முத்தம் பற்றி இஸ்லாம்
﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *ஜுமுஆ பயான் குறிப்பு 10/12/21*🌼
🌹الصــلوة والسلام عليك يارسول الله ﷺ🌹
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
உலமா பெருமக்களுக்கான
பயான் குறிப்புத் தளம்
🌹🌹 *தலைப்பு:-*
*"இச்! இச்! இச்!*
https://imdhadhi.blogspot.com/2020/10/blog-post_31.html
🌸🌸 *கட்டுரையாக்கம்:-*
*_ஆலிம் மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி ஹழ்ரத், இமாம்: நீலாங்கரை, சென்னை.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channelல் இணையுங்கள்*
https://www.youtube.com/channel/UC9_wwAcpCkhbFKxpAlGTkHA
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
*"இச்! இச்! இச்!*
*_[சிலர், மார்க்கம் அனுமதித்தவைகளையும், ஷிர்க் என்றும் பித்அத் என்றும் பரப்புரை செய்கின்றனர். அதைப்பற்றி வித்தியாசமான கோணத்தில் எடுத்துரைக்கும் அழகிய கட்டுரை]_*
இச்... இச்... இச்...
وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ
(இறைநம்பிக்கையாளர்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது. ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான். திருக்குர்ஆன் :- 8:63
தலைப்பைப் படித்தவுடன் "நான்வெஜ்" என்று எண்ணிவிடாதீர்கள். முழுமையாக வாசித்துப் பாருங்கள். "வெஜ்"ஜாகவே உணர்வீர்கள்.
இரு இதயங்களை இணைக்கும் அன்பின் வெளிப்பாடுதான் முத்தம் என்பது. எனவே, முத்தம் என்பது உதடுகளின் சந்திப்பு மட்டுமல்ல. அது காதலின் சங்கமம், பாசத்தின் பிணைப்பு, ஆசையின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு முத்தமும் மனதின் அடி ஆழம் வரை சென்று சந்தோஷ உணர்வை கிளறி விடும். முத்தத்தால் உடலும் மனமும் பெறும் நன்மைகள் ஏராளம் உண்டு .
முத்தம் கொடுக்கும் போது மன அழுத்தமும், மனக் கவலையும் நீங்கும். முத்தத்திற்கு கவலையைப் போக்கும் சக்தியும் இருக்கிறது. முத்தம் கொடுப்பது ஒருவகையான உடற்பயிற்சி. உடலில் 8 முதல் 16 கலோரிகளை எரிக்கக் கூடியது. முத்தம் கொடுப்பது தியானம் செய்வதற்கு ஈடானது என்கின்றனர் மனநல நிபுணர்கள். தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கும். அதேபோல் முத்தம் கொடுப்பதன் மூலம் பெறுபவருக்கும், கொடுப்பவருக்கும் மன இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பிறக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும் என்கிறது அறிவியல் உலகம்.
இஸ்லாமியப் பார்வையில் முத்தங்கள் ஐந்து வகைப்படும். 1) பெற்றோருக்கு சிரசின் மீது கிருபை முத்தம். 2) சகோதரனுக்கு நெற்றியின் மீது பிரிய முத்தம். 3) மனைவிக்கு உதட்டின் மீது ஆசை முத்தம். 4) குழந்தைகளுக்கு கன்னத்தின் மீது அன்பு முத்தம். 5) நண்பர்களுக்கும், பெரியவர்களுக்கும் கையின் மீது காணிக்கை முத்தம். நூல்:- துர்ருல் முக்தார் பாடம் ஹலர் இபாஹத்
"உலகில் மனிதன் தோன்றிய உடன் முத்தம் தோன்றியது" என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு உயிரினங்களும் முத்தத்தை பரிமாறிக் கொள்கின்றன.
*பெற்றோருக்கு*
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தனது தாயார் உம்மு ஃபள்லு (ரலி) அவர்கள் மூலமாக அறிவிக்கிறார்கள். ஒருமுறை அப்பாஸ் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரைப் பார்த்ததும் அண்ணலார் எழுந்து அவரின் இரண்டு கண்களுக்கும் மத்தியில் (நெற்றியில்) முத்தமிட்டார்கள். பிறகு அவரை வலப்புறத்தில் உட்கார வைத்துக் கொண்டார்கள். "இவர் எனது சிறிய தந்தை" என்றும் கூறினார்கள். நூல்:- தப்ரானீ
ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சபையில் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் இருந்தார். அப்போது அவரது தந்தை ஹுசைன் அவர்கள் அச்சபைக்கு வந்து இஸ்லாத்தை தழுவினார். உடனே இம்ரான் (ரலி) அவர்கள் எழுந்து வந்து தன் தந்தையின் தலையிலும், கைகளிலும், கால்களிலும் முத்தமிட்டார்.
இக்காட்சியைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுது விட்டார்கள். பிறகு அண்ணலார், ( بَکَیتُ مِن صَنِیعِ عِمرَانَ دَخَلَ حُصَینٌ وَّهُوَ کَافِرٌ فَلَم یَقُم اِلَیهِ عِمرَانُ وَلَم یَلتَفِت نَاحِیَتَهُ فَلَمَّا اَسلَمَ قَضَی حَقَّهُ فَذَخَلَنِی مِن ذٰلِكَ الرِّقَّةُ ) “இம்ரானுடைய இந்த செயல் என்னை அழ வைத்து விட்டது. அவரது தந்தை இறை மறுப்பாளராக உள்ளே வந்தபோது அவரை கண்டுகொள்ளவில்லை அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனால் அவர் முஸ்லிமானதும் அவருக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்து விட்டார். இந்நிகழ்ச்சி என் உள்ளத்தை இளக வைத்து விட்டது” என்று கூறினார்கள். நூல்:- இப்னு குஸைமா, இஸாபா, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்- 1 பக்கம்- 90
கன்னத்தில் ஒருவர் கொடுக்கும் முத்தம் மரியாதையுடன், அன்பையும் காட்டும் முத்தமாகும். நண்பர்களும் பெற்றோர்களும் கன்னங்களில் முத்தமிடுவார்கள்.
அன்பான முத்தம் அன்புக்குரியவர்களின் மீது நம்பிக்கையையும், நேசத்தையும் அதிகரிக்கும்; மனதையும் வலுவாக்கும்.
*தம்பதிகளுக்குள்*
அவன்தான் உங்கள் உள்ளங்களை அன்பால் இணைத்தான். திருக்குர்ஆன்:-3:103
முறை ஒரு முறை இரவு நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்நேரம் அண்ணலாரின் நெற்றியில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய் வேர்த்து நின்றது. இதைப் பார்த்த அன்னையவர்கள் அண்ணலாரின் அழகைப் பார்த்து வியந்து போய், அண்ணலாரின் அழகை போற்றிப் புகழ்ந்து, கவிதை ஒன்றைப் பாடினார்கள். உடனே அண்ணலார் அன்னையவர்களின் நெற்றியில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நூல்:- முஹம்மது ரசூலுல்லாஹ், கஸாயிஸுல் குப்ரா
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُقَبِّلُ فِي شَهْرِ الصَّوْمِ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்தில் (நோன்பு நோற்று இருந்த நிலையில் தம் மனைவியரை) முத்தமிடுவார்கள். நூல்:- புகாரீ-1927, முஸ்லிம்-2017, திர்மிதீ-659
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள், நபிகள் ( أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَبَّلَ بَعْضَ نِسَائِهِ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَتَوَضَّأْ ) "நாயகம் (ஸல்) அவர்கள் தம் துணைவியரின் ஒருவரை முத்தமிட்டபின் (மீண்டும்) உளூ செய்யாமலேயே தொழுகைக்கு புறப்பட்டுச் செல்வார்கள்" என்று கூறினார்கள். நான், ( قُلْتُ مَنْ هِيَ إِلاَّ أَنْتِ ) "அந்த மனைவி உங்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள். நூல்:-திர்மிதீ-79
ஆண் (கணவன்) தொழுது கொண்டிருக்கும் போது பெண் (மனைவி) முத்தம் கொடுத்தால் இந்த ஆணின் (கணவனின்) தொழுகை முறியாது. ஆனால், பெண் (மனைவி) முத்தம் தரும் சமயம் ஆசை வந்து விட்டால் தொழுகை முறிந்துவிடும்.
பெண் (மனைவி) தொழுது கொண்டிருக்கும் போது ஆண் (கணவன்) முத்தம் கொடுத்தால் இந்தப் பெண்ணின் (மனைவியின்) தொழுகை முறிந்துவிடும். ஆண் (கணவன்) ஆசையுடன் முத்தமிட்டிருந்தாலும் ஆசையில்லாமல் இருந்தாலும் சரியே! முத்தமிட்டதினால் பெண்ணிற்கு (மனைவிக்கு) ஆசை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியே! தொழுகை முறிந்துவிடும். நூல்:- ஷரஹ் முனியத்துல் முஸல்லி, பிஹிஷ்தி ஜேவர்
"முத்தத்தை நன்கு ரசித்து அனுபவிப்பவர்கள் பெண்களே. 98 சதவீதம் பெண்கள் முத்தமிடும் போது, கண்களை மூடிக் கொள்வது இதனால்தான்" என கனடா நாட்டைச் சேர்ந்த "பியரி மராண்டா" என்ற விஞ்ஞானி நீண்ட ஆய்வுக்கு பிறகு இதை கண்டு பிடித்துள்ளார்.
முப்பது வயதுக்கு மேற்பட்ட தம்பதிகள் தங்களுக்குள் அடிக்கடி முத்தம் கொடுத்தால் அவர்களுடைய வாழ்நாள் நீடிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு மனிதன் தனது சராசரி வாழ்நாளில் இரண்டு வாரங்களை முத்தமிடுவதற்காக முழுமையாக செலவிடுகிறான்.
குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிடுவது நல்லது. அதனால் பெண்ணின் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
முத்தம் கொடுக்கும் போது ஆண்களுக்கு ஆண் தன்மையும், பெண்களுக்கு பெண் தன்மையும் அதிகரிக்கும். கருப்பையும், விரைப்பையும் தூண்டப்பட்டு தாய்மையடைவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.
*மன்மத விளையாட்டின்போது
*
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவியோடு விளையாடி, முத்தமிடுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் மனைவி ஆயிஷாவை முத்தமிட்டு தன் நாவால் அவர்களுடைய நாவைத் தொட்டுள்ளார்கள். நூல்:- அத்திப்புந் நபவீ இமாம் இப்னு கய்யிம்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُوَاقَعَةِ قَبْلَ الْمُلَاعَبَةِ ) மன்மத விளையாட்டுக்கு முன் உடலுறவு கொள்வதை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். நூல்:- அத்திப்புந் நபவீ இமாம் இப்னு கய்யிம்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆண்கள் பெண்களிடம் மிருகங்களைப்போல் நடந்து கொள்ள வேண்டாம். உடலுறவு கொள்ளும் முன் தூது அனுப்பி, அதன் பிறகு இணைய வேண்டும்" என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், நாயகமே! தூது அனுப்புவது என்றால் என்ன? என்று வினவினர். அதற்கு அண்ணலார், "முத்தம் கொடுப்பது" என்று பதிலளித்தார்கள்.
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1) ஒரு நண்பனைக் கண்டு அவன் பெயரைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது.
2) தனக்கு மரியாதை செய்யும் நண்பனைப் பொருட்படுத்தாமல் இருப்பது.
3) மன்மத விளையாட்டு விளையாடி முத்தம் கொடுக்கும் முன் மனைவியுடன் உடலுறவு தொடங்கி, மனைவி தன் உணர்ச்சியின் உச்சத்தை எட்டும் முன் உடலுறவை முடித்து கொண்டு எழுவது. ஆகிய மூன்று செயல்களும் ஒருவனுடைய தரமற்ற தன்மையை காட்டுபவை ஆகும்.
உடலுறவு சிறக்க முத்தங்கள் உதவுகின்றன. ஆண் - பெண் இருவரும் தங்களது உடலில் மாறி மாறி முத்தம் தருவதுடன், உதடுகளால் கவ்வித் தரும் முத்தம் உணர்ச்சியைக் கொப்பளிக்கச் செய்யும்.
இல்லற வாழ்க்கை இன்பமாக இருப்பதற்கு கணவன் மனைவி இருவரும் உடலுறவு கொள்ளும் போது, இருவருமே உச்ச நிலையை அடைய வேண்டும். எனவே, ஒருவருக்கொருவர் முத்தத்தை பகிர்ந்துகொள்ளுதல் அதற்கு பெரும் உதவியாக இருக்கும்.
முத்தம் கொடுக்கும் போது கருப்பையின் செயல்பாடு இயல்பு நிலைக்குத் திரும்பும். முத்தத்தால் கருப்பை நன்கு தூண்டப்படும். கருவுற்ற பெண்ணிற்கு மகிழ்ச்சியை பகிர முத்தம் கொடுத்தால் அந்த மகிழ்ச்சியை குழந்தையும் அனுபவிக்கும். அதனால் கர்ப்பிணி மனைவிக்கு கணவரின் அன்பான முத்தம் மிக அவசியம்.
"உனக்கு நான் இருக்கிறேன். உன் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் நான் உன்னோடு இறுக்கமான இருப்பேன்" என்று துக்கத்தில் இருப்பவரை கட்டிப்பிடித்து தேற்றும்போது அது "கட்டிப்பிடி வைத்தியம்" ஆகிவிடுகிறது. அதுபோல் முத்தத்திலும் உணர்வுபூர்வமான விஷயங்கள் இருக்கின்றன. அது மனதையும், உடல்நலத்தையும் மேம்படுத்தும் மருத்துவமாகும்.
*பிள்ளைகளுக்கு*
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. பாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருகை தந்தால் அண்ணலார் பாத்திமா (ரலி) அவர்களை நோக்கி எழுந்து செல்வார்கள். அவரை முத்தமிடுவார்கள். மேலும் தனது அமர்விடத்தில் அவரை அமர வைப்பார்கள். அண்ணலார் பாத்திமா (ரலி) அவர்களிடம் சென்றால் அவர் தனது இருக்கையிலிருந்து எழுந்து அண்ணலாரை முத்தமிடுவார்கள். மேலும் தம் இருக்கையில் அண்ணலாரை அமர வைப்பார்கள். அண்ணலார் (இறுதிக் காலத்தில்) நோய்வாய்ப்பட்டிருந்த போது பாத்திமா (ரலி) அவர்கள் வருகை தந்தார்கள். அண்ணலாரை நோக்கி குனிந்து முத்தமிட்டார்கள். பிறகு தமது தலையை உயர்த்தினார்கள். நூல் திர்மிதீ-3797
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களைவிட அதிகமாகத் தம் குடும்பத்தாரை நேசிக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. அண்ணலாரின் அன்பு மகனார் இப்ராஹீம் (ரலி) அவர்கள் பால்குடி குழந்தையாக இருந்தபோது, அவரை அள்ளி அணைத்து முத்தமிடுவார்கள். நூல் முஸ்லிம்-4635
அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், (அப்பாஸ் - ரலி அவர்களின் குழந்தைகளான) அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், கஸீர் ஆகியோரை வரிசையாக நிற்க வைத்து, ( مَن سَبَقَ اِلَيَّ فَلَهُ کَذَا وَکَذَا ) "உங்களில் எவர் ஓடிவந்து முதலில் என்னைத் தொடுவாரோ அவருக்கு இன்ன இன்ன பொருள் தருவேன்" என்று கூறுவார்கள். அவ்வாறு அவர்கள் ஓடிவந்து அண்ணலாரின் முதுகிலும் நெஞ்சிலும் விழுவார்கள். அண்ணலார் அவர்களை அள்ளியணைத்து முத்தமிடுவார்கள். நூல்:- முஸ்னது அஹ்மது, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் - 2 பக்கம் – 928
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறார்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை" என்றார். அதற்கு அண்ணலார், ( أَوَ أَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ ) "அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உனக்காக நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார்கள். நூல்:- புகாரீ-5998, முஸ்லிம்-4636
(ஒருமுறை) ஆயிஷா (ரலி அவர்கள் காய்ச்சல் கண்டு (படுக்கையில்) படுத்திருந்தார்கள். அவருடைய தந்தை(யான அபூபக்ர்-ரலி அவர்கள்) அவரது கன்னத்தில் (பாசத்தோடு) முத்தமிட்டு, ( كَيْفَ أَنْتِ يَا بُنَيَّةُ ) "எப்படியிருக்கிறாய்? அருமை மகளே!" என்று கேட்டார்கள். அறிவிப்பாளர்:- பராஉ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3918
குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதும் அவர்களுக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சி மகிழ்வதும் கண்ணியக் குறைவான செயலோ, தரக்குறைவான செயலோ அல்ல என்பதை இந்த நபிமொழி உணர்த்துகிறது. இறைவன் மனித மனங்களில் பதித்து இருக்கின்ற கருணை என்ற உணர்வுதான் இவ்வாறு அன்பார்ந்த செயல்களில் வெளிப்படுகிறது.
இந்த நிலையில் ஒருவர் இதை கண்ணியக் குறைவான, தரம்தாழ்ந்த செயலாக பார்க்கிறார் எனில் அவரைப்பற்றி இறைவனுக்கு இம்மியளவு கூட அக்கறை இருக்காது. அத்தகைய மனிதரின் மனம் இறுகிப் போய் கருணையோ, பாசமுமோ மருந்துக்கும் இல்லாமல் மரத்துப் போய் விடுகிறது. இதுபோன்ற நிலைமைக்கு ஆளாகின்றவர் இதற்கு வேறொருவர் மீது பழி சுமத்தவே முடியாது. அவரே முழுக்க முழுக்கத் தன்னுடைய நிலைமைக்கு பொறுப்பாளி ஆவார் என்கிறது இந்த நபிமொழி.
நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் அன்பு முத்தமே, அவர்கள் மீதுள்ள அன்பின் அடையாளமாகும்.
மூக்குகள் உரசிக் கொள்ளும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கொடுக்கும் முத்தம் எஸ்கிமோக்கள் முத்தம் எனப்படும். பாசத்தின் வெளிப்பாடு இந்த முத்தம்.
ஒரு தாய் குழந்தைக்கு முத்தமிடுவதால் குழந்தையின் செரிமானத்தன்மை அதிகரிக்கும் என்கிறது ஓர் ஆய்வு.
*கண்ணியவான்களுக்கு*
ஸாபித்துல் புனானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் அனஸ் (ரலி) அவர்களிடம் வரும்போதெல்லாம் அவர்களின் இரு கரத்தையும் பிடித்து முத்தமிட்டு விட்டு, இந்த இருகரமும் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் புனித கரம்பட்ட கரமாகும்" எனக் கூறுவேன். பிறகு அவர்களின் கண்களை முத்தமிட்டுவிட்டு, இந்த இரு கண்களும் அண்ணலாரை கண்ட கண்களாகும் என்று கூறுவேன். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-974, மஜ்மவுஸ்ஸவாயித்
அப்துர் ரஹ்மான் பின் ரஸீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை "ரபதா" என்ற இடத்தில் நாங்கள் கடந்து சென்றோம். இந்த இடத்தில்தான் சலமா பின் அக்வஉ (ரலி) அவர்கள் இருக்கிறார்கள் என எங்களிடம் சொல்லப்பட்டது. நாங்கள் அன்னாரிடம் சென்று அன்னாருக்கு சலாம் கூறினோம். அவர்கள் தமது இரு கைகளையும் நீட்டி, இவ்விரு கைகளாலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நான் (பைஅத் எனும்) உறுதிப் பிரமாணம் செய்துள்ளேன்" என்று கூறினார்கள். ஒட்டகத்தின் உள்ளங்கை போன்று தடிமனாக இருந்த அவர்களது உள்ளங்கையை அவர்கள் நீட்ட, நாங்கள் அன்னாரிடம் எழுந்து சென்று அதை முத்தமிட்டோம். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-973, மஜ்மவுஸ்ஸவாயித்
தேவ்பந்த் தாருல் உலூம் ஃபதாவா கூறுவதாவது. ஒருவரின் கால்களை முத்தமிடுவதில் குனிதல் இருக்கின்ற காரணத்தால் அது கூடாது. குனியாத முறையில் கால்களை முத்தவிடுவதானால் அது ஆகுமானதே. கால்களை முத்தமிடுவது ஸஜ்தாவுக்கு ஒப்பாகாத நிலையில் இருக்க வேண்டும்.
உதாரணமாக: பெற்றோர், ஆசிரியர், ஷைகுமார்கள் போன்றோர் உயரமான இடத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருக்கின்றனர். குனியாதவாறு உட்கார்ந்து கொண்டோ நின்று கொண்டோ அவர்களின் கால்களை முத்தமிடுதல் ஆகுமானதே. அவ்வாறின்றி இலேசான முறையில் குனிதல் இருந்தாலும் கால்களை முத்தமிடுதல் கூடாது. இவ்வாறு இடையூறுகள் இருப்பதால்தான் தற்சமயம் அது கூடாது எனக் கூறப்படுகிறது. இது விஷயத்தில் பேணுதலும் சிறப்பும் என்னவென்றால் எவருடைய கால்களையும் முத்தமிடுதல் கூடாது என்பதுதான். நூல்:- ஃபதாவா தாருல் உலூம் 5/170
பேரறிஞர் மௌலானா அஷ்ரப் அலீ தானவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு பரிபூரணமான ஷைகுடைய கால்களை முத்தமிடலாம். ஆனால் மார்க்கத்துடைய முறையில் வரம்பு மீறுதல் இருக்கக்கூடாது நூல்:- தகஷ்ஷுப் பக்கம்-397
இதில் குறிப்பிடப்பட்ட வரம்பு மீறுதல் என்பது ஸஜ்தாவுடைய அந்தஸ்திலுள்ள குனிதல் தான். எனவே, குனிந்து முத்தமிடுதல் கூடாது என்பதைத்தான் அவர்களும் தெரியப்படுத்துகிறார்கள்.
அப்துல் கைஸ் குழுவைச் சேர்ந்த ஸாரியி (ரலி) அவர்கள் கூறியதாவது. ( لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ فَجَعَلْنَا نَتَبَادَرُ مِنْ رَوَاحِلِنَا فَنُقَبِّلُ يَدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلَه ) நாங்கள் பயணத்தை முடித்துவிட்டு மதீனாவுக்கு வந்த போது, சாமான்களை வைத்து விட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து அவர்களின் கைகளையும், கால்களையும் முத்தமிட்டோம். நூல்:- அபூதாவூத்-5227
வாஸிஉ பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( قَدِمْنَا فَقِيلَ: ذَاكَ رَسُولُ اللهِ، فَأَخَذْنَا بِيَدَيْهِ وَرِجْلَيْهِ نُقَبِّلُهَا ) நாங்கள் (நபியவர்களிடம்) சென்றோம். அப்போது, "அவர்கள் தான் அல்லாஹ்வின் தூதர்" என்று சொல்லப்பட்டது. அப்போது நாங்கள் நபியவர்களின் இரு கைகளையும் கால்களையும் பிடித்து அவற்றை முத்தமிட்டோம். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-975
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கால்களை முத்தமிடப்பட்டுள்ளது என்று வரும் நபிமொழிகள் (அது ஸஜ்தாவுக்கு ஒப்பாக இருந்தபோதும்) நபியவர்களுக்குரிய பிரத்தியேகத் தன்மை என்று கருத வேண்டும். இவ்வாறு பல பிரத்தியேகத் தன்மைகள் நபியவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு பெண்களைத் திருமணம் செய்திருந்தார்கள். சாமானிய மனிதனுக்கு நான்கு மனைவிகளுக்கு மேல் அனுமதியில்லை. நபியவர்களுடைய இரத்தமும், சிறுநீரும் கூட பரிசுத்தமானதாக ஆக்கப்பட்டிருந்தது. நபியவர்களுடைய இரத்தத்தை குடித்த நபித்தோழர்களின் வரலாறுகளும் உண்டு. இதை ஆதாரமாகக் கொண்டு நம்முடைய இரத்தத்தையும் பிறர் குடிக்கலாம் என்று சட்டம் கூற முடியாது. இது போன்று தான் நபியவர்களின் கால்களையும் முத்தமிட்டது அவர்களுக்கே உரிய தனி சலுகையாகும் என்று கருத வேண்டும் என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
*நண்பர்களுக்கு*
(நபியே!) நீங்கள் இறைநம்பிக்கையாளர்களுக்கு உங்களது பணிவான அன்பைக் காட்டுங்கள். திருக்குர்ஆன்:- 15:88
ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கைபர் போர் வெற்றி பெற்ற நாளில் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த போது அண்ணலார், ( مَا أَدْرِي بِأَيِّهِمَا أَنَا أُسَرُّ، أَبِقُدُومِ جَعْفَرٍ، أَمْ بِفَتْحِ خَيْبَرَ؟ ) "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது ஜஅஃபரின் வருகையினாலா? (அல்லது) கைபர் போரின் வெற்றியினாலா? இவ்விரண்டில் எதனால் என நான் அறியேன்" என்று கூறினார்கள். பிறகு ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை நோக்கி நின்று அவரை ஆரத்தழுவி, அவரின் இரு கண்களுக்கு இடையில் நெற்றியில் முத்தமிட்டார்கள். நூல்:- அபூதாவூத்-5220, தபகாத் இப்னு சஅது, அல்பிதாயா வந்நிஹாயா
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஸைது பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக் கொண்டு) மதீனாவுக்கு வந்தார்கள். அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் எனது அறையில் இருந்தார்கள். ஆகவே அவர் அங்கு வந்து கதவை தட்டினார். உடனே அவரை நோக்கி அண்ணலார் தமது ஆடை விலகி தரையில் இழுபட எழுந்து சென்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்போ பின்போ வெற்று மேனியுடன் அண்ணலாரை நான் கண்டதேயில்லை. அப்போது அண்ணலார் ஸைது (ரலி) அவர்களை கட்டித்தழுவி முத்தமிட்டார்கள். நூல்:- திர்மிதீ-2653
பயணத்திலிருந்து திரும்பி வருபவர்களை (முஆனகா செய்து) அணைத்து வரவேற்பது நபிவழியாகும். எனவே, பயணம் தூரமாகி, நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஸைது பின் ஹாரிஸா (ரலி) அவர்களை, அண்ணலார் வரவேற்கும் நோக்கில் மகிழ்ச்சியின் மிகுதியால் விரைவாக எழுந்து வரும் பொழுது மேலாடை சரிந்து கீழிழுத்துக் கொண்டு சென்றவாறு அணைத்து முத்தமிட்டார்கள்.
உஸைது பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு அன்சாரித் தோழர் நகைச்சுவை ததும்பத் தோழர்களிடம் உரையாற்றிக்கொண்டிருந்தார். அவர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த போது அவரை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தன் கையிலுள்ள குச்சியால் அவரின் விலாப்பகுதியில் குத்திவிட்டார்கள்.
உடனே அவர், "இதற்கு நான் உங்களைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும்" என்றார். அண்ணலார், ( اِصْطَبِرْ ) "சரி பழி தீர்த்துக் கொள்" என்று கூறினார்கள். அவர், ( إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَيَّ قَمِيصٌ ) "நான் சட்டை அணிந்து இருக்கவில்லை; நீங்கள் சட்டை அணிந்துள்ளீர்களே" என்றார். அண்ணலார், தன் சட்டையை தூக்கி உயர்த்திக் காட்டினார்கள். அவர், அண்ணலாரை கட்டியணைத்து அந்த இடத்தில் (அதாவது விலாப்புறத்தில்) முத்தமிட்டுவிட்டு, ( إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا رَسُولَ اللَّهِ ) "நாயகமே! நான் இதைத்தான் விரும்பினேன்" என்றார். அபூதாவூது-5224
பத்ருப் போரின் போது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கையில் ஓர் அம்பு இருந்தது. அதன் மூலம் அணிவகுப்பைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். ( سواد بن غزیّة ) சவாது பின் ஃகுஸைய்யா (ரலி) அவர்கள் அணியில் சற்று முன்னால் நிற்கவே அண்ணலார் அவரது வயிற்றில் அந்த அம்பால் லேசாக ஒரு குத்து குத்தி "ஸவாதே! சரியாக நிற்பீராக" என்றார்கள்.
உடனே சவாது (ரலி) அவர்கள், "நாயகமே! எனக்கு வலியை உண்டாக்கி விட்டீர்கள். நான் உங்களிடம் பழிவாங்க வேண்டும் என்றார்". அண்ணலார் தனது வயிற்றைத் திறந்து காட்டி ( اِستَقِد ) "பழி தீர்த்துக் கொள் (சவாதே)!" என்றார்கள். சவாது (ரலி) அவர்கள், அண்ணலாரைக் கட்டியணைத்து வயிற்றில் முத்தமிட்டார். அண்ணலார் ( مَا حَمَلَكَ عَلَی هٰذَا یَا سَوَادُ )"சவாதே! உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், ( یَا رَسُولُ اللّٰهِ حَضَرَ مَا تَرَی فَأَرَدتُّ اَن یَکُونَ اٰخِرَ العَهدِ بِكَ اَن یَّمَسَّ جِلدِی جِلدِكَ ) "நாயகமே! இதோ என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய கடைசி நேரத்தில் எனது மேனி உங்களுடைய மேனியை தொட்டுவிட வேண்டும் என்று பிரியப்பட்டேன்" என்றார். பிறகு அவரின் நலனுக்காக அண்ணலார் பிரார்த்தித்தார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா, அர்ரஹீகுல் மக்தூம், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-424,
தனது நண்பர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்பதும் அவர்களை இறுகக் கட்டி அணைத்து முத்தமிடுவதும் அன்பின் வெளிப்பாடாகும் இதன் மூலம் நண்பர்களுக்கிடையே அன்பும் நேசமும் அதிகரிக்கும்.
*மருத்துவ குணங்கள்*
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மயக்கமுற்றிருந்த இறுதி நேரத்தில், அங்கு உசாமா பின் ஸைது (ரலி) அவர்கள் வந்தார். அவர் அண்ணலாரின் அருகில் சென்று குனிந்து அண்ணலாரை முத்தமிட்டார். அண்ணலார் தங்களின் புனித கரங்களை வானத்தின் பக்கம் உயர்த்திவிட்டு, உசாமா (ரலி) அவர்கள் மீது தடவினார்கள். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-1, பக்கம்-541
முத்தம் பாலியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. அன்பை வெளிக்காட்டவும், பாசத்தை பகிர்ந்து கொள்ளவும் அது மிக அவசியம்.
முத்தம் கொடுக்கும் போது கிட்டத்தட்ட 112 வகையான தசைகள் தூண்டப்படுவதால் முகம் அழகாகிறது.
தைராய்டு ஹார்மோன் சுரப்பை சீராக்கும் தன்மை அன்பான முத்தத்திற்கு இருக்கிறது. மருந்தோடு சேர்ந்து முத்தமும் இதில் முக்கிய பங்காற்றும்.
இதய நோய்களுக்கான வாய்ப்புகள் முத்தம் கொடுப்பதால் குறையும். உடலில் ரத்த அழுத்தம் சீராகும்.
முத்தம் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களைச் சுரக்க செய்கிறது. முத்தத்தால் ஆக்சிடோசின், எண்டார்பின் ஆகியவை அதிகம் சுரப்பதால் உடல் வலி, கை - கால் வலி நீங்கும். ஆர்த்ரைடிஸ் வலி, மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, தலைவலி போன்ற வலிகளை நீக்கி முத்தம் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.
முத்தம் மூளைச் செயல்பாட்டைத் தூண்டி மனதையும், உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
முத்தம் கொடுக்கும் போது மன அழுத்தம், மனக் கவலையும் நீங்கும். உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்ததால் தலைவலி, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
முத்தம் என்றாலே சிலருக்கு அலர்ஜி ஏற்படும். அதற்கு 'பிலிமாபோபியா' என்று பெயர். முத்தத்தைப் பற்றிய படிப்புக்கு 'பிலிமெடாலஜி' என்று பெயர்.
*பூத உடலுக்கு...*
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَبَّلَ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ وَهُوَ مَيِّتٌ وَهُوَ يَبْكِ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (தம் பால்குடி சகோதரரான) உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்கள் இறந்த போது அழுதுகொண்டே அல்லது கண்களில் கண்ணீர் மல்க அவரை முத்தமிட்டார்கள். நூல்:- திர்மிதீ-910, இப்னுமாஜா-1436
ஆயிஷா ரலி அவர்கள் கூறியதாவது. ( إِنَّ أَبَا بَكْرٍ قَبَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ مَيِّتٌ ) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்த போது, அண்ணலாரை அபூபக்ர் (ரலி) அவர்கள் முத்தமிட்டார்கள். நூல்:- புகாரீ-3670, திர்மிதீ-910
*மண்ணறைக்கு*
ஒருமுறை அபூ அய்யூப் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மண்ணறைக்கு வந்து முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த அன்றைய ஆட்சியாளர் மர்வான் மனிதரே நீர் என்ன செய்கிறீர் என்று அறிவீரா? என வினவினார்? அதற்கு அபூ அய்யூப் (ரலி) அவர்கள், "ஆம்! நான் அறிவேன். நான் ஏதோ ஒரு கல்லிடம் வரவில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்துள்ளேன்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹமத்
ஷாமிலிருந்து மதீனாவுக்கு வந்த பிலால் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் மண்ணறைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதவாறு அந்த புனித மண்ணறையில் முகத்தை வைத்து தேய்த்து பலமுறை முத்தமிட்டார்கள். நூல்:- இப்னு அஸாகிர்
நபிமார்கள், நபித்தோழர்கள், இறைநேசர்களான வலிமார்கள் இவர்களின் மண்ணறைகளை பற்றுப் பாசத்தால் முத்தமிடலாம் தவறில்லை. ஆனால், அந்த செயல் பிறர் பார்வைக்கு சிர வணக்கமாக தெரிந்துவிடலாம் என்பதால் அதனை தவிர்ந்து கொள்வது நல்லது என மார்க்க அறிஞர்களின் கூறுகிறார்கள்.
*புனித சின்னங்களுக்கு*
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் 'ஹஜருல் அஸ்வத்' கல்லைப் பற்றிக் கூறுகையில், ( وَاللَّهِ لَيَبْعَثَنَّهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ لَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا وَلِسَانٌ يَنْطِقُ بِهِ يَشْهَدُ عَلَى مَنِ اسْتَلَمَهُ بِحَقٍّ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமை நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை அல்லாஹ் வெளிப்படுத்துவான். உண்மையான முறையில் தன்னைத் தொட்டு முத்தமிட்டவருக்காக அது சாட்சியம் கூறும்" என்று சொன்னார்கள். நூல்:- திர்மிதீ-884
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (புனித கஅபாவில் பதிக்கப்பட்டுள்ள) ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டார்கள். தம்மிரு உதடுகளையும் அதன் மீது வைத்துக் கொண்டு நீண்ட நேரம் அழுதார்கள். பின்னர் அண்ணலார் திரும்பிய பொழுது அங்கு நின்றிருந்த உமர் (ரலி) அவர்களும் அழுதார்கள். "உமரே இங்குதான் கண்ணீர் வடிக்க வேண்டும்" என்று அண்ணலார் கூறினார்கள். நூல்:- இப்னு குஸைமா
ஆம்! ஆதிமனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வரையுள்ள அத்தனை இறைத்தூதர்களும், அவர்களின் தோழர்களும், அவரவர் கால இறைநேசர்களும் மற்றும் உலக ஹாஜிகள் அனைவரும் இக்கல்லை முத்தமிட்டு அல்லது தொட்டிருக்கிறார்கள். அவர்களின் கரமோ, இதழோ பட்ட ஒரே இடம் இந்த ஹஜ்ருல் அஸ்வத் என்ற புனிதக் கல்லாகும்.
அபூ துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (ஒரு முறை ஹஜ்ஜில்) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தேன். (அப்போது) முஆவியா (ரலி) அவர்கள் (தவாஃபின் போது கஅபாவின்) ஒவ்வொரு மூலையைக் கடக்கும் போதும் அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். அப்போது அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதில்லையே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ( لَيْسَ شَيْءٌ مِنَ الْبَيْتِ مَهْجُورًا ) "இறையில்லம் கஅபாவில் தடுக்கப்பட்ட பகுதி எதுவுமில்லை" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ1608, முஸ்லிம்-2434, திர்மிதி-786
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கஅபாவின் எல்லா மூலைகளையும் முத்தமிடுவார்கள். நூல்:- புகாரீ-1608
உமர் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனை எடுத்து திறந்தவுடன் ( هَذَا كَلَامُ رَبِّی ) "இது என் இறைவனின் திருவசனமாகும்" என்று கூறி முத்தமிட்டுக் கொள்வார்கள் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.
*வளர்ப்புப் பிராணிகளிடம்*
நாய், பூனை, முயல், கிளி, புறா, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளைத் தொட்டுத் தூக்கும்போதும், அவற்றோடு விளையாடும்போதும் அலர்ஜி பொருட்கள் நேரடியாகவே நம் உடலில் பட்டு அலர்ஜிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். வளர்ப்புப் பிராணிகளின் உடலிலிருந்து உதிரும் செல்கள், ரோமம், எச்சில், சிறுநீர், மலக்கழிவு ஆகியவை காற்றில் கலந்து நாசி, சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம். மேலும் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் மூலம் ஆஸ்துமா நோய் ஏற்பட வாய்ப்புண்டு. என்கிறது மருத்துவ உலகம்.
உயிர்களிடத்தில் ஜீவகாருண்யமும், மிருகங்கள் மீது பெரும் இரக்கமும் தங்களுக்கு மட்டுமே உண்டு என்று சிலர் கருதுகின்றனர். மேலும் நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் அணுகுமுறையை அவர்கள் வெறுக்கின்றனர்.
அண்மைக்காலத்தில் நாய் வளர்ப்பு தொடர்பாக மனிதர்களிடையே காணப்படும் அளவுகடந்த மோகத்தால் அதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அறியாமையில் இருக்கின்றனர்.
நாய்களை வளர்ப்பது மட்டுமல்ல அவற்றையும் முத்தமிட்டு அவற்றைத் தடவி, அவற்றுடன் விளையாடி, முதியவர்களும் சிறுவர்களும் தங்களுடைய கைகளை நக்குமாறு அவற்றுக்குக் கொடுக்கும் அளவுக்குச் சென்றுவிட்டனர். அது மட்டுமல்ல; பல்வேறு சந்தர்ப்பங்களில் உணவுத் தட்டுகளில் மீதமிருக்கும் உணவுகளையும் பானங்களையும் நக்குமாறும் அருந்துமாறும் நாய்களை அனுமதிக்கின்றனர்.
நாயின் வாயில் உள்ள கிருமிகள் பற்றிய ஆய்வு செய்த லண்டன் ராணி மேரி பல்கலைக்கழகத்தின் நச்சுயிரியல் மற்றும் நுண்மவியல் (Virology and bacteriology) பேராசிரியர் “ஜான் ஆக்ஸ்போர்ட்” கூறும்போது, "நாய்கள், வாழ்க்கையின் பாதி நாட்களை பல அசுத்தமான இடங்களை முகர்ந்து வருவதால், அதன் வாய் முழுவதும் பல வகையான அசுத்தங்களும் கிருமிகளும் நிறைந்து காணப்படுகின்றன.
நாய்களை முத்தமிடுவது, அவைகளின் நாக்கால் நம்மை நக்க விடுவதின் மூலம் பல கொடுமையான கிருமிகள் மனிதனை பாதிக்கின்றன.
"நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்" என்பது சொல் வழக்கு.
நம்மூரில் வீட்டில் சிறு பிள்ளைகளைத் தனியே விட்டுச் செல்ல நேரிட்டால், யாரையாவது அழைத்து பிள்ளைகளின் துணைக்கு விட்டுச் செல்வதுபோல், அமெரிக்காவில் நாயைக் கவனித்து, பார்த்துக்கொள்ள மனிதர்களை அமர்த்திக்கொள்கிறார்கள். சிலநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டும் போன்ற சந்தர்ப்பங்களில் இப்படி நடக்கும். Baby-sitting போல் dog-sitting.
அந்நாட்டில் பஸ்ஸில், பார்க்கில், பொது இடங்களில் சில காட்சிகள் மிக சகஜம். கால் மடக்கி தன் இயல்பான போஸில் அமர்ந்திருக்கும் அந்த ஜந்து, அப்பொழுதுதான் தன் மல, ஜல துவாரங்களை நக்கிவிட்டு நிமிர்ந்திருக்கும். எவ்வித அருவருப்புமின்றி, “ஸோ க்யூட்! வாட்ஸ் ஹர் நேம்” என்று அதன் உரிமையாளரிடம் கேட்டுக்கொண்டே, அருகில் அமர்ந்திருப்பவர் அந்த நாயின் முகத்தை தம் முகத்துடன் வைத்து உரசி மகிழ்ந்து, லிப் கிஸ் ரேஞ்சிற்கு வாயுடன் வாய் உரசுவதைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வு இருக்கிறதே, நமக்கு வாந்தியே வந்துவிடும்.
இறந்த உடல் (பிரேதப்) பரிசோதனைக் (Postmortem) கல்வியில் வல்லுநரான ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் நொய்லெர் (Dr.Noeller) கூறுவதாவது. நாய் வளர்ப்பதும் நாயுடன் கொஞ்சி விளையாடுவதும் மனித உடல் நலத்திற்கும், உயிருக்கும் பெரும் கேடு விளைவிக்கும். இதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள் சாதாரணமானவை அல்ல. நாய்களிலிருந்து உருவாகும் ரேபிஸ் புழுக்கள் உடலில் தொற்றும் நாடாப் புழுக்களைப் போன்றவை. இவை "Tape Worm" என்று அழைக்கப்படும்.
இந்தப் புழுக்கள் நாய்களில் தன்னிச்சையாகத் தன் வாழ்க்கையை சுழற்றி நடத்திக் கொண்டிருக்கும் போது இடையில் நாயை கொஞ்சும் மனிதனிடமும் பரவிவிடுகிறது.
தொற்றும் இந்தப் புழுக்கள் மனிதனுடைய நுரையீரலில் ஆரம்பித்து சுவாசக்குழாய், தசைகள், மண்டை ஓடு, மண்ணீரல் போன்றவற்றில் பரவுகிறது. கொஞ்சமும் தாமதமின்றி கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், மூளை ஆகியவற்றை வெகுவாக பாதிக்கிறது.
அதிக அளவில் இவ்வகை புழுக்களுடைய தாக்குதலுக்கு ஆளானோர் தாழ்வான வடக்கு பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தான். யூகோஸ்லோவியாவில் டல்மாசியா, ரஷ்யாவில் கிரிமியா, ஹோலண்டில் ஃபிரீஸ்லாண்ட் முதலான பகுதிகளிலும், நாய்களை வாகனம் இழுக்க பயன்படுத்தும் நாடுகளிலும் நாடாப்புழுக்களுடைய தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 12 சதவீதத்திற்கும் குறையாமல் உள்ளது. ஐஸ்லேண்டில் மட்டும் 43% பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரேபிஸ் நோயினால் உலக அளவில் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேரும், இந்தியாவில் 20,000 பேரும், தமிழகத்தில் 350 முதல் 375 இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
தெரு நாய், விலை அதிகமுள்ள உயர் ஜாதி நாய் என எது கடித்தாலும் ரேபிஸ் நோய் வர வாய்ப்புண்டு. நாய் நக்கினாலும், பிறாண்டினாலும், ரேபிஸ் நோய் தாக்கிய மனிதனின் எச்சில் நம் மீது பட்டால்கூட ரேபிஸ் வர வாய்ப்பு உண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.
சுருங்கக் கூறின், வளர்ப்புப் பிராணிகளிடம் முத்தமிட்டு கொஞ்சிக் குலாவி விளையாடுவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று விளங்க வேண்டும்.
முத்தம் பாலியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. அன்பை வெளிக்காட்டவும், பாசத்தை பகிர்ந்து கொள்ளவும் அது மிக அவசியம்.
அன்பைப் பரிமாறிக் கொள்வதும் ஓர் இறை வணக்கமே! எனவே, இறை வணக்கங்களின் வகைகள் அறிந்து அதன் பிரகாரம் செயலாற்றுவதற்கு அல்லாஹுத்தஆலா நமக்கு அருள் புரிவானாக! ஆமீன்!
மௌலவி மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
கருத்துகள்
கருத்துரையிடுக