மீலாது

*ஒருகணம் நான் உங்களோடு...!*

ஒருகணம்நான் உங்களோடு வாழ்ந்தி ருந்தால்
உலகத்து மாயைதனைப் புரிந்தி ருப்பேன்
ஒருகணம்நான் உங்கள்கண் பட்டி ருந்தால்
உருகிவிடும் மெழுகாகக் கரைந்தி ருப்பேன்
ஒருகணம்நான் உங்கள்சொல் கேட்டி ருந்தால்
உருக்குலையா ஈமானைப் பெற்றி ருப்பேன்
ஒருகணம்நான் தங்களுடன் களித்தி ருந்தால்
ஊமையெனப் புவிவாழ்வை வெறுத்தி ருப்பேன்!

ஒருகணம்நான் உங்கள்நற் பண்பைக் கண்டால்
உயர்வான எண்ணங்கள் கொண்டி ருப்பேன்
ஒருகணம்நான் தங்களுயர் அன்பைப் பெற்றால்
ஓரிறைக்கு நானும்நல் லடியான் ஆவேன்
ஒருகணம்நான் தங்கள்கால் தடம்ந டந்தால்
ஒருபோதும் தடுமாறிச் சரிய மாட்டேன்
ஒருகணம்நான் உங்களாசி கிடைக்கப் பெற்றால்
ஒப்பற்ற சொர்க்கத்து வாசி யாவேன்!

ஒருகணம்நான் தங்களுடல் மணம்மு கர்ந்தால்
உள்வாங்கி மூச்சோடு சேர்த்து வைப்பேன்
ஒருகணம்நான் உங்களைத்தான் கனவில் கண்டால்
உறுபசியைத் தாகமதை மறந்தி ருப்பேன்
ஒருகணம்நான் நபிகளுங்கள் ஷபாஅத் பெற்றால்
உயிர்வாழ்ந்த நற்பேற்றைக் கண்டி ருப்பேன்
ஒருகணம்தான் போதாது;மறுமை நாளில்
உங்களுடன் அருகிருக்க இறையைக் கேட்பேன்!!!

*கவிஞர் பெருங்குளம் ஹாஜா*, 
லூனாஸ், மலேசியா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?