறேன் . நீங்கள் பசியாற வேண்டும். 

அந்த பெண் வீட்டிற்குச் சென்று ரொட்டி , பால் , இறைச்சி, பழங்கள் எல்லாம் கொண்டுவந்து பெரியவரை உண்ணுமாறு அன்போடு வேண்டினாள் . 

தண்ணீர் கொண்டுவந்து பெரியவரின் கால்களைத் தூய்மைப்ப்படுத்தினாள் . 

பெரியவர் உணவை உண்டு மகிழ்ந்தார். " இறைவா ! இப்பொருள்களை இம்மண்ணில் அதிகமாய்க்கி வை ! " என்று பிரார்த்தனை புரிந்தார் .

அந்தப் பெண்ணை நோக்கி , " அம்மா நன்றாக இரு . உன் கணவர் வந்தால், என் வாழ்த்தைக் கூறு .அவருடைய வாயில்படி நன்றாக இருக்கிறது என்றும், அதனால் அதை எதற்காகவும் எப்போதும் மாற்றக் கூடாது என்றும் நான் கூறியதாக அவரிடம் சொல் . நான் சென்று வருகிறேன் "

அந்தப் பெரியவர் சென்றுவிட்டார் .சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த கணவரிடம் அந்தப் பெண் நடந்ததைச் சொன்னாள் 

அவர் " அன்பே..! வந்தவர் என் தந்தை ஆவார் . அவர் யார் என்று தெரியாமலே அவரை அன்போடு உபசரித்து இருக்கிறாய். உன்னை என் மனைவியாகப் பெற்றது அது என் பாக்கியம். என் தந்தை உன்னை ஆசீர்வதித்திருக்கிறார் . நீ பெரும்பேறு பெற்று விட்டாய் . அவர் வாசற்படி என்று சொன்னது உன்னைதான் "என்று கூறி மகிழ்ந்தார்.

வெளிரங்கத்தில் வாசற்படி என்றாலும், உள்ரங்கத்தில் மனைவி என்றே பொருள்படும்

அவர் இறுதிவரை அந்த ஒரு மனைவி உடனேயே இல்லறம் நடத்தினார் .

அந்தப் பெரியவர் , யூதமதம் , கிறிஸ்தவம் இஸ்லாம் என்று இன்று மூன்றாகப் பிரிந்திருக்கும் சமயங்களுக்கு மூல பிதாவான இறை தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் ஆவார் . 

அவருடைய புதல்வர் இறைத்தூதர் இஸ்மாயில் (அலை) (இஸ்மவேல்) ஆவார் . 

இது நடந்த இடம் மக்கா. காலம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் . 

இறைத்தூதர் இப்ராஹிம் அவர்கள் கூறிய "வாயிற்படி "என்பது ஒரு அற்புதமான குறியீடு .

பொதுவாக பெண், சிறப்பாக இல்லத்தரசி எப்படி இருக்கிறாள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்த குறியீடு அழகாக விளக்குகிறது .

பெண் வாயிற்படியாக இருக்கிறாள் . 

வாயிற்படி வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் . 

பெண்ணின் வழியாகத்தான் நாம் இந்த உலகத்திற்கு வந்தோம் . 

நாம் இந்த உலகை வாழ்க்கைக்குள் நுழைய அவளே வாயிற்படியாகும் இருந்தாள் .

நாம் ' வெளியேற ' வேண்டுமென்றாலும் அவள் வழியாகத்தான் வெளியேற வேண்டும் .

வேறு வழி இல்லை .

இல்லறத்திற்குள் நுழைய வாயிற்படி வேண்டும் .

இல்லறத்திற்குள் நுழையப் பெண் வேண்டும் .

நன்மையோ தீமையோ அவள் அனுமதித்தால்தான் வீட்டிற்குள் நுழைய முடியும் .

நன்மையோ தீமையோ அவள் ' கதவை'ச் சாத்திவிட்டால், உள்ளே நுழைய முடியாது.

எனவே நன்மைக்கும் கதவு திறந்து விடுவதும் தீமைக்கு கதவை அடைப்பதும் அவள் பொறுப்பு. 

இல்லறத்திற்கு வேண்டியவை எல்லாம் அவள் வழியாகத்தான் வரவேண்டும். 

ஆணுக்கு வேண்டிய கூட அவள் வழியாகத்தான் வரவேண்டும் . 

வீட்டில் இருப்பவர்களைக் ' கத ' வடைத்து காப்பதும் அவள் பொறுப்பு .

அவர்கள் வெளியே செல்ல வேண்டிய போது அவர்களுக்கு கதவு திறந்து விடுவதும் அவள் பொறுப்பு.

வீடு கட்டும் போது நிலையைத்தான் முதலில் வைப்பார்கள் . பிறகுதான் சுவர் எழுப்புவார்கள்.

இல்லறத்திற்கு பெண்ணே முதன்மையானவள் 

வாயிற்படி குறுகலாக இருந்தால் , நுழைவதும் சிரமும் , வெளியேறுவதும் சிரமம்.

பெண் குறுகிய மனம் கொண்டவளாக இருந்தால் வாழ்க்கையே நரகமாகிவிடும்.

கலவி என்பது வந்த வாசல் வழியாக நுழையும் முயற்சியே .

சொர்க்க வாசலும் பெண்தான் , 
நரக வாசலும் பெண்தான் .

( கவிக்கோ அப்துல் ரகுமான் - பூக்காலம்) - மீள்

ரஹ்மத் ராஜகுமாரன் 944 344 6903 வாட்ஸ் அப் 948 6909 903

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?