*உலகமெலாம் அழிந்துபோன மறுமை நாளிலே
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*உலகமெலாம் அழிந்துபோன மறுமை நாளிலே - பிறந்த*
*உயிர்களெல்லாம் ஒன்றுகூடும் மஹ்ஷர் வெளியிலே*
*என்ன நடக்குமென்று அங்கு பதறும் போதிலே* - *இறைவன்*
*தீர்ப்பை எதிர் பார்த்து* *உள்ளம் மருகும் நிலையிலே*
*ஸஃபாஅத்துச் செய்யுங்கள் யாரஸூலல்லாஹ் -* *என்மேலே*
*தனிக்கருணை காட்டுங்கள் யாஹபீபல்லாஹ் !*
*இபாதத்தை என்றும் நான் நம்பவில்லை - அதை*
*இறைவன் கபூல் செய்வானா அறியவில்லை - தங்கள்*
*ஷஃபாஅத்து ஏற்கப்படும் ஐயமில்லை - அங்கு*
*தாங்களின்றி எமக்கு வேறு கதியுமில்லை.*
(ஷஃபாஅத்து)
*குறையுடனே செய்த அமல் கரைசேர்க்காது - மீஸான்*
*தராசிலே நிறுக்கும்போது எடை இருக்காது*
*பழைய துணி போல்இறைவன் முகத்தில் வீசுவான் - பிறர்*
*பார்க்கச் செய்த நற்செயல்கள் கைகொடுக்காது.*
(ஷஃபாஅத்து)
*நபிமாரும் ஒதுங்கி நிற்கும் அந்த வேளையில் - மக்கள்*
*நம்பிவந்து காக்கவேண்டும் என்று வேண்டுவார்*
*ரஹ்மத்துன்லில் ஆலமீனைத் தேடி ஓடுங்கள் - அவர்கள்*
*ஷஃபாஅத்தொன்றே மீட்சிதரும் என்று கூறுவார்.*
(ஷஃபாஅத்து)
*அன்னையில்லை தந்தையில்லை பிள்ளையில்லையே - சொந்த*
*அண்ணனில்லை தம்பியில்லை மனைவியில்லையே*
*ஒருவர் பார்த்து ஒருவர் அங்கு விரண்டு ஓடுவார் - அன்று*
*உதவி செய்ய தாங்களின்றி ஒருவரில்லையே.*
(ஷஃபாஅத்து)
*சஜ்தாவில் விழுந்த தலை நிமிர்ந்திருக்காது - இறைவன்*
*சம்மதத்தை வாங்கும் வரை எழுந்திருக்காது*
*உம்மத்துகள் அனைவரையும் சொர்க்க வீட்டிலே -* *கொண்டு*
*சேர்க்கும் வரை மாநபிக்கு மனம்பொருக்காது.*
(ஷஃபாஅத்து)
*நரகவாதி என்றிறைவன் தீர்ப்புச் செய்தபின் - இறைவன்*
*நாட்டம் எழுதும் பேனா மையும் காய்ந்து போனபின்*
*சுவன வாதி என்று பெயர் மாற்றம் பெறுவது - நபிக்குச்*
*சொந்தமான ஷஃபாஅத்தின் மேன்மையல்லவா?*
(ஷஃபாஅத்து)
*பாவி என்று தெரிந்தபின்னும் அரவணைத்திடும்*
*தங்கள் பாசம் மனிதப் பாசமல்ல புனிதப் பாசமோ*
*தாங்கள் கேட்க இறைவன் கொடுக்க என்ன நாடகம் - இது*
*மனிதர் மீது இருவர்காட்டும் கருணைக் காவியம்.*
(ஷஃபாஅத்து)
*ஆதம் நபி யிலிருந்து உலக முடிவு நாள்வரை - தங்கள்*
*அடைக்கலத்தைத் தேடும் மாந்தர் எத்தனை கோடியோ*
*பாவி என்னை யாரஸூலே மறந்திட வேண்டாம் - தங்கள்*
*பாதத்தூசி யான இவனைத் துரத்திட வேண்டாம்.*
(ஷஃபாஅத்து)
*சஹாபாக்கள் அனைவருமே ஏங்கி நின்றார்கள் - தங்கள்*
*ஷஃபாஅத்தை தொழுது வணங்கிக் கேட்டுவந்தார்கள்*
*இமாம்களும் வலிமார்களும் வேண்டி நின்றார்கள் - இனிய*
*சலவாத்தை அதிகமதிகம் ஓதிவந்தார்கள்.*
(ஷஃபாஅத்து)
🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸
பாடலாசிரியர் : *கலீஃபா ஆலிம் புலவர் S.ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ அவர்கள்*
மறைஞானப்பேழை "ஆன்மிக" மாத இதழ் ஆசிரியர்.
குரல் : *தேரிழந்தூர் தாஜுத்தீன் பைஜீ அவர்கள்*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
கருத்துகள்
கருத்துரையிடுக