அல்பகரா
ஆயிரம் சட்டங்கள் கொண்ட ’அல்பகரா’
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் பெயர் ‘அல் பகரா,’
திருமறையின் மிகப் பெரிய அத்தியாயமும் இதுதான். திருவசனங்களின் எண்ணிக்கை 286.
நபிகளார்(ஸல்) மக்காவைத் துறந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்த பிறகு கொள்கை அடிப்படையிலான சமூகத்தையும் அரசையும் கட்டமைக்க வேண்டிய வாய்ப்பு மலர்ந்தது.
அதற்கேற்ப, அரசியல், ஆன்மிகம், வழிபாடுகள், பொருளாதாரம், சமூகவியல், குடும்பவியல் எனப் பல்வேறு துறைகள் சார்ந்து வழிகாட்டுதல்களும் சட்டங்களும் அருளப்பட்டன.
இந்த ஓர் அத்தியாயத்திலிருந்து மட்டுமே ஆயிரம் சட்டங்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளதாக குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.
மனிதப் படைப்பின் தொடக்கம் குறித்து அழகாக விவரிக்கிறது இந்த அத்தியாயம்.
பிறகு மனித வாழ்வுக்குத் தேவையான பலவிதமான சட்ட நெறிமுறைகளும் அருளப்பட்டன.
நோன்பின் வழிமுறைகள்,
நோன்பின் நோக்கம்,
நோன்புக் காலச் சட்டங்கள்,
கிப்லா (தொழுகையில் முன்னோக்கும் திசை) மாற்றப்பட்ட சட்டம்-
தான தர்மங்கள் தொடர்பான நெறிமுறைகள்,
ஹஜ் வழிபாடு, சட்டங்கள்
கணவன்- மனைவி பிரச்னை தொடர்பான சட்டங்கள்,
கொடுக்கல்- வாங்கலின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்.....
என ஏராளமான சட்டவிதிமுறைகளும் திருச்செய்திகளும் பொதிந்துள்ள அத்தியாயம் இது.
திருக்குர்ஆனின் மிக நீளமான வசனம் (282) இடம்பெற்றுள்ளதும் இதே அத்தியாயத்தில்தான்.
அந்த நீளமான வசனத்தில் விவரிக்கப்படுவது தொழுகையோ நோன்போ ஹஜ்ஜோ ஜகாத்தோ அல்ல.
மாறாக, கடன் கொடுக்கல்- வாங்கலின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அந்த வசனம் பேசுகிறது.
‘அல் பகரா’ அத்தியாயத்தை அரபு மொழியில் ஓதுவதுடன் நின்றுவிடாமல் அதன் மொழிபெயர்ப்பையும் விரிவுரையுடன் ஆழ்ந்து வாசிக்கவேண்டும்.
“உலக மக்களுக்கு வழிகாட்டும் தலைமைப் பொறுப்பு முன்பு யூதர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இனி அந்தப் பொறுப்பு இறுதி வேதம் வழங்கப்பட்ட முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படுகிறது” என்பதன் தெளிவான குறியீடுதான் கிப்லா மாற்றம் குறித்தான கட்டளை.
முந்தைய சமுதாயங்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் குறித்தும்,
மூஸா நபி- இஸ்ராயீல் சமுதாயம் தொடர்பான பல சுவையான, படிப்பினை மிக்க நிகழ்வுகளும் இந்த அத்தியாயத்தில் பொதிந்துள்ளன.
பகரா அத்தியாயத்தை ஓதிப் பின்பற்றுவோம்...
படைத்தவன் சட்டத்தை நிலைநாட்டுவோம்...!
🌹🌹🌹🌹🌹🌹🌹
______
இந்த வாரச் சிந்தனை
“அல்பகரா அத்தியாயம் ஓதப்படாத வீடு பாழடைந்த வீட்டிற்குச் சமமாகும்”- நபிமொழி
🕋🕋🕋🕋🕋🕋🕋
கருத்துகள்
கருத்துரையிடுக