#baqavi #baqiyath #பாக்கவி#பாக்கியாத்

*"என்ன வளமில்லை எங்கள் பாக்கியாத்தில்?"*

- அ. நௌஷாத் அலீ பாகவீ. 

பாக்கியாத். மறக்க முடியாத ஒரு பூஞ்சோலை. 

இங்கு தான் நான் கற்க, மறக்க, அழ, சிரிக்க, உறங்க, குறும்பு செய்ய, உண்மையாக கோவப்பட, கௌரவம் பார்க்க, வாசிக்க, எழுத, அடக்குமுறை கண்டு வெகுண்டெழ, ஒன்று கூடி உண்டு பருக, பக்குவப்படுத்திக் கொள்ள என எல்லாமும் தட்பவெட்ப நிலைக்கேற்ப உணர கற்றுக் கொண்டேன். 

ஒரு வாட்டி வதைக்கும் கோடையோ, நடுங்கச் செய்யும் குளிரோ, வாழ்த்துச் சொல்லும் வசந்தமோ இப்படி எல்லாக் காலத்தையும் ஊஞ்சல் கட்டி உற்சாகப்படுத்தும் ஒரு அற்புத மாளிகை. 

சமீபத்தில் என் வகுப்புத்தோழன் ரிஃபாவுத்தீன் பாகவீயிடம் Clubhouse குறித்து விளக்கிக் கொண்டிருந்த போது 'பாக்கியாத்தின் மாணவர் அறை அனைத்திலும் மாணவர்கள் கூடி அமர்ந்து ஒவ்வொரு பொருளிலும் உரையாடிக் கொண்டிருப்பார்களோ அப்படித்தான் Clubhouse' என்று சொன்னேன். 

நவீன அப்டேட்கள் அனைத்தையும் பாக்கியாத்தின் ஏதாவதொரு நினைவில் பொருத்திப் பார்த்து இலகுவாக புரிந்து கொள்ள முடிகிற தன்மையை அது பெற்றிருந்தது. பெற்றிருக்கிறது. 

கற்பித்தல் என்று சொன்னால்... வரட்டுப் பிடிவாதத்தோடு தங்களது தொனியை மாற்றிக் கொள்ளாத கஞ்சிபோட்ட சட்டை போல விரைத்து நிற்கும் பாணி பாக்கியாத்துடையது அல்ல. மாணவனின் உடல்மொழி உணர்ந்து, மன ஊசலாட்டம் அறிந்து மழலைக்கு குலைத்து ஊட்டும் சாதம் போல அதன் பக்குவமே தனி. தாய்மடியின் கனகனப்புக்காக ஏங்கும் குழந்தை போல நான் இன்று அதற்காக தவிக்கிறேன்.

கற்க விரும்பும் மிக முக்கியமான பல்கலைப் பாடங்களை ஆசிரியர்களுக்கு நேர வாய்ப்பு இல்லாத போது மூத்த மாணவர்களிடமே சங்கோஜமில்லாமல் ஓதிக் கொள்ள முடிகிற இயல்பு நிலை பாக்கியாத்திலுண்டு. 

ஒரு ஆசிரியரின் தோரணையில் அமர்ந்து இயல்பாக விளக்கிச் சொல்லும் பக்குவமும் அங்குள்ள மாணவர்களுக்கு மாணவப் பருவத்திலேயே இருந்தது. இது உஸ்தாதுமார்களுக்கே தெரிய வந்தாலும் அவர்களின் ஆர்வத்தையும், தைரியத்தையும் அழைத்து பாராட்டுவார்களே தவிர 'இவனுக்கென்ன தெரியும்?' என்ற எண்ணம் கடுகளவும் இல்லாத கல்லூரி அது. 

பாடங்களை மீள்பார்வை செய்யும் ஹல்காக்களில் வகுப்பு நண்பன் ரிஃபாவுத்தீனின் Rifa Ji Baqavi பாங்கு அத்தகையது (உஸ்தாதுடைய பாங்கு). எங்காவது சரி போல் தவறாக ஏமாற்றி (விளக்கி) விட்டு அவன் கடந்து செல்ல முயலும் சமயங்களில் தாராபுரம் இர்ஃபானுல் ஹுதாவில் உஸ்தாதாக இருக்கும் நண்பன் 'காளிபாளையம்' அபூதாஹிர் பாகவீ விடமாட்டான். ரொம்ப போரடித்தால் 'திருப்பூர்' Sadiqul Ameen Baqavi யை ஓட்ட ஆரம்பிப்போம். அவனை ஓட்ட ஆரம்பித்தால் 'உத்தமபாளையம்' இத்ரீஸ் பாகவீ உற்சாகமாக உடன் சேர்ந்து கொள்வான். களேபரங்களுக்கிடையில் நொறுக்குத்தீனிக்கு ஏற்பாடு செய்வது 'மேட்டுப்பாளையம்' அப்துர் ரஹ்மான் பாகவீ உடையது. இந்த எல்லாவற்றிலும் ஒட்டியும் ஒட்டாமல் ஒரு துண்டுச்சீட்டில் எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பது என் வேலை. 

கொள்கை முரண்பாடுகளில் வாதம் வைக்கவும், பதில் வாதம் வைக்கவும் எந்த இடத்திலும் எந்த வகுப்பு மாணவருக்கும் வாய்ப்பும் சுதந்திரமும் மிக விசாலமாகவே கொண்டது பாக்கியாத். சமயங்களில் இந்த முரண்பாடு முற்றி ஆசிரியர்கள் வரை சென்றிருக்கும். மாணவர்கள் தங்களுக்குள் எப்படி வாத - பிரதிவாதம் செய்ய முடியுமோ அதே போன்று தனக்குத் தெரிந்த வாதத்தை ஒரு மாணவனால் தனது ஆசிரியரிடம் நேரடியாக வைக்க முடியும். ஓதுகிற காலத்திலேயே ஆசிரியர்களிடமும் முரண்பட முடிகிற சுதந்திரமும், வரலாறும் பாக்கியாத்தினுடையது. 

இபாதத்களில் இறுக்கிப் பிடிப்பதுமில்லை. தளர்த்திவிடுவதுமில்லை. போதிப்பதில் ஒரு ஆசிரியர் கலகலப்பாக இருப்பார். ஒருவர் உரையாட நெருக்கமாக இருப்பார். ஒருவர் இறுக்கமாக இருப்பார். ஒருவர் புரிந்து கொள்ள முடியாதவாறு இருப்பார். 

இந்த ஒவ்வொரு ஆசிரியரையும் கையாளும் பக்குவம் குறித்து எங்கள் அறைகளிலும், பாடங்களை மீள்பார்வை செய்யும் ஹல்காகளிலும் பரிமாறிக் கொள்வோம். சீனியர், ஜூனியர் பார்வைகள் மறந்து நட்பு கலந்த அண்ணன் தம்பிகளாக பழகும் சூழல், பாக்கியாத்தினுடையது. சீனியர்கள்... ஜூனியர்களையும், புதியவர்களையும் அணுகும் பாங்கு இருக்கிறதே... ப்ச்.... அதை அங்கு பளிச்சென்று உணர முடியும். 

தோசையில் ஊற்றப்படும் நெய் போல சூடாகவும், திகட்டாமலும், மணமாகவும் அனுபவங்கள் போதிக்கப்படும் அற்புதக் குடில் அது. அன்று சேர்ந்த மாணவன், சென்ற வருட மாணவன், பட்ட வகுப்பு மாணவர், ஏழு வருட பட்டப்படிப்பு முடிந்து ஃபாஜில் மேற்படிப்பு மேற்கொள்ளும் மூத்த சீனியர் என இந்த அனைவரும் சகஜமாக ஒரே அறையில் அமர்ந்து உரையாடும் சுதந்திரம் பெற்ற கல்லூரி பாக்கியாத். 

பாக்கியாத்தின் கடந்த கால வரலாறுகளை அமர்ந்து பேசும்போது மயிர்க்கால்கள் நட்டுக் கொள்ளும். அதை வியந்து விவரிக்கும் நண்பர்களின் பாங்கு, நம்மை அந்த வரலாற்றுச் சூழலின் நேரலையில் கொண்டு போய்விடும். 

எங்களுடைய கல்வி இறுதியாண்டில் ஒரு முன்னாள் மாணவர் வந்து பேசுகையில் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னமும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. "பாக்கியாத்தில் நீங்கள் என்ன பழக்கத்தில் இருக்கிறீர்களோ அதே பழக்கத்துடன் தான் வெளியிலும் இருப்பீர்கள். ஆகவே வெளியில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி இங்கேயே உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வெளியில் போய் மாற்றிக்கொள்ளலாம் என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் வேலை" என்று சொன்னார். ஸுப்ஹானல்லாஹ் எத்தனை உண்மைகளடங்கிய வார்த்தைகள் அவை. 

பாக்கியாத்தின் பாட அறைகள் சொல்லும் பல்சுவைக் கதைகளென்ன?. வரலாற்றுப் பெரும்பாடங்களென்ன?. உணவென்ன?. ஆசிரியர் - மாணவர் - ஜூனியர் - சீனியர் உறவு முறைகளென்ன?. துடித்து உதவும் சகோதரப் பாசமென்ன?. 

இப்படி நிறைய சொல்லத் தோணுகிறது. மழைக்கால சாரலும், கொஞ்சும் குளுமையும், கரகரக்கும் தவளை கத்தமும், கவ்விய இருளும் நிறைய பேசச் சொல்கிறது. இன்று இது போதும் என்று கண்கள் சொல்கிறது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?