*மைய்யித் (இறப்பு) வீடும் தால்ச்சா சோறும்*
====================================

ஒரு சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம் என்பது மத நம்பிக்கைகளைக் கடந்து, நூற்றாண்டுகளாக இயல்பான வாழ்வியல் சிக்கல்களையும் மரபுகளையும் உள்வாங்கி ஊடும் பாவுமாக இழையோடிய மண்வாசத்தோடு பரவி வருவதாகும். தறியின் வாசனையைக் கொண்டே நெசவின் நுட்பங்களை உணர்ந்துக் கொள்ளும் நெசவு ஆசானது திறன், மானுட நேய நெசவாளிக்கும் தேவை. வண்ண ஆடைகளை நெய்யும் போது குறுக்கு இழைகளை நேர்த்தியுடன் மாற்றுவதில் அவன் கொண்டிருக்கும் கவனமும் நினைவாற்றலும் பண்பாட்டுப் பதிவுகளைப் பேசும் சமூக மனிதனுக்கும் வேண்டும். 

அவ்வாறன்றி நவீன சிந்தனைகளுக்கும் வசதிகளுக்கும் ஆட்பட்டு, போகிற போக்கில் பழமையை - சமூகத்தின் பழக்க வழக்கங்களை - சமய அனுட்டானங்களை - மௌட்டீகமாகக் கருதி எள்ளி நகையாடுவதே சீர்திருத்தம் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தன மானது. காலம் கடந்து வேரூன்றி கிளை பரப்பி நிற்கும் பல பண்பாட்டுப் பதிவுகளை அப்படித்தான் பலர் பார்க்கத் துணிகிறார்கள்.. அதில் முக்கியமானது தமிழர்களின் விருந்தோம்பல்.. 

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

என்கிறது திருக்குறள். விருந்தாளிகளை உபசரித்து நல்ல முறையில் கவனிக்காத மடையர்களின் செல்வத்தில் வறுமை வீற்றிருக்கிறது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இதை வாழ்வியலாக பயிற்றுவித்த மரபு தமிழருடையது. ஒருகாலத்தில் இந்த மண்ணில் வந்துற்ற அரபு வணிகர்களும் ஒரே தட்டில் பகிர்ந்துண்ட பண்பு இங்குற்ற அடிதட்டு மக்களை வாரியணைத்துக் கொண்டது.. 

இறைச் செய்தி குறித்த அழைப்பு பணியைக் கூட அவர்கள், விருந்தோம்பி வேளாண்மையாகவே செய்தார்கள். பசிப்பிணியில் வாடிய மக்களிடம் தீனியைக் கொடுத்துத்தான் தீனை (மார்க்க நெறியை) வளர்த்தார்கள்.. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள இன்றைய இந்திய கண்ணாடியின் வழியாக இதைப் பார்ப்பது நியாயமல்ல.. பஞ்சங்களில் சிக்கிச் சீரழிந்த ஒரு முன்னூறு ஆண்டுக்கு முந்தைய இந்தியாவின் நிலையை ஒரளவுக்காவது ஊன்றி உணர வேண்டும். வயிற்றுக்கு சோறிடல் மட்டுமே அங்கே பிரதானமாக இருந்தது.. காமராஜர் சாப்பாடு போட்டு கல்வி புகட்டியது மாதிரி.. இந்த கலாச்சாரம் தான் பிற்காலத்தில் ஒவ்வொரு மார்க்க உபன்யாசக் கூட்ட இறுதியிலும் சீரணி (சீரணி என்பது கருப்பட்டியில் செய்யப்படும் ஜாங்கிரி போன்ற இனிப்பு) பங்கிடுவது என்கிற வழக்கமானது. 

தனிமனிதனின் உணவு தேவைக்கு இப்போது உள்ளது போன்ற தேர்வும் எளிதான அடைவும் (accessibility) ஒரு காலத்தில் இருந்தது இல்லை.. வெளியூருக்கு பயணம் போனவர்கள் கட்டுச்சோறுடன் தான் கிளம்பினார்கள். 70கள் வரை நீண்ட தூர பேருந்துகள் வழியில் மர நிழலில் நிறுத்தி வைத்திருப்பார்கள்.. பயணிகள் கட்டுச் சோற்றைப் பிரித்து பசியாறும் காட்சியையெல்லாம் பார்த்திருக்கிறேன்.

என் தாத்தா புரவின்ஷியல் டிரான்ஸ்போர்ட்டில் கண்டக்டராக இருந்தார். பாண்டி - சென்னை போகும் பேருந்து வழியில் மதுராந்தகத்தை அடுத்த புக்கத்துறையில் ஓட்டல் நரசிம்ம வர்மனில் நிற்கும்.. என் தாத்தாவிற்கு அந்த ஓட்டலில் கிச்சடி கொடுப்பார்கள்.. அதற்கு சக்கரை மட்டுமே விரும்பித் தொட்டுக் கொள்வார். அப்படி பேருந்து நிற்கும்போது கூட பெரும்பாலான பயணிகள் அவர்கள் கொண்டு வந்த உணவைத்தான் சாப்பிடுவார்கள். 

பெரும்பாலான வழித்தடங்களில் பயணவழி உணவகங்களே இருக்காது.. அதற்காக தான் பெருந்தனக்காரர்கள் முக்கியமான ஊர்களில் பயணிகளின் உண்டி - உறையுள் தேவைகளுக்காக சத்திரங்களைக் கட்டி வைத்தனர். சில சத்திரங்கள் வெறும் உறைவிடமாக மட்டுமே இருந்தன. முஸ்லிம் வாழ்விடங்களில் முக்கிய பள்ளிவாசல்களில் 'முசாபிர் சாப்பாடு முறை' என்ற ஏற்பாடு இருந்தது. எங்களூரில் மாதத்தின் முப்பது நாட்களுக்கு முப்பது பிரமுகர்கள் என்று வரிசையிடப்பட்ட பட்டியல் பள்ளிவாசலில் தொங்கும். பள்ளிவாசலுக்கு வரும் முசாபிர் (வழிப்போக்கர்) அந்தபட்டியலில் அன்றைய தேதிக்கு இடம்பெற்றுள்ள நபரின் வீட்டிற்குச் சென்றால் சாப்பிட்டுச் செல்லலாம்.. கொஞ்ச காலத்திற்குப் பின்னர் முசாபிர் என்றாலே பிச்சைக்காரர் என்று ஆக்கிவிட்டார்கள்.. (அதனால் தான் பண்பாட்டு பதிவுகளை - சொல்லாடல்களை கால வர்த்தமான அலகுகளோடு மிக கவனமாக அணுக வேண்டும்).

அன்றைய பயணங்கள் இலகுவாக இருந்ததில்லை. பல ஊர்களுக்கு நாங்கள் பசியோடு மாலை நேரத்தில் போய் சேர்ந்திருக்கிறோம்.. ஆனால் எந்த நேரம் போனாலும் கொஞ்சங்கூட முக சுளிப்போ, சங்கடமோ இருக்காது.. வாய் நிறைய உற்சாகமாக வரவேற்று, உறவுமுறைகளை விசாரிக்கும் வாஞ்சையிலேயே மகிழ்ச்சி எல்லோருக்கும் தொற்றிக் கொள்ளும்.. அன்றைய பாட்டிமார்கள், தாத்தாக்களின் அளப்பரிய அன்பை அனுபவித்தவர்கள் தான் விளங்கிக் கொள்ள முடியும்.. 'விருந்தாளி வந்துட்டாங்க' என்ற வார்த்தைகளில் மண்ணின் ராகம் தவழும். அதற்கு பிறகு என்ன கோழிய புடி.. குழம்பு வை.. பலகாரங்கள் சுடு என்று ஒரே பரபரப்புத்தான்.. ஆர்ப்பாட்டம் தான்..

வாழ்வில் மட்டுமல்ல.. மரணத்திலும் அப்படித்தான்.. மரணச் செய்தி ஒருவருக்கு போய்ச் சேருவதே குதிரைக் கொம்பாக இருந்த காலமுண்டு. மையத் செய்தியை ஊர்களுக்கு கொண்டு செல்லவே குறிப்பிட்ட ஆட்கள் இருப்பார்கள். தந்தி வந்தாலே யாரோ மண்டைய போட்டுவிட்டார்கள் என்று அழுகை, ஆர்ப்பாட்டம் ஊரைக் கூட்டும். இப்படியாக ஆட்கள் மூலமோ, தந்தி முலமோ கிடைக்கும் மரணச்செய்தியை அறிந்து அடித்துப் பிடித்து கண்ணீரும் கம்பலையுமாக இரவோடிரவாக பயணப்பட்டு வந்து சேர்வார்கள்.. மரண வீடுகளில் உணவுக்கான எந்த ஏற்பாடும் இருக்காது. பெரும்பாலும் பட்டினியாகத்தான் கிடப்பார்கள். 

ஒரு உறவினர் இறப்பில் எல்லோரும் ஒன்றுசேர துக்கம் அனுபவித்த காலமெல்லாம் இப்போது இல்லை.. இன்றைக்கு மனிதர்களுக்கு மத்தியில் ரொம்பவும் இடைவெளி.. அவர்களது சிரிப்பிலும் போதுமான இடைவெளி.. கண்ணீரிலும் போதுமான இடைவெளி.. மறுநாள் காலை மையத்தை எடுத்தப் பிறகுதான், வந்திருந்தவர்களுக்கான உணவு தயார் செய்யப்படும்.. இது பெரும்பாலும் அக்கம்பக்கமுள்ள வீடுகளில் தான் நடக்கும்.. இறந்தவரின் சம்பந்திகள் தான் இதை செய்வார்கள்.. நெய்சோறும் தால்ச்சாவும் (பருப்புக் குழம்பு) தான் இதற்கான உணவாகும். ஊர் விட்டு ஊர் வந்திருந்து பசியிலும் துக்கத்திலும் துவண்டு கிடந்த உறவுகள் சாப்பிட வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்ட உணவு.. அதைத்தான் நவீன இஸ்லாமிய தூய்மைவாத இயக்கங்கள் 'செத்தவன் வாயில மண்ணு.. இருக்குறவன் வாயில கறிசோறு' என்று கேலிப் பேசின..

தொடர்ந்து இது போன்ற ஒரு பிம்பம் பரவி இன்று முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர் என பலபேரிடம் 'முஸ்லிம்கள் செத்த வீட்டிலும் கறி விருந்தை ஒரு வெட்டு வெட்டுவாய்ங்க' என்ற எண்ணம் குடிபுகுந்து விட்டது.. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் இப்போது மையத் எடுத்த உடன் பிரியாணி கூட போடுகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.. ஆனால் அதுவும் மைய்யித் எடுத்த பிறகுதானே தவிர, யாரும் இறந்தவர் உடலை வைத்துக் கொண்டு கிடாவிருந்து வைப்பதில்லை. 

இன்றைக்கு வசதிகள் பெருகிவிட்ட நிலையில் மைய்யித் வீடுகளில் டீ, காபி போன்றவற்றை விநியோகிக்கிறார்கள்.. இது எதுவுமே இல்லாமல் காலையிலிருந்து மாலை வரை எத்தனையோ மைய்யித் வீடுகளில் கொலைப் பட்டினியில் நாங்கள் கிடந்திருக்கிறோம். அப்படியான காலச் சூழலில் தோன்றிய மரபுதான், மைய்யித் வீட்டிலும் விருந்தோம்பும் இந்த பண்பாடு..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?