இமாம்களின் நிலை #imaam #hajrath
மெளலவிமார்கள் ஒன்றும் மலக்குகளோ, மரங்கட்டைகளோ அல்ல...
கொழும்பில் உள்ள பிரதான ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்றின் Religious Committee கோடீஸ்வர தலைவருக்கும், இலங்கையில் உள்ள ஒரு "பிரபலமான" கதீப் ஒருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்:
நிர்வாகி: ஹஸ்ரத், ஏலும்டா ஒரு நல்ல மெளலவி ஒர்த்தர எங்கட பள்ளிக்கு புடிச்சி தாங்களே இமாமத் செய்ய...
கதீப்: ஏன் ஹாஜி... நான் ஆறு மாசத்துக்கு முந்தி கொத்பாக்கு வரப்போக்கல ஒருத்தர் இருந்தாரு தானே... அவர் எங்க...?
நிர்வாகி: அவர் வெலவிட்டாரு... எனக்கு வெறுத்து போவ்து இந்த மெளலவிமார்க்கல தேடித் தேடி... இந்த ரெண்டு வருஷத்துல எத்தன மெளலவி வந்துட்டு வந்துட்டு போறாங்க... இப்போ கிட்டத்துல கூட ஒர்த்தர Interview பண்ணிணன். அவருக்கு வாய்க்கொழுப்பு கூடப் போல...
கதீப்: ஏன் ஹாஜி அவர் என்ன சொல்றாரு...?
நிர்வாகி: எங்கட Rules and Regulations, Conditions எல்லாத்துக்கும் Okayயாம்... ஆனா Salary எவ்ளவ் எதிர்ப்பாக்குரிங்க எண்டு கேட்டதுக்கு, "பரவால்ல ஹாஜி... ஒங்கட குடும்பத்துக்கு மாசத்துக்கு எவ்ளவ் செலவழிக்கிரிங்களோ, அத தந்தா போதும்" எண்டு சொல்றார். எப்டி இரிக்கி கத..?
கதீப்: சரியாத்தானே கேட்டீக்கிரார்... இதிலென்ன ப்ரச்சின..?
நிர்வாகி: நீங்க ஜாதி ஆள் எனா ஹஸ்ரத்... எனக்கும் ஏன்ட வைஃப் ரெண்டு புள்ளேல் ஊட்டு செலவ் கரண்ட் தண்ணி டெலிபோன் பில் புள்ளேல்ட ஹய ஸடீஸ் ஸ்கூல் செலவ் வாகன செலவ் எல்லாம் மாசத்துக்கு எழுபத்தஞ்சாய்ரம் தாண்டுது... அத இந்த மெளலவிக்கு குடுக்கேலுமா..?
கதீப்: அந்த மெளலவிட குடும்பம் எப்டியாம்?
நிர்வாகி: அவங்க எங்கயோ ஒரு "தொல்லைல" ஈக்கிறாங்களாம். அவர்ட பொண்டாட்டி, மூணு புள்ளேலாம், வயசான "நஸல்"ல படுக்குற உம்மாவுமாம். மூணு புள்ளேலும் ஸ்கூல் போவுதாம்.
கதீப்: நீங்க எவ்ளவ் தாரேண்டு சொண்ணீங்க?
நிர்வாகி: இருவத்தஞ்சாய்ரம் ஹஸ்ரத்... அது போதாவா மன்சனுக்கு...
நிர்வாகியின் பதிலைக் கேட்டதும் ஆடிப் போன கதீப் அவர்கள் நன்றாக நாக்கை பிடுங்குற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். வழமையாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குத்பாவிற்கு அழைப்பு விடுக்கும் குறித்த நிர்வாகி இப்போது அந்த கதீபை கூப்பிடுவதே இல்லையாம். ஏனெனில் குறித்த அந்த கதீப், மிகவும் கண்டிப்பானவர், உரத்த தொனியில் "வெட்டொன்று துண்டு ரெண்டு" என தைரியமாக எதையும் மிம்பரில் பேசக்கூடியவர், பொதுவாக பள்ளிவாசல் நிர்வாகிகளின் திருப்தியற்ற சேவைகளை துணிச்சலுடன் மிம்பரில் விமர்சிப்பவர். அப்படிப்பட்ட ஒரு கதீபிடம் இவ்வாறான ஒரு நிர்வாகி மாட்டிப்பட்டிருந்தால் எவ்வாறு பதிலளித்திருப்பார் என்பதனை நான் சொல்ல வேண்டியதில்லை.
பொதுவாக இந்த கவலைக்கிடமான நிலமையை நாட்டில் உள்ள அனேகமான பள்ளிவாசல்களில் நாளாந்தம் காணக்கூடியதாகவும், கேட்க்கக் கூடியதாகவும் உள்ளது. "மெளலவிமார்கள்" என்ன சாதாரணமானவர்களா? "அறிந்தோரும், அறியாதோரும் சமமாகுவார்களா?" என்ற குர்ஆன் ஆயத்தும் "உலமாக்கள் நபிமார்கள்களின் வாரிசுகள்" "உலமாக்களைப் பற்றி குறை, கோள், புறம் பேசுவது நஞ்சூட்டப்பட்ட இறைச்சியை தின்பதற்கு சமம்" என்ற ஹதீஸ்களும் உலமாக்களின் சிறப்புக்களை எடுத்தியம்புகின்றன.
இன்று நாட்டில் உள்ள பெரும்பாலான உலமாக்கள் ஏழெட்டு வருடங்கள் (சில வேளைகளில் பத்து வருடங்கள்) குடும்பத்தை, சொந்த ஊரை விட்டு விட்டு வெகு தூரம் சென்று ஒரு மத்றஸாவில் இணைந்து பசி, தூக்கத்தை தியாகம் செய்து எவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் அதபு, ஒழுக்கத்தோடு கால் மடித்து இல்ம் கற்றவர்கள். தஹஜ்ஜுத்திற்கு நடுநிசி மூன்றரை மணிக்கு எழும்பியதிலிருந்து இரவு பத்து மணி வரை (லுஹரிற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் "கைலுலா" தூக்கத்தை தவிர மற்றைய) எல்லா நேரங்களிலும் குர்ஆனையும், ஹதீஸையும் ஏனைய கலைகளையும் துறைபோகக் கற்று வெளிவந்தவர்கள் தான் நம் கண் முன்னே இருக்கும் ஒவ்வொரு உலமாக்களும்.
அவர்கள் மத்றஸாவில் ஓதுகின்ற காலங்களில் வெறும் பசி, தூக்கத்தை மட்டும் தியாகம் செய்யவில்லை. அவர்களின் குடும்பத்தில் ஏற்பட்ட ஹயாத்து, மெளத்து போன்ற எல்லாவற்றையும் தான் தியாகம் செய்துள்ளனர். மிகவும் நெருங்கிய இரத்த உறவினைத் தவிர ஏனைய உறவுகளின் எந்த ஒரு ஹயாத்து, மெளத்து விடயங்களுக்கு அவர்கள் வெளியே போய்வர அனுமதிக்கப்படுவதில்லை. வாய்க்கு ருசியாக நல்ல சாப்பாடுகள் சாப்பிட வாய்ப்புகள் கிடைத்திருக்காது. ஒரு வருடத்தில் மூன்று முறை தான் வீட்டிற்கு செல்ல அனுமதி. தொலைத் தொடர்ப்பு வசதிகள் மிக குறைவான அந்த காலங்களில் உம்மா, வாப்பா வரும் நாளை வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். வழியனுப்பும் போது கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கும். ஓரிரு வருடங்கள் அல்ல. ஏழெட்டு பத்து வருடங்கள். அதனால் தான் உலமாக்கள் சொல்கிறார்கள் "ஆயிரம் பகுதி நேர மத்றஸாக்கள் பூனைக் குட்டி போட்ட மாதிரி இன்று முளைத்தாலும், அவை ஒரு முழு நேர மத்ஸாவின் அதபு, ஒழுக்கம், இல்ம், தர்பியத்திற்கு என்றுமே ஒப்பாகாது".
அப்படிப்பட்ட உலமாக்களை நாம் மதிக்க வேண்டும். கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களை ஒரு போதும் நாம் குறைவாக மதிப்பிடக் கூடாது. அவர்களுக்கு தெரியாதது எதுவுமில்லை. அவர்கள் "காலல்லாஹ், கால றஸுலல்லாஹ்" வை மனதில் சுமந்து கொண்டிருக்கின்றவர்கள். எல்லாம் தெரிந்தும் பணிவு என்ற போர்வையை அணிந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிர்வாகிகள், மஹல்லாவாசிகளான நாம் தான் செய்து கொடுக்க வேண்டும். எங்களால் வசதியில்லை என்றால் அவர்களுக்காக குரல் எழுப்ப வேண்டும்.
மெளலவிமார்களான உலமாக்கள் ஒன்றும் மரங்கட்டைகள் அல்ல. அவர்களுக்கும் மனைவி, பிள்ளைகள், குடும்பம் என எல்லாம் உண்டு. அவர்களுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. அவர்கள் ஒன்றும் மலக்குகள் அல்ல. நாட்டில் உள்ள பெரும்பாலான மெளலவிமார்கள் பெரும் கஷ்டத்தின் மத்தியில் ஏழ்மையுடன் கொஞ்ச சம்பளத்துடன் தனது குடும்ப வாழ்க்கையை நடாத்திச் செல்கின்றனர். அவர்கள் ஒருபோதும் பெரும் பங்களாவில் AC அறைகளில் வாழ ஆசைப்படவில்லை. உடைந்த, ஒழுகுகின்ற கூரைகளை திருத்தி மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்குவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும் என்று வாழ்கின்றவர்கள். மெளலவிமார்கள் Sub, Burger, Shawarma சாப்பிட ஆசைப்படவில்லை, மாதத்திற்கு ஒரு முறையாவது தனது குடும்பம் நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என நினைக்கின்றவர்கள். மெளலவிகள் தனது பிள்ளைகள் Famous International பாடசாலைகளில் படிக்க வேண்டும் என்று விருப்பப்படவில்லை. Government பாடசாலைகளில் சரி சகல வசதிகளுடன் தம் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றவர்கள். அதைத் தவிர மெளலவிமார்கள் BMW கார்களையோ, ஆடம்பர உடுப்புக்களையோ ஒரு போதும் விரும்பவில்லை. அனேகமான மெளலவிமார்கள் இன்னும் ஒரு சிறிய Push Cycle உடன் தான் காலத்தை கழிக்கின்றனர்.
பள்ளிவாசலொன்றினுள் பணி புரியும் மெளலவி ஒருவரின் வழமையான கடமைகளை கொஞ்சம் பார்ப்போம். மெளலவியானவர் ஐந்து வக்த்திற்கும் பொறுப்பு, ஜனாஸா தொழுகைகள், குஸுப் தொழுகைகள், இடைக்கிடையே பயான்கள், குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ் விளக்கங்கள், றமழான் காலங்களில் தராவீஹ், வித்ர், இறுதிப் பத்தில் தஸ்பீஹ், கியாமுல் லைல் தொழுகைகள், பெருநாள் குத்பா, தொழுகை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பெருநாட்களில் ஈத் தொழுகைகளை தொழுவித்துவிட்டுத்தான் போகணும். சில நேரங்களில் இரவில் வரும் ஜனாஸா தொழுகைகளையும் நடாத்தி, தல்கீனையும் யாஸீனும் ஓதி பயானும் பண்ண வேண்டும். முஅத்தின் இல்லாத நாட்களில் தவறாமல் பாங்கு சொல்ல வேண்டும். மெளலவிக்கு மாதத்தில் நான்கைந்து நாட்கள் விடுமுறை. ஊருக்கு போவதற்கும் வருவதற்கும் ஒவ்வொரு நாட்கள் நீங்கலாக மீதி இரண்டு மூன்று நாட்கள் தான் தன் குடுபத்துடன். சில பள்ளிகள் சிறைக்கூடம் போன்று உள்ளே "அடைந்து கிட" வெளியே போக முடியாது. சில பள்ளிகள் Office போன்று Log in/out Book எல்லாம் வைத்துள்ளனர்.
திருமணம் முடித்த சாதாரண ஒருவரால் தன் மனைவியைப் பிரிந்து ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்து நாட்கள் இருக்க முடியுமா? முடியாது. அல்லாஹுதஆலா முஃமினஃகளான எமது உடலிச்சையை ஹலாலான முறையில் பூர்த்தி செய்ய கட்டளைப் பிறப்பித்து அதற்கு நன்மைகளையும் வழங்குகின்றான். அப்படியிருக்க மெளலவிமார்களை மாதத்திற்கொரு முறை மட்டும் வீட்டுக்கு அனுப்புவது எவ்வகையில் நியாயம்? சில சந்தர்ப்பங்களில் உதவி இமாம்கள் இல்லாத பள்ளிகளில் ஒன்றரை மாதங்களுக்கொரு முறை தான் வீட்டிற்கு போக நிர்வாகிகள் அனுமதிக்கின்றனர். அதனால் தான் அண்மையில் கொழும்பு கொள்ளுப்பிட்டி குத்பா ஒன்றில் அல் ஆலிம் அல் உஸ்தாத் அர்க்கம் நூராமித் (தாருல் உலூம்- கேப்டவுன்) அவர்கள் "முடியுமெனில் ஒவ்வொரு பள்ளிகளும் அந்த பள்ளியில் கடமைப் புரியும் மெளலவிகளின் குடும்பத்தை பள்ளிக்கு அண்மையில் ஒரு வீட்டில் குடியமர்த்தச் செய்ய முயற்சி செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள்.
பள்ளி நிர்வாகிகளே! நீங்கள் அல்லாஹுதஆலாவின் வீட்டை நிர்வகிக்கும் ஒரு உன்னதமான சேவையை செய்பவர்கள். பெரும் அமானிதமொன்றை சுமந்துக் கொண்டிருப்பவர்கள். தினமும் ஐந்து வேளைகளில் பாங்கு சொல்லி, தொழுவிக்கும் உலமாக்களை மதியுங்கள், கண்ணியப்படுத்துங்கள். விலைவாசி, சிகரத்தை எட்டியுள்ள இக்காலத்தில் அவர்களின் சம்பளத்தை உயர்த்தி தாராளமாக வழங்குங்கள். மஹல்லாவாசிகளே! நீங்களும் இரகசிய ஸதகாக்கள் மூலம் உலமாக்களுக்கு உதவி புரியுங்கள். அவர்கள் ஒரு போதும் ஏழ்மையை சொல்லிக்காட்டமாட்டாரகள். நாங்கள் தான் அதனை விளங்கிக் கொண்டு முக்கியமாக றமழான், பெருநாள் காலங்களிலாவது எமது ஸதகாக்களை இரகசியமாக வாரி வழங்க வேண்டும். மஹல்லாவாசிகளான நீங்கள் ஏதாவது ஒரு ஹக்கை மெளலவிக்கு கொடுக்க நாடினால், அல்லாஹுக்காக இரகசியமாக குறித்த அந்த மெளலவியிடம் கொடுத்துவிடுங்கள். இதை நான் ஏன் திரும்பத்திரும்ப சொல்கின்றேன் என்றால், கடந்த றமழானில் கொழும்பு 5 இல் உள்ள ஒரு ஜும்ஆ பள்ளிக்கு தொழுகைக்காக சென்ற நேரத்தில் அங்கு கடமைப் புரிந்துக் கொண்டிருந்த மெளலவிக்கு யாரும் எதுவும் கொடுக்க முடியாது என எழுதப்பட்டிருந்தது. அப்படி கொடுப்பதாக இருந்தால் நிர்வாகம் வைத்துள்ள ஒரு தாளில் தமது பெயர், முகவரி எழுதி ஒப்பமிட்டு ஸதகாக்களை சிறப்பு உண்டியலில் போட்டுவிட வேண்டும். அதை நிர்வாகிகள் இறுதியில் கணக்கிட்டு முழுமையாக மெளலவியிடம் கொடுப்பார்கள் என என்ன நிச்சயம் இருக்கிறது?
அஸீம் லாஹிர்
கொழும்பு
கருத்துகள்
கருத்துரையிடுக