பைத்துல்லாஹ்வும்_அஹ்லுல்_பைத்தும்
#ஒரு_ஹஜ்ஜு_வேளையில்_பைத்துல்லாஹ்வும்_அஹ்லுல்_பைத்தும்.
இளவரசர் ஹிஷாம் பின் அப்தில் மலிக், ஹஜ்ஜு செய்யச் சென்றார். கண்ணிய கஃபாவை தவாஃபு செய்த பின் புனித ஹஜருல் அஸ்வதை முத்தமிட போராடினார். கூட்ட நெரிசலால் அருகில் கூட செல்ல இயலாமல் களைத்து நிற்கிறார். அலை கடலென திரண்டிருந்த மக்கள் வெள்ளம், இளவரசர் ஹிஷாமை ஸஃபாவின் குன்று வரை அடித்துச் சென்றது. ஹிஷாமை சுற்றிலும் ஷாம் நாட்டு மக்கள் நின்று கொண்டிருந்தனர். திடீரென ஹாஜிகள் தவாஃபு செய்வதை நிறுத்தி ஒரு பெருந்தகைக்கு வழிவிடுகிறார்கள்.
அதோ.... கண்மணி நாயகத்தின் ﷺ குலவழித் தோன்றல் இமாம் ஜைனுல் ஆபிதீன் ரழியல்லாஹு அன்ஹு, மஸ்ஜிதுல் ஹராமில் நுழைகிறார்கள். தலை தாழ்த்தி, கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட புனித கஃபாவுக்கு மிக அருகாமையில் வந்தடைகிறார்கள்.ஹஜருல் அஸ்வதை உளமாற முத்தமிட்டு தமது தவாஃபை துவங்குகிறார்கள், மக்களும் அவர்களுக்கு அரணமைத்து தவாஃபை தொடர்கிறார்கள், மக்கள், அவர்களையே இமை கொட்டாமல் பார்த்து பரவசத்தில் திளைத்திருக்கிறார்கள். இமாமவர்களும் ஒவ்வொரு தவாஃபுக்கு பிறகும் ஹஜருல் அஸ்வதை மிகவும் நிதானத்துடன் அமைதியாக முத்தமிடுகிறார்கள். இந்நிகழ்வை கண்டு வியந்து போன ஷாம் நாட்டைச் சார்ந்த ஓர் அரசு விருந்தினர், மன்னர் ஹிஷாமிடம் இமாமை குறித்து விசாரிக்கிறார்.
உண்மையை கூறினால் தம்மை சுற்றியுள்ள ஷாம் நாட்டினர், ஆன்மிக பேரரசராம் இமாம் ஜைனுல் ஆபிதீன் ரழியல்லாஹு அன்ஹுவின் காலடியிலேயே கிடந்து, தம்மை உதறி விட்டு விடுவார்களோ என்று அஞ்சுகிறார் மன்னர் ஹிஷாம். இமாமவர்களை தனக்கு அறிமுகமில்லாததை போல் காட்டிக் கொள்கிறார்.
ஒற்றைவரியில் தமக்கு இமாமவர்களை யாரென்றே தெரியாது என கூறிவிட்டார்.
இதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த அரசரின் அவைப் புலவர் பெருங்கவி ஃபரஜ்தக், இளவரசருக்கு பாடம் புகட்ட முடிவெடுத்தார்.
ஆற்றொழுக்கு போல் ஊற்றெடுத்த புகழ்மாலையை, இமாமவர்களின் மேன்மை குறித்த புகழ்மழையை கவித்துளிகளாய் கொட்டினார்.
இதோ அண்ணலெம் பெருமானாரின் ﷺ அருமைப்பேரர் அண்ணல் ஜைனுல் ஆபிதீன் ரழியல்லாஹு அன்ஹுவை அழகிய முறையில் அறிமுகம் செய்கிறார்.
பட்டப்பகலின் வெட்டவெளிச்சத்தில் சூரியனை அறிமுகம் செய்தால் எப்படி இருக்கும் ? உண்மையில் இந்த கவிவரிகளால் ஃபரஜ்தக், தமக்கென ஒரு முகவரியை பெற்றுக் கொண்டார்.
புனித கஃபாவின் திருமுற்றத்தில்...., பூமானின் ﷺ மடி தவழ்ந்த புனிதர் ஹுஸைனாரின் கொடிமலரை கொலுவிலேற்றி பூரிக்கிறார்.
ஹிஷாமை
இமாமவர்களின் திருமுகத்திற்கு நேராக சைகையால் திருப்பியவாறு பாடத் துவங்குகிறார்.
இவர்களையா தெரியாது என்று கூறிவிட்டாய்?
"இவர்களின் காலடியை - பாத எட்டுகளை கூட அரபுப் பெருவெளி, நன்கறிந்து வைத்திருக்கிறது.
இதோ இந்த கஃபாவிடம் கேட்டுப்பார்! இவர்களின் பெருவாழ்வை தெளிவாக எடுத்துச் சொல்லும், ஹரம் என்னும் புண்ணிய பூமி மட்டுமல்ல உலகின் மூலை முடுக்கெல்லாம் இவர்களை போற்றுகின்றன.
அல்லாஹ்வின் அடியார்களிலேயே மிகச் சிறந்த, உயர்வும் மேன்மையும் நிறைந்த அண்ணலெம் பெருமானாரின் ﷺ அருள்நிறை பேரரல்லவா இவர்கள் ?!
உள்ளச்சமும் உளத்தூய்மையும் நிறைந்த பரிசுத்த பரம்பரையின் குணக் குன்றல்லவா இவர்கள்?!
சுவனமே கண்டு இரசிக்கும் பண்பு நிறை ஃபாத்திமாவின் குலக்கொழுந்தையா உனக்கு தெரியவில்லை என்கிறாய்?
நன்றாக தெரிந்து வைத்துக் கொள்!
நபித்துவத்திற்கு நிறைவளித்த இவர்களின் பாட்டனார் முத்து நபி முஹம்மது முஸ்தஃபா ﷺ அவர்களால் தான் நபிமார்கள் முத்திரையிடப்பட்டார்கள்.
நீர் தெரியாததை போல் நடிக்கும் இந்த சீமானை அரபிகளும் அஜமிகளும் சிரசேற்றி மகிழ்கின்றனர். எனவே உமது புறக்கணிப்பு, அவர்களை எதுவும் செய்து விடாது.
இல்லார்க்கு அள்ளிக் கொடுத்த வள்ளல் நபியின் ﷺ வாரிசல்லவா இவர்கள் ?!கொடுத்துச் சிவந்த இவர்களின் கைகள், பேருதவியின் பெட்டகங்கள். நாடி வந்தவர்களை வெறுமனே அனுப்பும் அவல நிலை, இந்த கைகளுக்கு ஏற்பட்டதே இல்லை.
இவர்கள், தயாளத்தின்
தலைவாசல்.
தம் அழகிய பண்புகளால் மென்மைக்கு மேன்மை வழங்கி மெருகூட்டிய இவர்களுக்கு, உடலழகும் குண அழகும் மென்மேலும் அணி சேர்க்கின்றன.
வரியவர்களின் தேவையறிந்து அவர்களுக்கான பொருட்களை தம் முதுகில் சுமந்து வழங்கி மகிழ்பவர்கள்,
தம் வாழ்நாளில் கலிமாவை தவிர வேறெங்கும் #இல்லை என்ற சொல்லை சொல்லாத கொடைவள்ளல்.
கலிமாவில் மட்டும் لا லா - இல்லை என்ற சொல் வந்திருக்காவிட்டால் இல்லை என்ற பேச்சுக்கே இவர்களிடம் இடமிருந்திருக்காது.
குணத்தில் உயர்ந்த குறைஷிகள், இவர்களை பார்க்கும் பொழுது ....
"உயர் பண்புகளின் ஊற்றான இவர்களிடம் தான் நற்குணங்கள், தமது நிறைவை கண்டு கொண்டன" என்று வாக்குமூலம் தருகிறார்கள்.
இவர்கள், வெட்கத்தால் தலை குனிந்திருக்கும் நேரத்தில் கூட நேருக்கு நேராக இவர்களை பார்க்கவிடாமல் இவர்களின் கம்பீரம், நம் கண்களை தடுத்து விடுகிறது.
நாணமும் கம்பீரமும் ஒருசேர பொதிந்த பொன்மனச் செம்மல், இவர்கள் புன்முறுவல் பூக்கும் பொழுது தான் எவருக்கும் இவர்களிடம் உரையாட துணிவு வரும்.
காலங்கள் தோன்றுவதற்கு முன்பே அல்லாஹு தஆலா ﷻ , இவர்களை சிறப்புப் படுத்தி விட்டான், இவர்களின் உயர்வையும் கீர்த்தியையும் #லவ்ஹுல்_மஹ்ஃபூள் எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் #கலம் எனும் எழுது கோல், என்றோ எழுதி முடித்து விட்டது.
இவர்கள் மற்றும் இவர்களின் குடும்பத்தினருடைய (ஆன்மிக) உதவியை பெறாமல் யார் தான் இவ்வுலகில் வாழ இயலும்?
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவர், இவர்களின் பாட்டனாருக்கும் ﷺ கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும்.
உலகுக்கு இஸ்லாம் கிடைத்ததே இவர்களின் வீட்டிலிருந்து தானே!
இவர்களின் பாட்டனாரின் ﷺ முன்னிலையில் தானே அனைத்து நபிமார்களும் பணிந்து நின்றார்கள். அவர்களின் ﷺ உம்மத்துக்கு முன் தானே ஏனைய சமூகங்கள் பணிந்து நிற்கின்றன.
நம் கண்மணி முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ﷺ எனும் அருள் மரத்தின் இளம் தளிரல்லவா இவர்கள்?!
(ஸெய்யிதுனா அலீ, ஸெய்யித்துனா ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் மகனான இமாம் ஹுஸைன் எனும்) மிகவும் தூய விளை நிலத்திலல்லவா இந்த தளிர், வளர்ந்து செழித்தது ?!
சூரியனை கண்டு இரவின் கும்மிருட்டு, ஓடி ஒளிந்து கொள்வதை போல் இவர்களின் ஒளிமுகம், காரிருள் திரையை கிழித்து விடுகிறது.
இவர்களின் குடும்பத்தினரை அன்பு கொள்வது, தீனாகும்.
அவர்கள் மீது குரோதமும் காழ்ப்புணர்வும் கொள்வது, குஃப்ராகும்.
அவர்களுடன் நெருங்கி வாழ்வது தான் நமது ஈடேற்றம், நேர்வழியின் இலக்கை வென்றிட அவர்கள் தான் நமக்கு பிடிமானம்.
அல்லாஹ்வை குறித்து பேசிய பின் இவர்களின் தூய குடும்பத்தினர் குறித்த பேச்சுதான் எங்கும் முன்னணியில் நிற்கும்.
எந்தவொரு நல்ல சபையும் இவர்களின் தூய குடும்பத்தினர் மீது ஸலவாத் ஓதி தான் துவக்கமும் நிறைவும் பெறும்.
நீர் தக்வாவுடைய நல்லோர்களை தேடிப்பார்த்தால் அந்நல்லோரை வழிநடத்தும் தலைவர்களாக இவர்களின் குடும்பத்தினரை தான் பெற்றுக் கொள்வாய்.
உலகில் சிறந்தவர்கள் யார்? என்று நீர் எவரிடம் வினவினாலும் இவர்களின் குடும்பத்தினரை தான் அவர்கள் அறிமுகப் படுத்துவார்கள்.
உலகின் வள்ளல் பெருமக்கள் எவ்வளவுதான் அள்ளிக் கொடுத்தாலும் அவர்களெல்லாம், இவர்களின்
கொடைத்தன்மையோடு போட்டி போட முடியாது.
இவர்கள், வரண்ட மண்ணை செழிக்க வைக்கும் பெருமழைக்கு ஒப்பானவர்கள். எனினும் வீரத்தில் குகைச்சிங்கங்களை போன்வர்கள், மார்க்க விரோதிகளை எதிர்த்து இவர்கள் தொடுக்கும் தாக்குதல், கடுமையாக இருக்கும்.
வறுமையோ ஏழ்மையோ அவர்களின் கைகளை கட்டிப்போட்டதில்லை தமது செழிப்பான நாட்களிலும் இல்லாத நாட்களிலும் ஒரே போல அள்ளிக் கொடுப்பவர்கள்.
இவர்கள் மீதான நேசம், துன்பங்களையும் துயரங்களையும் அகற்றி, பேருதவியையும் பெரும் நன்மையையும் வாரி வழங்கும்............
ஆனந்தமும் ஆவேசமும் ததும்பும் ஃபரஜ்தக் ரஹ்மதுல்லாஹி அலைஹியின் கவிதை, இப்படியே நீண்டு கொண்டே போகிறது......
ஹாஜிகள், பரவசக் கடலில் தத்தளிக்கிறார்கள்.
ஆனால் இமாமவர்களை அலட்சியப்படுத்திட கனாக் கண்ட ஹிஷாம், செய்வதறியாது உழன்றார்.
உலக முஸ்லிம்கள் ஒன்று கூடி பார்த்து கொண்டிருக்கும் போது ஃபரஜ்தக் செய்த இந்த செயல், ஹிஷாமை ஆத்திரமூட்டியது.
ஹிஷாம், ஃபரஜ்தக்கை சிறையலடைத்தார்.
ஆனால் தம் பாட்டனாரின் மீதுள்ள காதலை கவிதையாய் வெளிக்கொணர்ந்த ஃபரஜ்தக்கிற்கு 10,000 பொற்காசுகளை அன்பளிப்பாக வழங்க இமாமவர்கள் முடிவு செய்தார்கள்.
ஃபரஜ்தக் எங்கே? என இமாமவர்கள்,
தம் சீடர்களிடம் விசாரித்தார்கள், சீடர்கள், (சிறையிலடைக்கப்பட்ட) நடப்பை விவரித்தார்கள்.
இமாமவர்கள், மிகவும் வருந்தினார்கள். தம் பாட்டனாரின் குடும்பத்தை புகழ்ந்ததற்காக துயர் சுமக்கும்
ஃபரஜ்தக்கிற்கு தான் அணிந்திருக்கும் ஆடையை தவிர தம் பொருட்கள் அனைத்தையும் அன்பளிப்பாக கொடுத்து விடுமாறு தம் சீடரை பணித்தார்கள்.
சீடர் அன்பளிப்புகளோடு ஃபரஜ்தக்கிடம் வந்தார்.
ஃபரஜ்தக் கதறி அழுதார், நாளை மஹ்ஷரில் இமாமவர்கள், தம் பாட்டனாரிடம் ﷺ எனக்காக ஷஃபாஅத் செய் (து பரிந்து பேசு) வார்கள் என்பதற்காகத் தான் கவிபாடினேன்.
உண்மையில் வேறெதையும் நான் நாடவில்லை எனவே இவற்றை இமாமவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள் என வந்தவரிடம் வேண்டினார்.
அன்பளிப்பு, இமாமவர்களிடம் மீண்டது.
இப்பொழுது இமாமவர்கள் அழுகிறார்கள்.
உண்மையில் ஃபரஜ்தக், நபியின் ﷺ மீதும் அஹ்லு பைத்தின் மீதுமுள்ள காதலில் தான் கவிபாடினார் என்பதை நான் அறிவேன்.
إن شاء الله تعالى
கட்டாயம் என்பாட்டனாரிடம் ﷺ அவருக்காக பரிந்துரைப்பேன். எனினும் அஹ்லு பைத்தினர், போர் கவசம் அணிந்தால்.... அல்லாஹ் ﷻ வின் கட்டளை வராமல் போர்களத்திலிருந்து பின்வாங்க மாட்டார்கள். அதே போல அஹ்லு பைத்தினர், கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறவும் மாட்டார்கள். எனவே அன்பளிப்பை ஃபரஜ்தக்கிடமே கொடுத்துவிடுங்கள் என இமாமவர்கள், சீடரிடம் கூறினார்கள்.
சீடர், ஃபரஜ்தக்கிடம் நடந்தவற்றை கூறி அன்பளிப்பை ஒப்படைத்தார்.
இவற்றையெல்லாம் பார்த்த மன்னர் ஹிஷாமை ஒரு வித பயம், தொற்றிக் கொண்டது.
ஹிஷாமும் ஃபரஜ்தக் கிற்கு ஒரு இலட்சம் பொற்காசுகள் வழங்கி விடுதலை செய்தார்.
இமாம் ஜைனுல் ஆபிதீன் ரழியல்லாஹு அன்ஹுவின் பரக்கத்தில் தான் என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என பிற்காலத்தில் ஃபரஜ்தக் கூறினார்.
ஃபரஜ்தக் ரஹ்மதுல்லாஹி அலைஹியின் மேற்கண்ட கவிதை
ميمية الفرزدق
"மீமிய்யத்துல் ஃபரஜ்தக்" என்ற பெயரில் அறியப்படுகிறது.
மேற்கண்ட நிகழ்வை விவரித்த அரபுலக அறிஞர்களின் பல காணொளிகளை youtube ல் காணலாம்.
காரீ ராஷிதுல் அஃபாஸியின் அழகிய குரலில் மேற்கூறிய கவிதையை செவியுறுவதற்கான இணைப்பு 👇இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/XN5p4EWnOEk
நல்துஆவை நாடி: ஃபகீர் A.M.முஹம்மது ஸுல்தான் அன்வாரீ பாகவீ, காயல்பட்டினம்.
கருத்துகள்
கருத்துரையிடுக