முஸ்லிம்களின் வீழ்ச்சியும் எழுச்சியும்
*தளர்ந்தோம் | வீழ்ந்தோம் | எழுவோம்*
*****************************************
கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை ஆயிரம் ஆண்டுகளாக உலகின் தலைச்சிறந்தச்சமூகமாக தலைமைச்சமூகமாக விளங்கிய முஸ்லிம் சமூகம், ஒற்றை நூற்றாண்டில் வீழ்ந்திருக்க சாத்தியமே இல்லை. படிப்படியாய் தளர்ந்தே வீழ்ந்திருக்க வேண்டும்.
உண்மையில் நாம் இனங்காண வேண்டியது, எங்கே வீழ்ந்தோம்? என்பதைவிட, எதனால் தளர்ந்தோம்? என்பதைத்தான்.
கி.பி 13-ஆம் நூற்றாண்டு முதல் முஸ்லிம் சமூகம் *தன்னை மட்டுமே பாதுகாத்துக்கொள்வது மற்றும் சமூக கட்டமைப்புகளில் பங்குபெறுவதை குறைத்துக்கொள்வது என தனது எல்லையை குறுகலாக்கியதுதான், தளர்வு தொடங்கிய இடம்.*
எந்த ஒன்றை நாம் கவனிக்கவில்லையோ, அந்த ஒன்று நம்மைவிட்டு மெல்ல விலகிவிடும். வெகுவிரைவில் நம்மை முழுவதுமாக மறந்துவிடும்.
அதனால்தான் இன்றைய உலகம் நம் முஸ்லிம் சமூகத்தை மொத்தமுமாக மறந்து புறந்தள்ளி வாழ்ந்துகொண்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் முஸ்லிம் சமூகமே தன் வரலாற்றை மறந்து வாழும் நிலைக்கு உள்ளானது.
*தன் வரலாற்றை மறந்த எந்த சமூகமும் வளர்வது அல்ல, வாழ்வது கூட கடினம்தான்.*
மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டு, சிதறியடிக்கப்பட்டு இறுதியில் மிஞ்சியது, சோர்ந்து முடங்கிக்கிடப்பது மட்டுந்தான் என்றானது.
சட்டென்று விழிப்புக்கொண்டு தன்நிலை உணர்ந்த போது, காலங்கள் கடந்திருந்தன.
நடந்தேறிய நிழ்வுகளில் பாடம் படிக்காமல், அவசர அவசரமாய், *உணர்ச்சிவசப்பட்டு செயலாற்றியதன்* விளைவு, நம் உம்மத்தை பற்றிய தவறான புரிதலையே மற்ற சமூகங்களின் மனதில் ஆழ பதியவைத்தது.
மேலும் நம்மிடமிருந்து இன்னும் விலகி இருக்கவே அவர்களை தூண்டியது.
முட்டிமோதி நம் பாரம்பரியத்தை கண்டெடுத்து வெளியில் சொன்னாலும், *அதெல்லாம் பழைய கதை, இன்றைய சமகால சிக்கல்களுக்கு உங்கள் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன?* என்ற கேள்விக்கு, நம்மிடம் வலுவான பதில் இல்லை.
ஓர் உன்னத ஆட்சியை உலகிற்க்கு தந்த சமூகம் இன்று ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எதனைக்கொண்டு எழுந்து வருவது.?
எதனைசெய்து இழந்ததை மீட்டெடுப்பது.?
கேள்வி உருவாகும் இடம்தான், பதில் புதைந்திருக்கும் இடம். அதை நாம்தான் சற்று முயற்சி செய்து வெளிக்கொணர வேண்டும்.
நமக்கான வழி, "எதனால் தளர்ந்தோமோ அதனாலேயேதான் வளர வேண்டும்" என்பதுதான்.
கூடவே சில அடிப்படைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
10. பொறுமையும் நிதானமும் வாழ்வின் அங்கமாக்கி, எப்பேற்ப்பட்ட சிக்கலுக்கும் உணர்ச்சிவசப்படாமல், அறிவு ரீதியான அணுகுமுறையின் மூலம் தீர்வுகாண முயலவேண்டும்.
9. நம் குடும்பத்தார் நம்மை சிறந்தவர் என்று அங்கீகரிக்கும் வண்ணம் நமது குடும்ப அங்கத்தினரை கையாளும்விதம் இஸ்லாத்தின் அடிப்படையில் மெருகேற வேண்டும்.
8. "இவர் முஸ்லிம்தான்....., ஆனாலும் அந்த அமைப்பை சேர்ந்தவர்", என்று எண்ணாமல், *இவர் எந்த அமைப்பை சேர்ந்தவராய் இருந்தாலும்,முதலில் ஒரு முஸ்லிம், என் சகோதரர்* என்ற உயர்ந்த புரிதலுக்குள் வரவேண்டும்.
7. தனிநபரையும் அவர்தம் குறைகளையையும் பிரித்து கையாளும் திறமையும், சமூகஉறவுகளை முழுவதுமாக துண்டிக்காமலும், ஒரேடியாக நெருங்கிவிடாமலும், நடுநிலையோடு பழகும் பக்குவமும் பெற வேண்டும்.
6. ஒரு தாய்-தந்தை வழி பிள்ளைகள்தான் இன்று உலகம் முழுவதும் பரவுயுள்ளனர் என்கின்ற உலக சகோதரத்துவ உண்மையை உணர வேண்டும். குறைந்தபட்சம் உள்ளூர் சகோதரத்துவமாவது உணர வேண்டும்.
5. பலமாறுபட்ட சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம் சமூகம், *இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரண்படாமல்* மற்ற சமூக மக்களோடு இயல்பாக இணக்கமாக பழகக்கூடிய பரந்தமனப்பான்மை இன்னும் அதிகரிக்க வேண்டும்.
4. பிற சமுதாயத்தவரை முஸ்லிமல்லாதவர்கள் என்று அடையாளப்படுத்தாமல், அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அங்கீகரித்து, நம் அழகிய செயல்கள் மூலம் அவர்களை ஈர்த்து, இஸ்லாத்தின் இனிமையை அவர்கள் மனதில் பதியவைக்க வேண்டும்.
3. கல்வி, பெண்கள் முன்னேற்றம், விவசாயம், அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம், குடிநீர், பாதுகாப்பு, இயற்கை வாழ்வியல், அடிப்படை சுகாதாரம், வியாபாரம், தற்சார்பு பொருளாதாரம், சேவை, மனநலம், உடல்நலம் என பலதரப்பட்ட தளங்களில் அனைத்து சமூக மக்களின் மேன்மைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் குழுக்கள் அமைத்து நீண்ட ஒரு திட்டத்தை கொண்டு செயலாற்ற வேண்டும்.
2. சீற்றத்தோடு பேசிவிட்டு அடுத்தவர்கள் செய்வார்கள் என ஒதுங்கிக்கொள்ள ஒரு கோடிபேர் இங்கு தயார். ஆனால் *ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதற்க்கும் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்க்கும் ஒருசிலரே முயற்சிக்கின்றனர்.* அந்த ஒருசிலரில் நாமும், நமது பங்களிப்பும், அதை ஒரு தொடர் செயலாக்கிட அடுத்து தலைமுறையை பயிற்றுவித்தலும் இடம்பெற வேண்டும்.
1. நமது செயல்கள், அளவிலும் பயன்பாட்டிலும் சிறியதோ! பெரியதோ! அதைப்பற்றி கவலைக் கொள்ளாமல், *உன்னதமான இறைப்பொருத்தத்தை மட்டுமே இதயத்தில் வைத்து, நமது ஒவ்வொரு செயலின் விளைவும் கியாமத் நாள்வரை, உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் பயன்படும் வண்ணம் உருவெடுக்க வேண்டும்* என்ற உயர்வான இலக்கோடு காலம் முழுவதும் பயணிக்க வேண்டும்.
இஸ்லாமியர்களின் விசாலமான பார்வையும், ஆழ்ந்த சிந்தனையும், தன்னிகரற்ற தொடர்ச்சியான செயலும் ஒவ்வொருவர் உள்ளத்தையும் தொடவேண்டும்
வாழ்ந்தால் ஒரு இஸ்லாமியரைப்போல் வாழ வேண்டும் என்ற உறுதி அனைவர் மனதிலும் உதிக்கவேண்டும்.
அழகிய முன்மாதிரியின்(ஸல்) செயல்கள் உலகின் அடிப்படை அம்சமாகிட வேண்டும்.
புதியதொரு பொற்காலம் பிறக்க வேண்டும்.
அது இறுதிவரை நின்று நிலைபெற வேண்டும்.
ஆமீன்.
அப்துர்ரஹ்மான்
நெறியாளர்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
சென்னை 1
கருத்துகள்
கருத்துரையிடுக