ஹக்,حق சித்க் صدق என்ன வித்தியாசம்?

மீள் 
ஹக்,حق சித்க் صدق என்ன வித்தியாசம்?
******************-*----******
கூத்தாநல்லூர் மதரஸா மன்பவுல் உலா வில் நான்காவது ஜும்ரா ஓதினேன்.அங்கு கண்ணியத்திற்குறிய என் உஸ்தாத் பெருந்தகை கம்பம் அப்துல் கனி ஹஜரத் அவர்களிடம் شرح التهديب
என்ற மன்திக் (தர்க்கக் கலை)கிதாப் வகுப்பில்

ஹக் ,ஸித்க் இரண்டிற்கும் உண்மை என்று பொருள் கொள்கிறோம்
இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
எனக் கேட்டேன்.
அதற்கு அவர்கள் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினார்கள்.

    உன்னை பெரிய ஹஜரத் அழைத்து அப்துல் கனிஹஜரத் அறையில் இருக்கிறாரா பார்த்து வா என்கிறார்.
நீ வருகிறாய்.

என் அறையின் கதவு சாத்தியிருக்கிறது
 எனது காலணி வெளியே இருக்கின்றது
 நான் உள்ளே இருப்பதாக நம்பிக்கொண்டு பெரிய ஹஜரத் திடம் ஹஜரத் அறையில் இருக்கிறார்"
எனச் சொல்கிறாய்.
 
 ஆனால் உண்மை என்னவென்றால் காலணியின் வார் அறுந்து விட்டதால் நான் வேறு காலணியை அணிந்து கொண்டு வெளியே சென்றுவிட்டேன்.

 நான் அறையில் இல்லை என்பதுதான்
உண்மை நிலை
எது உண்மை நிலையோ அதை ஹக் என்று சொல்லப்படும் 

அதே நேரத்தில் நான் இருக்கிறேன் என நம்பிக்கொண்டு நீ சொன்னது ஹக்கிற்கு மாற்றமாக இருந்தாலும் அதை பொய் எனச் சொல்லமுடியாது ஏனென்றால் உன்னைப் பொறுத்தவரை அது உண்மை .

#சித்க் என்பது ஒருவனின் உள்ளத்திலுள்ளதையே உதட்டால் மொழிவது
  அதாவது உள்ளத்திலுள்ளதும் உதட்டிலிருந்து வெளிவரும் வார்த்தைகளும் ஒன்றாக இருந்தால் அது ஸித்க் அவன் சாதிக் உண்மையாளன்.

உள்ளமும் உதடும் மாறுபட்டால் அது கித்ப்
அவன் பொய்யான்.

உதரணமாக நான் அறையில் இருப்பதாக நீ நினைக்கிறாய் ஆனால் நான் இருப்பதாக பெரியஹஜரத்திடம் சொன்னால் மீண்டும் ஹஜரத்திடம் போய் இதை வாங்கிவா என அனுப்புவார் எனவே இல்லைஎனச் சொல்லிவிடுவோம் என எண்ணி பெரிய ஹஜரத்திடம் ஹஜரத் இல்லை எனச் சொல்கிறாய் நான் அறையில் இல்லை என நீ சொல்வது ஹக்.ஆனாலும் நீ பொய்யன் ஏனென்றால் உன் உள்ளத்தில் நான் இருப்பதாக நம்பிக்கொண்டு உதட்டளவில் இல்லை என்று சொல்கிறாய் எனவே நீ பொய் சொல்கிறாய் நீ பொய்யன் எனச் சொல்லப்படும்.

     ஹக் حق என்பது நிகழ்வுகளுடன்(واقع) தொடர்புடையது.
சித்க்(صدق) என்பது ஒருவருடைய (قول)பேசுவதுடன் தொடர்புடையது.
பல மணித்துளிகளில் விளக்கவேண்டியதை ஒரு உதாரணத்தின் மூலம் மிக எளிதாக விளக்கினார்கள்.
ஹஜரத் அவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தை அருள்வானாக!

*கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ.*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?