கல்விக்கடல் இமாம் கஜ்ஜாலி

Sulthanul Arifeen Anwari:
கல்விக் கடல்  என்றும், ஆன்மீக ஊற்று என்றும் நாமெல்லாம் கொண்டாடும் ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் ஒரு தாயின் பேணுதலான வளர்ப்பில் உருவானவர்கள்.

இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் தாயாருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் முஹம்மத் அல்கஸ்ஸாலி- இன்னொருவர் அஹ்மத் அல் கஸ்ஸாலி. இவர்களின் தாயார் இவ்விருவரையும் மிகச்சிறந்த அறிஞர்களாகவும் வணக்கசாலிக  ளாகவும் உருவாக்கினார்கள்.

இதில் முஹம்மத் அல்கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் மிகப்பெரும் அங்கீகாரம் பெற்று மக்களுக்கு இமாமத் செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டார்கள். இவர் சகோதரர் அஹ்மத் அல் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் மாபெரும் வணக்கசாலி என்றாலும் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்களுக்குப் பின்னால் தொழமாட்டார். இது அவர்களுக்குப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து அவர்களின் தாயாரிடம் முறையிடுகிறார்கள். அவர்களின் தாயாரும் அஹ்மத் அவர்களை அழைத்து நீ உன் சகோதரருக்குப் பின்னால் தொழவேண்டுமென கண்டிப்புடன் கூறவே அதை ஏற்றுக் கொள்கின்றார்.

ஒரு நாள் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்களுக்குப் பின் தக்பீர் கட்டித் தொழ ஆரம்பித்தார். இரண்டு இரக்கஅத் தொழுகையில் முதல் இரக்கஅத்தை இமாம் அவர்கள் நிறைவு செய்தபோது அவர்களின் சகோதரர்  தக்பீரை நிறுத்தி விட்டு இடையிலேயே சென்றுவிட்டார். இது இமாம் கஸ்ஸாலிக்கு இன்னும் மிகுதியான வேதனையளித்தது.

மீண்டும் அவர்களின் தாயாரிடம் முறையிட்டபோது, அவ்விருவரையும் அழைத்து அவர்களின் தாயார் விசாரித்தார்கள்.
அப்போது  இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் சகோதரர் "தாயார் அவர்களே! என் சகோதரர் முதல் இரக்கஅத்தில் இறைச் சிந்தனையுடன் தொழுதார். இரண்டாவது இரக்கஅத்தில் அல்லாஹ்வின் சிந்தனை அவருக்கு தவறிவிட்டது. இதை நான் கஷ்பின் மூலம் தெரிந்து கொண்டேன். எனவே நான் தக்பீரை நிறுத்தி விட்டுத் தனியாக தொழுதேன்" என்று கூறினார்கள்.

இது குறித்து இமாம் கஸ்ஸாலி றஹ்மத்துல்லாஹி அவர்களிடம் விசாரித்தபோது, மறுக்காமல் உண்மைதான் என ஒப்புக்கொண்டார்கள். நான் தொழுகைக்கு முன் நிபாஸ் எனும் மார்க்கச் சட்டம் குறித்து கிதாபை ஆய்வு செய்து கொண்டிருந்தேன். இந்நிலையில் தொழுகையின் நேரம் வரவே கிதாபை மூடி வைத்துத் தொழ வந்து விட்டேன். எனவே தான் இரண்டாவது இரக்கஅத்தில் நிபாஸ் பற்றிய சட்டங்களில் கவனம் வந்து விட்டது என்றார்கள்.
அப்போது அவர்களின் தாயார், நீங்கள் இருவரும் தவறு செய்தவர்கள். இமாம் கஸ்ஸாலி றஹ்மத்துல்லாஹி அவர்களை நோக்கி அல்லாஹ்வின் சிந்தனை தொழுகையில் தப்பிப்போக என்ன காரணத்தை நீ சொன்னாலும் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்கள்.
இமாம் அஹ்மத் ரஹ்மத்துல்லாஹி அவர்களை நோக்கி நீ முதல் இரக்கஅத்தில் அல்லாஹ் வின் சிந்தனையுடன் தொழுதாய். ஆனால் இரண்டாவது இரக்கஅத்தில் உன் சகோதர ரின் குறையின் பக்கம் உன் கவனத்தைத் திருப்பி விட்டாய் எனவே நீங்கள் இருவரும் நான் விரும்பிய பிள்ளைகளாக இல்லை என்று எச்சரித்தார்கள்.

இதையடுத்து சகோதரர்கள் இருவரும்
தமது தாயாரிடம் மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமன்றி தமது சகோதர உறவையும் பலப்படுத்திக் கொண்டனர்.

நூல்:-
குதுபாத் துல்பிகார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?