மரணம்

#மரணம்

மிக நெருக்கமானவர்களின் மரணத்தில் தான் நமக்கு உண்மையான தரிசனம் கிடைக்கிறது. தினம் தினம் பல பேர் இறக்கிறார்கள்.அந்த மரணங்கள் நம்மை பாதிப்பதில்லை.

"மரணம் கடவுளுக்கு வாசல்" என்று ரஜனீஷ் சொல்லியிருக்கிறார்.

மனிதனால் இதுவரை களங்கப்படாத ஒரே விஷயம் மரணம். 
அதை மனிதன் இன்னும் கொச்சைபடுத்தவில்லை. கொச்சைப்படுத்தவும் முடியாது.

மரணத்தை மனிதனால் ஒரு விஞ்ஞானமாகவோ வேதாந்தமாகவோ மாற்ற முடியாது.
அது அவன் கைப்பிடியிலிருந்து எப்போதும் வழுக்கிச் செல்கிறது.
உங்கள் வாழ்வில் எதிர்பாராமல் மரணம் குறுக்கிடும் போது உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிறது. ஆம், வாழ்வு அர்த்தமற்றது தான். ஒவ்வொருவரும் கொஞ்சம் இறக்கிறோம்.

- இது எழுத்தாளர் சுஜாதா கூறியது ..

இறைவனுக்கும் மனிதனுக்குமுண்டான திரை மரணம் ..
மரணத்தை யாரும் கொச்சை படுத்த முடியாது

(ஆனால் சிலர் தனக்கு பிடிக்காதவர்களின் மரணங்களை கொச்சை படுத்த ஆரம்பித்து விட்டார்கள் )

சுஜாதாவின் ஒவ்வொருவரும் கொஞ்சம் இறக்கிறோம் என்பதை இப்படியும் கூறலாம் .

குல்லு மன் அலைஹா fபான் - அனைத்தும் அழிந்துகொண்டே இருக்கிறது (அழியக்கூடியது என்பதற்கும் அழிந்துகொண்டே இருக்கிறது என்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது )

அழியக்கூடியது என்றால் என்றாவது ஒரு நாள் அழியலாம் . அழிந்துகொண்டே இருக்கிறது என்றால் ஒவ்வொரு நொடியும் அழிந்துகொண்டே இருக்கிறது என்று பொருள்.

உண்மைதானே சென்ற நிமிடம் நம்மை விட்டு அழிந்துவிட்ட நிமிடம்தானே . 
அந்நிமிடத்தை நாம் மீண்டும் உயிர்ப்பெற செய்ய முடியாது . 
அப்படியெனில் சென்ற நிமிடத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் யாவும் அழிந்து விட்டது . இனி ஒரு போதும் அதை நாம் திரும்ப பெற முடியாது இதுவே fபனா .. அழிந்துகொண்டே இருக்கிறது என்று பொருள் .

( நினைவுகளை தவிர அனைத்து நிகழ்வுகளும் அழிந்துகொண்டே இருக்கிறது . 
நினைவுகளிலும் ஒரு விசித்திரம் இன்பமான நினைவுகள் விரைவில் அழிந்துவிடும் .
துன்பமான நினைவுகள் அவ்வளவு எளிதில் அழியாது .

எனவேதான் ஜிப்ரான் இன்பமான நினைவை பற்றி இப்படி கூறுகிறார் 

இன்னறய துக்கங்களில்
மிகவும் கசப்பானது ,

நேற்றைய
மகிழ்ச்சியின் நினைவு !!! ) 

யாரேனும் இறந்துவிட்டால் தாருல் fபனாவிலிருந்து தாருல் பகாவிற்கு சேறு விட்டார் (அழிந்துகொண்டே இருக்கும் உலகிலிருந்து அழியா உலகிற்கு சென்று விட்டார் ) என்று கூறுவார்கள் ..

குல்லு நப்ஸின் தாயிகத்தல் மௌத் . ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என இறைவன் கூறுகிறான் ..

மரணத்தையும் சுவை என இறைவன் கூறுகிறான் .
இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அனைத்துமே சுவைதான் .

நமது மரணம் எந்த சுவையை சுவைக்கப்போகிறது என்பதை இறைவனே அறிவான் .. 

மரணம் என்பது முற்றுப்புள்ளியல்ல ,அது ஒரு கமா எனும் தொடர் ..

ஹாரிஸ் ஜமாலி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?